திரவக்கண்ணாடி ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் தமிழ்மதி நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி

திரவக்கண்ணாடி!
(ஹைக்கூ கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மதி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலாசிரியர் கவிஞர் தமிழ்மதி அவர்களின் பத்தாவது நூல் இது. இரண்டாவது ஹைக்கூ கவிதை நூல். ஹைக்கூ நுட்பம் அறிந்து வித்தியாசமாக எழுதி உள்ளார். ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற வகையில் வடிப்பதே ஹைக்கூ. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’, ‘சுண்டக்காய்ச்சிய பால்’, ‘சொற்சிக்கனம்’ ஹைக்கூ கவிதைகளின் இலக்கணம். மூன்று வரிகளில் முத்தாயப்பாக வடித்துள்ளார். நிலவு, வானவில், வண்ணத்துப்பூச்சிகள் பற்றி பல ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் போல இயற்கை பற்றியும் பாடி உள்ளார். ஏழ்மை பற்றியும் பாடி உள்ளார்.

நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு :

ஆழ்கடலில் தள்ளும்
அறிவிலியாக்கும்
மது!

மது அறிவாளியையும் அடிமுட்டாளாக்கும் ; துன்பக்கடலில் ஆழ்த்திவிடும் ; நிம்மதியைப் போக்கி விடும் என்பது நூலின் முதல் ஹைக்கூவில் முத்திரை பதிக்கும் வண்ணம் வடித்துள்ளார். பாராட்டுகள்.

விதைப்பது வியர்வை
அறுவடை கண்ணீர்
விவசாயி

நம் நாட்டின் முதுகெலும்பு உழவர்கள். ஆனால் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் நாட்டுநடப்பு உள்ளது. உழவன் வாழ்வில் இன்பம் இல்லை. துன்பமே எஞ்சி உள்ளது. நட்டத்தால் கண்ணீர் விடும் நிலையே நிலவுகின்றது என்பதை ஹைக்கூவால் உணர்த்தி உள்ளார்.

பளிச்சென்று வெளிச்சம் காட்டும்
மின்னல்
ஹைக்கூ கவிதைகள்!

ஹைக்கூ கவிதை பற்றி விளக்கும் வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார். மின்னல் போல சிந்தையில் ஒரு மின்னலை வரவழைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு என்பதை உணர்த்தி உள்ளார். நன்று.

வானக்கடலில்
வண்ணப்பாலம்
வானவில்!

இயற்கையை கூர்ந்து ரசிப்பவர்களால் தான் இயற்கை பற்றிய ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும். நூலாசிரியர் கவிஞர் தமிழ்மதி அவர்களும் இயற்கையை உற்றுநோக்கி பல ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். வானவில் பற்றி நல்ல கற்பனை.

பிறப்பும் இறப்பும்
ஒரே தேதியில்
சிசுக் கொலை!

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டி செயல் போல என்றும் சில இடங்களில் சிசுக்கொலை நடந்து வருவது வேதனை. நாட்டில் நடக்கும் முட்டாள்தனத்திற்கு கண்டனத்தைப் பதிவு செய்யும்வண்ணம் வடித்த ஹைக்கூ நன்று.

ஆப்பிரிக்க மனிதன் தலையில்
பச்சை நிற தலைப்பாகை
பனை மரம்!

பனைமரம் பற்றி வித்தியாசமாகச் சிந்தித்து பனைமரத்தை நம் மனக்கண்முன் காட்சிப்படுத்தும் வண்ணம் வடித்திட்ட ஹைக்கூ நன்று.

வானில் நிலவெடுத்து
தேனில் ஊற வைத்தது
அவள் முகம்!

காதலைப் பாடாத கவிஞன் இல்லை
காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை

என்ற பொன்மொழிக்கு ஏற்ப காதலையும் பாடி உள்ளார். காதலி முகத்தையும் கற்பனை செய்து எழுதியுள்ள ஹைக்கூ நன்று.

சில ஹைக்கூ கவிதைகள் முந்தைய ஹைக்கூ கவிதைகளை நினைவூட்டும் வண்ணம் உள்ளன. அடுத்த நூலில் அவற்றைத் தவிர்த்து புதிதாக சிந்தித்து எழுதுங்கள்.

நீர் குண்டு போதும்
அந்த அரக்கனை வீழ்த்த
தீ!

எரியும் தீயை அணைப்பது பற்றியும் சிந்தித்து அதனையும் ஒரு ஹைக்கூவாக வடித்துள்ளது சிறப்பு. நன்று. பாராட்டுகள், வாழ்த்துகள்.

பூக்களின் வாசம்
நுகர பிடிக்கவில்லை
கண்ணீருடன் விதவை!

இளம் விதவையின் மனநிலையை படம்பிடித்துக் காட்டும்வண்ணம் அவளின் உள்ளக்குமுறலை உணர்த்தும் வண்ணம் வடித்திட்ட ஹைக்கூ சிறப்பு.

ஈட்டி ஏந்திய பாதுகாப்பு
நடுவில் நிற்கிறாள்
ரோசா அழகி!

முட்களின் இடையே உள்ள ரோசா மலர் பற்றி வித்தியாசமாக சிந்தித்து முட்களை ஈட்டியாகக் கற்பனை செய்து எழுதிய ஹைக்கூ நன்று. ரோசாவை அழகியாகக் கற்பனை செய்ததும் சிறப்பு!

மீன்கள் தின்ன
மீதி தோசை
நீரில் பிறைநிலா!

வானில் நிலவை தோசையாக பலர் கற்பனை செய்து கவிதைகள் வடித்து இருந்தாலும் பிறைநிலவை மீதி தோசையாகவும் குளத்தில் மீன்கள் கடிப்பதையும் காட்சிப்படுத்தும்வண்ணம் வடித்த ஹைக்கூ நல்ல யுத்தி.

நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். சிந்தையில் சிந்தனை மின்னலை உருவாக்கும்வண்ணமும், சமுதாய சீர்கேடுகளை விளக்கும்வண்ணமும், இயற்கைக்காட்சிகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை வடித்து உள்ளார். படிக்கும் வாசகர்களையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும்வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார். பாராட்டுகள், வாழ்த்துகள், தொடர்ந்து ஹைக்கூ எழுதுங்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (4-Jul-23, 12:25 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 39

மேலே