உலகப் புத்தக தினம்

புத்தகம் வாசித்தலை பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, கல்விசார்ந்த வாசிப்பு, இன்னொன்று இதர வாசிப்பு. பள்ளியிலும் கல்லூரியிலும் ஒருவர் பாடப்புத்தகங்களை படிப்பதற்கு முக்கிய காரணம் படித்துப்பட்டம் பெறவேண்டும் என்பதே. பாடப்புத்தகங்கள் படிக்கின்றவர் அல்லது படித்தவர், இதர புத்தகங்களையும் விரும்பிப் படிக்கிறவராக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களில் பலரைப்போன்று நானும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சார்ந்த மேற்படிப்புக்காக நிறைய புத்தகங்களை படித்தேன். ஆயினும் எனக்கு புத்தகம் படிப்பதில் அதிக ஈடுபாடு இல்லை என்பதுதான் உண்மை. இனி வரப்போகும் பக்கங்களில் நான் குறிப்புடுவது கல்விசாராத பொதுவான புத்தகங்களைத்தான். இதில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மற்றும் நகைச்சுவையும் அடங்கும்.
உள்ளதைச்சொல்லவேண்டுமென்றால், நான் என்னுடைய அறுபதாவது வயதுவரையில் பாடுவது மற்றும் நகைச்சுவையாகப்பேசுவது என்ற இரண்டு விஷயங்களில்தான் என்னுடைய கவனத்தை அதிக அளவில், உற்சாகத்துடன் செலுத்திவந்தேன். இந்த என் பழக்கத்திற்கு மாறாக, என்னுடைய அறுபத்தியொன்றாவது வயதில் நான் என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டேன். இந்தப்புத்தகம் வெளியிட நான் வேறு ஒரு புத்தகத்தையும் படிக்கவில்லை. ஏனெனில், என் அனுபவத்தில் கண்ட, உணர்ந்த அனுபவங்களையும் மற்றும் நான் கொண்டுள்ள சில தீவிரமான நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளைத்தான் இந்த எனது முதல் புத்தகத்தில் எழுதினேன்.
என்னுடைய அறுபத்தியொன்று வயதுக்குப்பிறகுதான், நான் வேறு புத்தகங்களை வாங்கி படித்துவருகிறேன். இதற்கு முக்கிய ஒரு காரணத்தை நீங்களே புரிந்துகொள்ள முடியும். பதவி ஓய்வு பெற்றபின் எனக்கு நேரம் அதிகம் கிடைத்துள்ளது. எனவே நான் நேரத்தை கடத்த ஏதாவது சில காரியங்கள் செய்துதான் ஆகவேண்டும். தற்போது நான் புத்தகங்கள் வாசித்துவருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இடையில் நான் இதர புத்தகங்கள் வாங்கி படிக்காமல் இருந்ததற்கு இன்னொரு காரணம், நான் என் மனதில் தோன்றிய எண்ணங்களை கலப்படமின்றி வெளிக்கொணர்ந்து, வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். மற்றவர்களின் புத்தகங்களைப்படித்தால், எங்கே என் கற்பனைமனம் மற்றவர்களின் கருத்துக்களையும் அவர்களின் எழுத்து நடையையும் என்னுடைய சுயமான கற்பனைத்திறனை கலப்படம் செய்துவிடுமோ என்கிற சந்தேகமும் பயமும்தான். தற்போது நான் ஓரளவுக்கு என்னுடைய கலப்படமற்ற சுயமான கற்பனைகள் பலவற்றை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஓரளவுக்கு படைத்துவைத்துவிட்டேன். எனவேதான் கடந்த ஒரு வருடமாக பிற ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள், கதைகள், நாவல்கள் மற்றும் நகைச்சுவை புத்தகங்களை வாங்கி படித்துவருகிறேன்.
மிகவும் முன்னேற்றமடைந்த இந்த காலத்தில் புத்தகங்கள் வாங்கிப் படிப்பது என்பது மிகவும் குறைந்துவருகிறது, குறிப்பாக இளைஞர்கள் சமுதாயத்தில். இளைஞர்கள் கல்விசாராத புத்தகங்களை படிப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை கணினியிலேயே மென்நகல் வடிவில்தான் அதிகம் படிக்கின்றனர். அமேசான் நிறுவனத்தின் கிண்டில் (kindle) என்கிற கைப்பிடி அளவேயுள்ள சிறிய டிஜிட்டல் புத்தகம் படிக்க உதவும் சாதனம் மூலம் இந்தக்காலத்து இளைஞர்கள் புத்தகங்களைப் படிக்கின்றனர். புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாக புரட்டி படிக்கும் இன்பம் அலாதியானது தான். எனவேதான் படிக்கும் பழக்கம் உள்ள நடுத்தரவயதில் உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் இன்னமும் புத்தகங்களை கடினநகலில் வாங்கித்தான் வாசிக்கின்றனர், என்னையும் சேர்த்துத்தான்.
புத்தகங்களை மென் நகலில் படிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள், புத்தக விலையில் சேமிப்பு, வீட்டில் புத்தகங்களை வைக்கும் அலமாரிக்கு வேலை இல்லை, அதிகமான அளவில் மென் நகலில் புத்தகங்கள் சேகரித்து அல்லது வாங்கி வைத்துக்கொள்ளமுடியும். பிறருக்கு புத்தகங்கள் கொடுத்து அவற்றை திரும்பபெறமுடியாத சூழ்நிலை கிடையாது.
புத்தகங்களை கடின நகலில் வாங்கிப்படிப்பதால் உள்ள நன்மைகள், படிப்பதில் கண்களுக்கு அதிகம் சிரமம் இல்லாதிருத்தல், புத்தகத்தைக் கைகளில் ஏந்தியவண்ணம் ஒவ்வொரு பக்கமாக ரசித்து படித்தல், நூலகங்களுக்குச்சென்று புத்தகங்கள் படிக்கும் அனுபவம், புத்தகங்கள் கடினநகல் புத்தகங்கள் வீட்டில் அல்லது ஒருவர் அறையின் கண் எதிரிலேயே இருப்பதால், புத்தகத்தை முழுவதுமாக படிக்கும் வாய்ப்பு, புத்தக கண்காட்சிகளுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கி படிக்கும் அனுபவம் என்பது போன்ற சில காரணங்கள்.
ஒரு விதத்தில் பார்க்கையில், புத்தகத்தை கடினநகலில் வாங்கி படிப்பதுதான் மொத்தத்தில் பார்க்கையில் அதிக நன்மைதரும் என்று எனக்குத்தோன்றுகிறது. நாம் வெளியில் கடைகளுக்குச்சென்றால் நமக்கு வேண்டிய பல பொருட்களை, ஆடைகளாக இருக்கட்டும், வீடு உபயோக பொருட்களாக இருக்கட்டும், உண்ணும் பதார்த்தங்களாக இருக்கட்டும் மென்நகலில் வாங்கமுடியாது. நிச்சயமாக இவைகளை கடினநகலில் வாங்கினால் தான் அந்தந்த பொருளின் பயன் நமக்கு கிட்டும். அந்த வகையில் ஒருவர் மென்நகலில் வாங்கும் புத்தகங்களைவிட கடினநகலில் வாங்கும் புத்தகங்களைத்தான் அதிகமாகவும், வேகமாகவும் படிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இது என்னுடைய கருத்துதானே தவிர திணிப்பு அல்ல.

