நேசமுள்ள நாச்சம்மா அக்காவுக்கு

துயரத்திலிருந்து விடுபட்டு
உயரப் பறந்துவிட்டாய் நீ - அந்தத்
துன்பக்கூண்டுக்குள் அடைபட்டு
நிர்கதியாய் நிற்கிறோம் நாங்கள்

தம்பி என்று வாஞ்சையுடன்
நீ கூப்பிடும் அந்தக் குரல் - இனி
கேட்கபோவதில்லையெனினும்
தம்பி என்று யாரழைத்தாலும்
நீயென நினைத்தே திரும்பிடுவேன்

பூங்காற்று வந்து - என்
தலைகோதும்போதெல்லாம்
காப்பு காய்ச்சிய, கருத்த
உன் கைவிரல்களே
என் நினைவுக்கு வந்திடும்

மரணம் என்பது
சாபமா? விடுதலையா?
எனத் தெரியவில்லை - ஆனால்
உன் மரணம்
உனக்கு விடுதலை
எங்களுக்கு சாபம்

எல்லா மரணத்திற்கும்
எல்லோரும் அழுவதில்லை
எந்த உயிர் - நம்மை
சிரிக்க வைத்ததோ
அந்த உயிர் போகும்போதுதான்
கண்ணீர் வருகின்றது .

உயிருள்ளவரை உழைத்தாலும்
ஒருவேளை உணவுகூட
நிம்மதியாய் நீ உண்டதாய்
நினைவில்லை எனக்கு.

எங்கள் வயிறுகள்
நிறைந்தபோதுமட்டுமே
நீ பசியாறினாய்.

அக்கா என்பவள்
இன்னொரு அம்மா
நீ இருந்தபோது - இது
தெரியவில்லை
நீ இறந்தபோது
தெரிந்தும் பலனில்லை.

ஒன்று மட்டும்
புரிந்துகொண்டேன்
தீர்க்கமுடியாதது
பெத்த கடன் மட்டுமல்ல
வளர்த்த கடனும்தான்.

எழுதியவர் : VIJAYAKUMAR NATRAYAN (26-Jun-23, 6:49 pm)
பார்வை : 34

மேலே