தண்டவாளங்கள்
தண்டவாளங்கள்
தர்மராசன், வேக வேகமாக கோயிலுக்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தவர், அந்த முக்கு திரும்பும் போதே கவனித்து விட்டார், சற்று தொலைவில் எதிரில் ஒருவன் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருப்பதை.
கடவுளே..! காலங்காலத்துல அஞ்சு மணிக்கு இப்படி வர்றானே, மனது பரிதவித்தாலும், தான் மட்டும் தனியாக அவன் எதிரில் சென்றால் அவன் ஏதாவது இவரை வம்புக்கு இழுக்கவும் வாய்ப்பு இருக்கிறது, அதனால் சற்று ஒதுங்கி மறைவாக நிற்போம் அந்த திருப்பத்திலேயே முன்புற பந்தல் போட்டிருந்த கடை ஒன்றில் ஓரமாய் நின்றார். அவன் கடந்து போகட்டும் என்று காத்திருந்தார்.
இவரையும், இவரின் எண்ணங்களையும் அவன் கண்டு கொண்டானா என்பது தெரியவில்லை, அவன் இந்த பக்கமும், அந்த பக்கமும் அலசியபடி, யாரையோ உரக்க திட்டியபடி நடந்து வந்து கொண்டிருந்தான். தர்மராசன் யாரோ பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். இவருக்கு தெரிந்த அக்கம் பக்கத்து பெண்கள். அந்த நேரத்தில் எழுந்து குளித்து, கோயிலுக்கு செல்வதற்காக அவரை தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
தர்மராசா இங்கிருந்தே ஸ்..ஸ்.. அழைக்க அவர்கள் கோபத்துடன் திரும்பினர். அப்பொழுதுதான் அவர் செய்த காரியத்தின் விபரீதம் அவருக்கு புரிய, சட்டென்று வெளியே வந்து தப்பா நினைச்சுக்காதீங்க, எதிர்ல பாருங்க, ரோட்டை அளந்துட்டு ஒருத்தன் வர்றான், அவன் வர்ற நிலைமையும் சரியில்லை. அதான் நானே பயந்து இங்க ஒதுங்கி நிக்கறேன், நீங்களும் கொஞ்சம் இப்படி வந்து நில்லுங்க, அவன் போயிரட்டும்.
அவர் பேசி முடிக்கவும் பின் புறம் மோட்டார் பைக்கின் சத்தம் ஒன்று வெளிச்சத்தை பாய்ச்சியபடி வந்தது., அதை ஓட்டியபடி வந்தவன் இவர்கள் கூட்டமாய் தயங்கி நிற்பதையும், எதிரில் ஒருவன் தள்ளாடிக்கொண்டு உளறியபடி வந்து கொண்டிருப்பதையும் பார்த்தவன், சட்டென வண்டியை நிறுத்தி, இறங்கி வந்து அவர்களை முன்னால் நடக்க சொன்னான்.
இருந்தும் அவர்கள் தயங்க, இவன் இவர்கள் முன்னால் நடந்து அவன் எதிரில் நின்று யாருய்யா நீ? விசாரித்தான். அதற்குள் இவர்களை தாண்டி போகும்படி சைகை காண்பித்தான். அவர்கள் சட சடவென்று அவனை தாண்டி நடந்தனர்., போதையில் இருந்தவன் இவர்கள் செல்வதின் அரவம் கேட்டு திரும்ப எத்தளித்தான். எதிரில் நின்றவன், அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் யாருய்யா நீ? அதிகாரமாய் கேட்டு, அந்த குடிகாரனை மிரள வைத்தான்.
எல்லா தெய்வங்களையும் கும்பிட்டு முடித்து விட்டு கோயிலுக்கு வெளியே வந்திருந்த தர்மராசா மணி பார்த்தார். ஏழரையை காட்டியது. இனி வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்ப சரியாயிருக்கும், நினைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
பத்து பதினைந்தடி தூரம் நடந்திருப்பார், இரு புறமும் கடைகள், அடுத்து கார்ப்பரேசன் பள்ளி, எதிரில் இரண்டு கடைகள், அதை தாண்டி அந்த கடை. முன்னால் வரிசையாக மூங்கில் தடுப்புகள் கட்டி உள் புறமாய் சென்றது. ஏழரை மணிக்கே மூடியிருந்த கதவை பார்த்தபடி ஏழெட்டு குடி மகன்கள் அந்த மூங்கில் கம்புகளில் தொங்கியபடி நின்று கொண்டிருந்தனர்.