இன்றுள்ள சூழ்நிலையில், குறிப்பாக சமூக ஊடகங்கள் பலருடைய வாழ்க்கையை ஊடுருவிய நிலையில், ஆன்லைன் சாட்டிங், ஆயிரக்கணக்கில் ஆன்லைன் வீடியோ ஆட்டங்கள் பலரது, மிகவும் குறிப்பாக தற்காலத்து இளைஞர்களை பாதித்துள்ள சூழ்நிலையில் புத்தகங்கள் படிப்பது என்கிற நல்ல பழக்கம் குறைந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எனவே, நம்முடைய பிள்ளைகளுக்கு, நமக்குத் தெரிந்த இளைஞர்களுக்கு புத்தகங்கள் வாங்கி படிப்பதால் கிடைக்கும் மனமகிழ்ச்சி மற்றும் பயன்களை குறித்து எடுத்துக்கூறி அவர்களுக்கு புத்தகம் படிக்கும் வழக்கத்தை மெல்ல கற்றுத்தரவேண்டும். கடினநகலில், மென்நகலில் படிப்பது என்பது முக்கியமல்ல. என்னுடைய வளர்ந்த இரண்டு மகன்களும் அதிக அளவில் புத்தகங்கள் படிக்கின்றனர், கடின நகலில் அல்ல, மென் நகலில்.
நான் ஏற்கெனவே எனது முந்தய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, நானே இரண்டுவருடங்களாகத்தான் எழுத்தில் ஈடுபாடுகொண்டு என் கற்பனைகளையும் அனுபவங்களையும் இணையதளங்கள் மட்டுமின்றி புத்தகவடிவிலும் வெளியிடத்துவங்கியிருக்கிறேன். ஒரு புதியநூல் வெளியீடு, விழாவாக நடத்தப்படும்போது அங்கு அந்த புதிய நூல் கடினநகலில் தான் வெளியிடப்படுகிறது. நாடெங்கிலும் புத்தகக்கண்காட்சி பல இடங்களில் நடந்தவண்ணம் இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கடினநகலில் தான் பார்வைக்கு வைக்கப்படுகிறது, விற்பனை செய்யப்படுகிறது. வருடம்தோறும் தைமாதத்தில் சென்னையில் நடக்கும் பிரசித்தி பெற்ற புத்தகக்கண்காட்சியே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இன்று 23.04.2023, உலகப் புத்தகதினம் என்பதால், மேற்கூறிய எனது சில எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன். நீங்களும், நீங்கள் விரும்பிய புத்தகங்களை அதிக அளவில் வாங்கிப்படித்து நேரத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நேரத்தை செலவிட வும், அதன்மூலம் உங்களுக்கு மனமகிழ்ச்சி கிடைப்பதுடன் பொதுஅறிவும் பெரிதளவில் கிடைக்க வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Apr-23, 4:05 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 131

மேலே