பழகி போன வாழ்க்கை
பழகி போன வாழ்க்கை
இது என்ன ? கையில் திணிக்கப்பட்ட பணத்தை பார்த்தபடியே எதிரில் இருக்கும் ஆறுமுகத்திடம் கேட்டான் பரமன்.
சம்பளம்…! போன வாரம் நாலு நாளு வேலை செஞ்சிருக்கே, நாளுக்கு அறுனூறு போட்டு இரண்டாயிரத்து நானுறு கொடுத்திருக்கேன்.
அப்ப அரை நாள் சம்பளம்?
எந்த அரை நாள்..?
என்னா இப்படி கேக்கறே? சனிக்கிழமை அரை நாள் வேலை செஞ்சோமில்லை, அது கணக்கில்லையா?
என்னப்பா சனிக்கிழமை காலையில் பத்து மணிக்கு வந்து பன்னெண்டுக்கெல்லாம் கிளம்பிட்டீங்க, அதுக்கெல்லாம் அரை நாள் சம்பளம் கொடுப்பாங்களா? அது வெள்ளிக்கிழமை அன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை, அதை சனிக்கிழமை வந்து முடிச்சு கொடுத்திட்டு கிளம்பிட்டீங்க, அதுக்கும் சம்பளம் கேட்டா எப்படி?
நாங்களா வேலைய செய்ய மாட்டேன்னோம், நீதான் போதும் கிளம்புங்கன்னு சொன்னதால கிளம்புனோம், இப்ப அதுக்கு சம்பளம் கிடையாதுன்னா எப்படி?
ஆறுமுகம் பரமனை உற்று பார்த்தான், இப்ப என்னங்கறே? இதுக்கெல்லாம் சம்பளம் வேணும்ங்கறியா?
இவனின் வேகமான கேள்வியால் மிரண்ட பரமன், இல்லை அந்த ரண்டு மணி நேரத்துக்கு கொஞ்சம் போட்டு கொடுக்கலாமில்லை.
இங்க பாரு பரமா? உங்களுக்கு வாரத்துக்கு நாலு நாள் வேலை ரெடி பண்ணி தர்றதே பெரிசு, இதுக்காக நான் வண்டியில பெட்ரோலை போட்டுட்டு ஒவ்வொரு இடமா போய் கெஞ்சி கூத்தாடி வேலைய புடிக்கறேன். நியாயப்படி பார்த்தா இதுக்கு தனியா நீங்க எனக்கு ஒரு பர்செண்டேஜூ தரணும்.
பரமனுக்கு ஆத்திரமாய் வந்தது, ஆளு கூலி குறைஞ்சது தொள்ளாயிரம்னு சொல்லி வீட்டுக்காரன் கிட்ட பேசியிருப்பான், அதுலயே நாலு ஆளு ஒரு நாளு கூலி ஆயிரத்து இருனூறு எங்க கூலியில அடிச்ச காசே கிடைச்சிருக்கும். நம்மளுக்கு அறுனூறு கொடுத்துட்டு அக்கிரமா பேசறான். நினைத்தாலும் அவனிடம் பேச முடியாது, அடுத்த வாரமே அவன் பரமனை கூப்பிட மாட்டான். “உள்ளதும் போன கதையாயிடும்” என்ன செய்வது?
ஒன்றும் பேசாமல் தன்னுடன் இருந்த தம்பியையும், மச்சினனையும் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.
இருப்பா எங்க கிளம்பிட்ட?, இன்னைக்கு சம்பளம் வாங்கியிருக்க, போலாமா? போய் ஆளுக்கு கொஞ்சம் சரக்கு சாப்பிட்டுட்டு போலாம், ஆறுமுகம் பல்லை காட்டினான்.
பிச்சைக்கார நாயி..! மனதுக்குள் திட்டினான் பரமன், இந்த காசுலயும் ஓசியில தண்ணி அடிக்கிற சாக்குல புடுங்க பாக்கறான், இல்லை ஆறுமுகம், மச்சினனுக்கு ஒரு சோலி இருக்கு, அதுக்கு நாங்க இரண்டு பேரும் கூட போகணும், இப்ப வேணாம், இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம்.
ஏய் என்னப்பா, நான் கொடுக்கறப்பா, என்ன செலவு ஆக போகுது மூணு பேத்துக்கு? இரண்டு கோர்ட்டர் நான் வாங்கி தர்றேன், நீ சால்னா மட்டும் பணம் கொடு, வாப்பா, இன்னைக்கு லீவு வுட்டுறுக்குது,
பரமன் நெளிந்தான், முடியாதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்ல முடியாது, தம்பி முகத்தையும், மச்சினன் முகத்தையும் பார்த்தான். இருவர் முகத்திலும் சபலம் தெரிந்தது. போலா மச்சாம், குசு குசுவென இவன் காதில் ஓதினான் மச்சினன்.
சரி ஆறுமுகம், நான் வூட்டுக்கு கறி எடுத்து கொடுத்துட்டு வந்துடறேன், இதா இவனுங்க இரண்டு பேத்தை கடைக்கு கூட்டியாந்திரு, சொல்லியபடி வீட்டுக்கு வேகமாக நடந்தான்.