இன்னும் கொஞ்சம் பேர் இன்னும் திறக்கப்படாமல் இருந்த கடைகளின் படிகளில் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தார். அவர்களின் கோலத்தை பார்த்தவுடனே தெரிந்து கொண்டார் அவர்களும் இந்த கடை திறப்பதற்காக காத்திருப்பவரகள்.
அதோ அங்கு நின்றிருப்பவன் இவர் அலுவலகத்தில் கீழ் மட்ட ஊழியனாய் வேலை செய்து கொண்டிருந்தவன், ஒழுங்காக பணிக்கு வருவதில்லை என்று சஸ்பென்சனில் இருக்கிறான். இவன் இருக்கும் நிலையில் இனிமேல் திருந்தி பணிக்கு வருவது சாத்தியமே இல்லை., இப்படி நினைத்தவர் அந்த இடத்தை வேகமாக கடக்க முயற்சித்தார். அவனுக்கு இவரை நன்றாக தெரியும், “சார்” என்று வந்து விட்டால்..!
நடையில் வேகம் அந்த முக்கு வரை நீடித்தது. ஆனால் அந்த முக்கில்.. அது என்ன அங்கு கூட்டம்? மனதில் சந்தேகம் தோன்ற அந்த இடத்தில் தன் நடையை மெதுவாக்கினார்.
அந்த இடத்தில் நாங்கைந்து இளைஞர்கள் வேகமாக பேசிக்கொண்டும், ஒரு சிலர் கைகளில் தடியுடன் அங்கும் இங்கும் அலைவதை பார்த்தவரின் மனதுக்குள் மெளனமாய் ஒரு கலவரம். அங்கு அமைதியாய் நின்று பார்த்து கொண்டிருந்த இவர் வயதையொத்த, முஸ்லீம் ஒருவரை அணுகினார்.
என்னாச்சு சார், எதுக்கு இங்க பரபரப்பாயிருக்கு?
எவனோ ஒருத்தன் வெத்தலைக்கடை இப்ராஹிம்மை கத்தியில குத்திட்டான்.
கடவுளே..! நெஞ்சில் கை வைத்து கொண்டவர் எத்தனை மணிக்கு நடந்தது?
காலையில அஞ்சு மணிக்கு இரயில்வே ஸ்டேசனுக்கு போயி வெத்தலை கட்டு எடுத்துட்டு வந்து தினமும் கடை கடைக்கு போடுவான். தனியா வெத்தலை கடை வச்சிருக்கான். நம்ம ஊருக்கு வெத்தலை ஹோல் சேல் ஏஜண்ட் அவன். பாவம், தினம் இதே பாதையில போறவன், எவனோ நோட் பண்ணி இதை பண்ணிருக்கணும், தனக்குள் சொல்லிக் கொண்டார்.
தர்மராசாவின் மனம் மீண்டும் கடவுளை கூப்பிட்டது, அப்படியானால் எங்களுக்காக
இறங்கி அந்த குடிகாரனை நிறுத்தி, கடந்து போக சொன்னவன் இபராஹிம்மாவாகத்தான் இருக்க வேண்டும். அவனை இந்த குடிகாரன் கத்தியால் குத்தியிருக்க வேண்டும். நினைத்து பார்த்த இவருக்கு உடல் முழுவதும் வேர்த்தது. அந்த குடிகாரன் கையில் கத்தி வைத்திருந்திருக்கிறான். அந்த இப்ராஹிம் மட்டும் அங்கு வரவில்லை என்றால் கண்டிப்பாய் என்னையோ அல்லது அந்த பெண்களையோ குத்தியிருப்பான்.
அவருக்கு அலுவலகம் போக வேண்டும் என்கிற எண்ணத்தை விட அந்த இப்ராஹிம்முக்கு என்னவாயிற்று என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் வந்து விட்டது. ஐயா அந்த தம்பிய இப்ப எங்க கூட்டிட்டு போயிருக்காங்க?
