“ரெய்டு”
“ரெய்டு”
மாசிலாமணி பரபரப்பாயிருந்தான். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்பு அன்று அவனுக்கு கிட்டியிருந்தது. இதற்காக மூன்று வருடங்களாக காத்திருக்கிறான். என்னதான் அரசு அதிகாரியாக வருமான வரித்துறையில் சேர்ந்திருந்தாலும் அலுவலகத்திற்கு மட்டும் வந்து வேலை செய்து விட்டு போவதில் என்ன பயன் இருக்க போகிறது?
திடீரென ஒரு இடத்தில் ‘ரெய்டு’ போய் அவர்களை கிடுக்கு பிடியாய் பிடித்து சோதனை செய்து, அதை பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாய் வந்தால்தான் அந்த உத்தியோகத்துக்கு மதிப்பு.
இவனும் பணியில் சேர்ந்த உடன் தன்னை ஏதேனும் ஒரு குழுவில் இணைத்து அனுப்பி வைப்பார்கள் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அவனது மேலதிகாரி அலுவலகத்தில் அனுபவம் கிட்டட்டும் என்று மூன்று வருடங்களாக அலுவலகத்தில் உட்கார வைத்து விட்டார்.
அன்று அவனை மேலதிகாரி அழைக்கும்போது கூட அவனுக்கு ஏதேனும் அலுவலக விசயமாக இருக்கும் என்றுதான் நினைத்தான். ஆனால் அந்த இனிமையான செய்தியை அவனிடம் சொன்ன போது நம்பவே இல்லை. நாளைக்கு ரெடியா இரு நாம ஒரு இடத்துக்கு ஆடிட் போக போறோம்.
சார், என்றவன் மேற்கொண்டு எதுவும் கேட்க நினைத்த போது அவர் “இப்ப நீ போலாம்” சே..மனதுக்குள் அலுத்தபடி வெளியே வந்தாலும் அலுவலகத்துக்குள் சுற்றிலும் பெருமையாக பார்த்தான். எல்லோரும் அவனை பார்த்து கொண்டிருப்பதாக ஒரு பிரமை.
அவனது மேசையை அடைந்தவன் அலுத்தபடி குரலில் ‘பெருமை தெரியாதபடி’ பக்கத்து மேசையில் இருந்த காமாட்சியிடம் பாஸ் நாளைக்கு ஆடிட் போறதுக்கு ரெடியா இருக்க சொன்னாரு, ஆனா எங்கயின்னு சொல்லலை,
காமாட்சி சிர்ப்பது போல் இவனுக்கு தோன்ற சட்டென்று திரும்பி அவள் முகத்தை பார்த்தான், என்ன சிரிக்கற மாதிரி இருக்கு?
இல்லை ஆடிட் போறவங்க எங்க போறோமுன்னு சொல்லிட்டா போவாங்க?
எனக்கும் தெரியும், இடம் எங்கயின்னு தெரிஞ்சா நல்லாயிருக்குமேன்னு பார்த்தேன்.
அதெல்லாம் போறவரைக்கும் சொல்ல மாட்டாங்க, காமாட்சி சொன்னதை ஆமோதிப்பதை போல தலையாட்டினாலும் இதை இவள் சொல்லி கேட்கவேண்டுமா என்னும் எண்ணம் வராமலில்லை. இதற்கும் காமாட்சி இவனை விட ஜூனியர்.
மதியம் மேல் மேலதிகாரி இவனை அழைத்தார், வேகமாய் உள்ளே போனான். அங்கு இன்னும் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் எப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டும், எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட உரை கொடுத்தார். அனைவரும் அமைதியாய் கேட்டு கொண்டனர்.
நாளை காலை நேரத்துடன் அலுவலகம் வந்து விட வேண்டும். அலுவலக வாசலில் ஏழு மணிக்கு கார் தயாராய் இருக்கும்,எட்டு மணிக்குள் “ஸ்பாட்டுக்கு” போயிடணும். புரிந்ததா? அதுக்கு முன்னால் உங்க ‘ரொட்டீன் வேலைகளை” முடிச்சு வைச்சுக்குங்க.அவரின் உரை இவன் உடலுக்குள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்தது.
மறு நாள் காலை காருக்குள் உட்கார்ந்திருந்தவனுக்கு நாம் எங்கே போக போகிறோம் என்னும் கேள்வி உணர்வே அதிகமாக இருந்தது. இவனுடன் இருந்த இருவரும் இவனை போலவே அமர்ந்திருப்பதை பார்த்தவன் அவர்களும் தன்னைப் போலத்தான் என்று நினைத்து கொண்டான். முன்னால் உட்கார்ந்திருந்தவர் ஏதோ டிரைவரிடம் சொல்ல கார் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வேகமாக சென்று ஒரு இடத்தில் சட்டென்று வலது புறம் திரும்பி இடது புறமாய் இருந்த ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது.
அனைவரையும் இறங்க சொன்னவர் வேகமாக உள்புறமாய் நடந்து வாசல்புறம் இருந்த பெண்ணிடம் ஏதோ விசாரித்து விட்டு அவர் பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவரை இங்கேயே நில்லுங்கள், மற்ற இருவரையும் அழைத்து அந்த பங்களாவுக்குள் சென்றார்.
அரை மணி நேரத்தில் பங்களாவின் உரிமையாளர், அவர் மனைவி மகள், மகன், மற்றும் குழந்தைகள்,அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரர்கள் எல்லோரையும் அழைத்து வர செய்து முன்புற ஹாலில் அமர வைக்கப்பட்டார்கள். அதற்குள் இவர்களுக்கு உதவியாக மேலும் ஒரு காரில் நான்கு பேர் வர, அந்த பங்களாவின் மூன்று மாடி கட்டிடம் முழுக்க ஒரு இடம் விடாமல் அலச சொன்னார்.
கிட்டத்தட்ட கிடைத்த எல்லா பொருட்களையும் முன் ஹாலில் உட்கார்ந்திருந்த வர்கள் முன்னால் காட்டி எழுதிக் கொள்ள ஆரம்பித்தனர். அதன் பின் அந்த பொருட்களை எடுத்து சென்றதற்கு சாட்சியாக அங்கிருந்தவர்கள் எல்லோரிடமும் கையெழுத்தை பெற்று கொண்டு மாலை அங்கிருந்து கிளம்பினார்கள்.
மறு நாள் அலுவலகம் வந்தவன் இதை பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளதா என்று எல்லா பத்திரிக்கைளையும் நோட்டம் விட்டான். ஒரு மூலையில் பெட்டி செய்தியாக போட்டிருந்தார்கள். ஏதாவது ஒரு பத்திரிக்கையிலாவது தன் பெயரும் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தான்.
ஒரு மாதம் ஓடியிருந்தது, தான் முதன் முதலாக ஆடிட் போன இடத்தில் எவ்வளவு கணக்கில் வராததை கைப்பற்றி உள்ளோம்? என்னும் செய்தியை தினம் தினம் எதிர்பார்த்து, எதிர்பார்த்து, கடைசி வரை இவன் காதுக்கு கிடைக்கவே இல்லை. இவனுக்கும் அதனை பற்றி ஆர்வம் இந்த ஒரு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி போயிருந்தது.
அன்று யதேச்சையாக ஒரு திருப்பத்தில் இவனுடன் வந்த அந்த மேலதிகாரியும் அன்று இவர்கள் சென்ற பங்களாவின் உரிமையாளரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு காரில் செல்வதை பார்த்தான்.