இன்பலோகம் காணுவர்

அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் மாந்தர்
அன்றாடம் சாராயம் அருந்தாமல் துஞ்சார்
இஞ்சிக்கும் சுக்கிற்கும் எதிர்பார்த்து வாழ்ந்தும்
இத்துனூண்டு ஊறுகாயில் இன்பலோகம் காண்பர்
பஞ்சமது வாட்டிடினும் பாடுபடும் காசை
பாதிமதுக் கடைக்கீயும் பாரிவள்ள ளாவர்
கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்தி னாலும்
கள்நதியில் நீந்துவதைக் கைவிடவே மாட்டார்
*
நெஞ்சத்தில் நூறுதுயர் நின்றாடி னாலும்
நீயின்றி நானில்லை நிலைவிட்டு மாறார்
பஞ்சின்மேல் தீயாகிப் படருகின்ற போதை
(Bar)பாரினிலே தமக்கென்றே படைத்துவிட்டா னென்பர்
அஞ்சியவர் என்றெண்ணும் ஆட்களெலாம் கள்ளை
அருந்துவதே ஆண்மையென அமர்க்கலங்கள் செய்வர்
பிஞ்சினிலே பழுத்ததெலாம் பின்பற்றும் வண்ணம்
பெண்டாட்டிப் பிள்ளைகளைப் பிழிந்தெடுத்து வைப்பர்
*
இஞ்சுண்ட வானரமாய் இல்லத்தில் பிள்ளை
எழிலற்றுக் கிடந்தாலும் இன்னமுத மீயார்
எஞ்சியுள்ள வாழ்நாளை எண்ணிப்பா ராதே
இடுப்புவேட்டி விற்றேனும் இவர்குடியில் வீழ்வர்
நெஞ்சத்து நிம்மதிக்கு நீவேண்டு மென்றே
நெடுநாள்பொய் உயிர்வாழ நிதமும்கு டிப்பார்
கொஞ்சமும்தம் முள்மனத்துக் குற்றமறி யாதே
குடிப்பதற்காய் காரணங்கள் கொண்டலைவா ரிங்கே!
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jun-23, 1:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 52

மேலே