இவரின் பதட்டமான கேள்வி அவருக்கு வியப்பை உண்டு பண்ணி இருக்க வேண்டும், சந்தேகமாய் கேட்டார், இப்ப எதுக்கு அவரை எங்க கூட்டிட்டு போயிருக்காங்கன்னு கேட்டீங்க?
இவர்கள் இருவரின் பேச்சுக்கள் அங்கும் இங்கும் கோபமாய் அலைந்து கொண்டிருந்த இளைஞர்களின் கவனத்தை கவர அவர்களும் இவர்கள் அருகில் வந்தனர்.
தர்மராசா எதிரில் இருப்பவரின் கையை பற்றி காலை ஐந்து மணிக்கு நடந்ததை அப்படியே சொன்னார். தங்களுக்காக அவன் வண்டியை நிறுத்தி அந்த குடிகாரனை தடுத்ததையும், தாங்கள் அவனுக்கு ஏதும் ஆபத்து அந்த குடிகாரனால் வந்து விடுமோ என்பதை கவனிக்காமல் வேகமாய் சென்று விட்டதையும் சொன்னவர், என்னை மன்னிச்சுக்குங்க, சுயநலமாய் இருந்துட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் வழிந்தது.
அதுவரை அங்கு புகைந்து கொண்டிருந்த மத மோதல்கள் வருவதற்கான வாய்ப்புக்களும், அந்த இளைஞர்களின் கோபாவேசங்களும் சற்று தணிந்திருந்தது.
காலையில வெளிச்சம் வந்த பின்னாடிதான் அவனை பார்த்ததாகவும், அதனால் இரத்தம் நிறைய போயிடுச்சு, இவன் எந்திரிச்சு நடக்க முயற்சி பண்ணியிருக்கான், முடியாம ஒரு கடையோரமா விழுந்திட்டான்.
ரோட்டுல அவன் வண்டி நிக்கவும் தான் சந்தேகமா தேடியிருக்காங்க அதனால உடனே கண்டு பிடிக்க முடியாம போயிடுச்சு. தர்மராசாவிடம் அவனை நம்ம ஜி.ஹெஸ்ல அட்மிட் பண்ணியிருக்கோம், என்றனர்.
ப்ளீஸ்..நான் அங்க போகணும், அந்த தம்பிய பாக்கணும், அவரின் வேண்டுதலை தட்ட முடியாமல் ஒரு இளைஞன் வண்டியை எடுத்து வந்தான். அதில் அவர் பின் புறம் ஏறிக்கொள்ள வண்டி மருத்துவமனைக்கு விரைந்தது.
அந்த மருத்துவமனையில் சேர்த்திருந்த இப்ராஹிம் இரண்டாம் நாளே கண் விழிக்க இனி உயிருக்கு ஆபத்தில்லை இருந்தாலும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்
அரசு மருத்துவமனையில் தங்கியிருந்த நோயாளிகளுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஒரே வியப்பு, சுற்றி வர முஸ்லீம் உறவுகள் மத்தியில் ஒருவர் மட்டும் நெற்றி நிறைய திருநீருடன் தினமும் காலை மாலை வந்து இந்த நோயாளியை பார்த்து பேசி விட்டு செல்வதை ஆச்சர்யமுடன் பார்த்தார்கள்.
மூன்றாவது நாள் இப்ராஹிமை அந்த மருத்துவமனையை விட்டு வெளியே கூட்டி வந்த பொழுது இவனுக்காக காத்திருந்த நபர்களை பார்த்து ஆச்சர்யமாகி விட்டான். தர்மராசாவுடன் அனறு கோயிலுக்கு போகமுடியாமல் தயங்கி நின்று கொண்டிருந்த பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள்.
இரு பக்க உறவுகளும், நட்புக்களும் கை கூப்பிக்கொள்ள அங்கிருந்து விடை பெற்று கொண்டனர். இவர்கள் வேறு வேறு கடவுளை வணங்குபவர்கள்தான், ஆனால் இணையாய் செல்லும் தண்டாவளங்களாகத்தான் இந்த ஊருக்கு இது வரை இருந்திருக்கிறார்கள்