இசைநிற்பத் தாமுடைய மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - பழமொழி நானூறு 318
நேரிசை வெண்பா
ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - மாற்றாரை
மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க் கென்னரிதாம்
பெண்பெற்றான் அஞ்சான் இழவு. 318
- பழமொழி நானூறு
பொருளுரை:
இரந்தவர்கள் எல்லோருக்கும் தம் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்குமாறு தம்மிடத்துள்ள பொருளை இல்லையென்று கூறாது தம் அளவிற்கு ஏற்பக் கொடுப்பது கொடையாம்.
பகைவரை வென்று நாட்டை அவரினின்றும் நீக்கித் தன்னதாகக் கொள்ளும் வலிமை உடைய அரசர்களுக்குச் செய்தற்கரியது யாது?
அதுபோல, ஒரு பெண்ணைப் பெற்றவன் இழக்கப்படும் பொருளுக்கு அஞ்சுவானல்லன்.
கருத்து:
கொடைக்குரியவர்கள் அரசர்களே யாவர்.
விளக்கம்:
மாற்றாரை வெல்லும் அரசர்களுக்கே கொடையினை ஆற்றும் வண்மை உண்டாம். அவர்கள் கொடையினைக் கைக்கொள்வராயின், பெண் பெற்றானிழவுக்கு அஞ்சாதவாறு போல அஞ்சுதலிலர். முதலிரண்டடிகளும் கொடையின் இயலை விளக்கி நின்றன.
'பெண் பெற்றான் அஞ்சான் இழவு' என்பது பழமொழி.