தருணங்கள்

கரங்கள் மடக்கி
கதிரவன்
கடலில் வீழும்
கணங்களை,

கண்மணியின்
கரங்கள் கோர்த்து
கண்ட - அ‌ந்த
கனவுத் தருணங்கள் !

பட்டம் பெற்ற
வெகுமதியு‌ம்
பட்ட கஷ்டம் விற்ற
நிம்மதியும் - மனது
முட்டத் தந்த
வெற்றித் தருணங்கள் !

அன்று பிறந்தது
அவன் மட்டும் தானா
நாங்களும் தான்,

வார்த்தைகளாலோ
வண்ணத்தினாலோ
வருணிக்க முடியா
அந்நொடிகள்
இதயம் நனைத்த
கண்ணீர்த் தருணங்கள் !

தெருமுனையில்
தினமும்
திரும்பி - அவளிடம்
விடைபெறும்
வழக்கம் எனக்கு,

மறந்து சென்ற
ஓர் நாள்
திரும்ப வந்து (அவளைத்)
தேடித் திரும்புகையில்
அவளும்
அரும்பி வந்த
அதிர்ஷ்டத் தருணங்கள் !

முதலில் காதலை
தகவலாய்
தந்ததால்,
அப்போது மலர்ந்த
அவள் முகத்தின்
சிறு முறுவல் - நான்
தவற விட்டப்
பொக்கிஷத் தருணங்கள் !

வேலை நாளின்
மாலை மழையும்
விடுமுறை நாளின்
காலை மழையும்
விட்டுப் போனத்
தருணங்கள் !
அழகாய் நம்மைக்
கட்டிப் போட்டத்
தருணங்கள் !

நினைவினில் நிற்கும்
நிகழ்வுகள் ஆயிரம்
அதிலே
உணர்வினில் கலக்கும்
தருணங்கள்
சொற்பமே !

குடும்பமாய் அடித்த
அரட்டைத் தருணங்கள்,

நண்பனோடு போன
பயணத் தருணங்கள்,

கேலிக்கு ஆளான சில
வேடிக்கைத் தருணங்கள் !

இன்னும் இன்னும் ...

இப்படி வாழ்வின் தருணங்கள் எத்தனையோ
சேமித்து வைத்திடனும்
அத்தனையும் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (25-Jun-23, 7:42 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : tharunangal
பார்வை : 55

மேலே