ஆறுமுகத்திற்கு “பட்சி” மாட்டிகிட்டான் மனதுக்குள் உதிக்க, சீக்கிரம் வா பரமு, நானும் வூட்டுல கறி எடுத்து கொடுத்துட்டுத்தான் வந்துருக்கேன், கடையில நிக்கறோம்.
வூட்டுக்கு போன பரமன், சம்சாரம் அஞ்சலையிடம் இரண்டாயிரம் ரூபாயை கொடுத்துவீட்டு ஆறுமுகம் கூப்பிடறான், வந்துடறேன்,
உன்ர கூட வந்த கொளுந்தனும், தம்பியும் எங்க? அவனுக கூலிய கொணாந்து ஊட்டுக்காரிக கிட்ட கொடுத்தானுங்களா?
அவனுகளுக்கு சோலி இருக்குன்னு அங்கன நிக்க வச்சுட்டு வந்திருக்கேன்
என்னா சோலி பெரிய சோலி, ஊட்டுக்கு பணத்தை கொடுத்துட்டு போகாத சோலி, ஆமா ஆறுமுகம் எதுக்கு கூப்பிடறான், இப்ப கையில எம்புட்டு வச்சிருக்கே? போய் அந்த கருமாந்திரத்த குடிச்சுட்டு வூட்டு மட்டும் வந்தே?
அவள் சொன்னது, காற்றில் பாதியும், அவன் காதில் பாதியுமாகத்தான் விழுந்தது. அந்தளவுக்கு அவன் வீட்டை விட்டு தூரமாய் வந்திருந்தான். மனதுக்குள் கடை அவனை வா வாவென அழைக்க வேக வேகமாக நடந்தான்.
இரண்டு “கோர்ட்டர்” பாட்டிலுக்கும் தண்ணீர் பாக்கெட்டும் ஆறுமுகம் வாங்கி மேசைக்கு வந்தான். பரமனின் மச்சானுக்கு பரபரப்பாய் இருந்தது. பரமனின் தம்பி கண்களில் ஆர்வம் மின்ன பாடிலை பார்த்தபைட் இருந்தான்..
பரமன் சால்னாவுக்கு ஆர்டர் செய்தான், நூறு ரூபாய் ஆயிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தனர்.
பகல் தாண்டியிருந்தது. பரமனின் மிச்ச பணம் காலியாகியிருந்தது. ஆறுமுகத்திடம் இருந்து அதற்கு பின் பத்து பைசா வெளியே வரவில்லை. மச்சினனும், தம்பியும் வாங்கியிருந்த கூலி பணத்தில் பாதி காலியாகியிருந்தது. நால்வருமே எழுந்து வரமுடியாமல் அந்த கடையின் சொந்தக்காரனே ஆட்களை வைத்து வெளியே கொண்டு போய் போட்டான்.
மறு நாள் விடியற் காலையில் ஒரே கூச்சலாய் இருந்தது அந்த குடியிருப்பில். பரமனின் வீட்டு முன்னால் தம்பி பொண்டாட்டியும், கொளுந்தன் பொண்டாட்டியும், இவன் வீட்டு முன்னால் “மண்ணை வாரி தூற்றி” உரத்த குரலில் சாபமிட்டு கொண்டிருந்தனர். நாசமா போகணும், சம்பளம் வாங்கி தர்றேன்னு, எங்க வூட்டு காரனுகளை கூட்டிட்டு போயி எல்லா பணத்தையும் குடிச்சு அழிச்சுட்டு வந்துருக்கான் உன் புருசன்” நீயெல்லாம்… காது கொடுத்து கேட்கமுடியாத வார்த்தைகள்.
விடிந்தது கூட தெரியாமல் மயங்கி கிடந்தான் பரமன், அவன் மனைவி அவர்களுடன் வெளியே கூச்சலிட்டு பதிலுக்கு மல்லு கட்டிகொண்டிருந்தாள்.
அன்று முழுவதும் கிடந்த பரமன் மறு நாள் எழுந்து வேலைக்கு செல்ல ஆறுமுகத்தை பார்க்க கிளம்பி கொண்டிருந்த பொழுது இவன் தம்பியும், மச்சினனும் வந்து நின்றனர். போலா மச்சா..
ஆறுமுகம் அடுத்த வேலை ஒன்றை பிடித்து விட்ட மகிழ்ச்சியில் இவர்கள் மூவரை எதிர்பார்த்து காத்து நின்றான்.
எதுவுமே மாறாமல்தான் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் இவர்களுக்குள் சண்டை வரலாம் ஒருவன் மனைவி இன்னொருவன் வீட்டு முன்னால் மண்னை வாரி தூற்றலாம், ஆனால் மறு நாள்..! எதுவுமே மாறாப்போவதில்லை, காரணம் இவர்களுக்கு இதை தவிர வேறொன்றும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமே இருப்பதில்லை.