சீரும் செருப்புமாய்

ஒரு நாள் மாலை எங்கள் பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். வெறும் கையுடன் வரவில்லை, ஒரு ஜோடி செருப்புடன் வந்தார்கள். நான் கேட்டேன் "வாருங்கள் அக்கா, என்ன எப்பொழுதும் தின்பண்டம் கொண்டுவரும் நீங்கள் இன்று புதிய செருப்புடன் வந்திருக்கிறீர்கள். எங்களுக்குத்தெரிந்து நாங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லையே? என்றேன் சிரித்தபடி. அந்தப்பெண்மணி "விஜியை வரச்சொல்லுங்கள்" என்றார். அதற்குள் என் மனைவியும் அங்கு வந்துவிட்டாள். அந்தப்பெண்மணி "விஜி ஒரு நிமிடம் இந்த செருப்பை போட்டுப்பார்" என்று அந்த செருப்பு ஜோடியை கொடுத்தார். என் மனைவியும் அதை அணிந்து கொண்டாள். அவள் காலுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. செருப்பின் நிறமும் தரமும்கூட நன்றாகவே இருந்தது.

அந்தப்பெண்மணி "மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு, இந்த புதுச்செருப்பை சென்னையிலிருந்து வாங்கிவந்தேன். வாங்கும்போது என் காலுக்குபொருத்தமாக இருப்பதுபோல்தான் இருந்தது. பின்னர், அந்தக் காலாணி வாங்கியதையே மறந்துவிட்டேன். இன்று வீட்டில் உள்ள பழைய சாமான்களை ஒழித்துக்கொண்டிருக்கையில், இந்த செருப்பு என் கண்ணுக்குத் தென்பட்டது. அணிந்து பார்த்தேன், என் காலுக்கு சரியாகப்பொருத்தவில்லை. என் பெண்ணிற்கும் சரியாக இல்லை. என் தோழி ஒருவரும் போட்டுப்பார்த்தாள். அவள் காலுக்கும் சரியாகப்பொருத்தவில்லை. சரி, உனக்குச்சரியாக இருக்கிறதா என்று பார்க்கத்தான் கொண்டுவந்தேன். மிகவும் கச்சிதமாக உனக்குபொருந்தியிருக்கிறது. இதை நீயே அணிந்துகொள்" என்றார்கள்.

என் மனைவி அவர்களிடம் சொன்னாள் "நீங்கள் எனக்கு இதுவரை தந்த சீர்களில் இது கொஞ்சம் புதுமையானது" என்று. அந்தப்பெண்மணியின் கணவரும் அந்தநேரத்தில் என் வீட்டிற்குவந்தார். என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார் "பார்த்தீர்களா, என் மனைவி உங்கள் மனைவியின் மீது, தலைமுதல் கால்வரை வைத்துள்ள பாசத்தை". நான் கூறினேன் "நேற்றுவரை நீங்கள் எங்களை 'சீரும் சிறப்புமாய்" இருக்கவாழ்த்தினீர்கள். இன்று என் மனைவியை மட்டும் ' சீரும் செருப்புமாய்' இருக்க வாழ்த்துகிறீர்கள்". அவர் சொன்னார் "ஏன், அடுத்த முறை சென்னை செல்லும்போது, என் காலுக்குப்பொருந்தாத மிகவும் பெரிய செருப்பை வாங்கி வந்து உங்களுக்கும் என் சீராகத்தருகிறேன்".
நான் உடனே பதிலளித்தேன் "ஏற்கெனவே எனக்குச் செருக்கு அதிகம் என்று சிலர் விமரிசிக்கிறார்கள். நீங்கள் எனக்கு செருப்பை வாங்கிச் சீராகத்தந்தால் "இந்த மனிதனுக்கு செருக்கு மட்டும் இல்லை செருப்பும் அதிகமாகவே இருக்கிறது' என்று விமரிசிப்பார்கள்”.

இதைக்கேட்டு என் மனைவியுடன் சேர்ந்து அந்தத்தம்பதிகளும் சிரித்தனர். அந்த நண்பர் மேலும் ஏதாவது என்னிடம் கூறினால் நான் எங்கே 'எங்கே செருப்பு' என்று என் மனைவியிடம் கேட்பேனோ என்று பயந்தோ என்னமோ, அந்த இடத்திலிருந்து உடனேயே சென்றுவிட்டார்; செருப்புடன் இல்லை செருக்குடனும் இல்லை, சிரிப்புடன்தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Apr-23, 4:19 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 68

சிறந்த நகைச்சுவைகள்

மேலே