எலி
ஐந்தா?
இல்லை அது இருபதுக்கும் மேல் இருக்கும்.
இல்லை இல்லை… ஐந்நூறு, ஆயிரம் கூட இருக்கலாம்.
கால்கள் காற்றுக்குள் ஓங்கி உதைத்து கொண்டிருந்ததே தவிர தப்பி ஓட முடியவில்லை.
ஓடினால், பிழைத்து கொள்ளலாம்.
பிழைத்து விடுவதால் என்ன செய்ய போகிறோம்?
ஆனாலும், அவைகள் கடித்து குதறி விடும். சதை துணுக்கல்களை தின்று விடும்.
எலிகள்.
எலிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி ஏறி குவிந்து குன்று போல் நிற்கும்போது…
அவற்றின் ஜோடி கண்கள் என்னை இல்லையில்லை என் உடலை ஆங்காரத்துடன் குறி வைத்தன.
நான் சாகப்போகிறேன் என்று நினைக்கவும் விழிப்பு வந்தது.
கனவு.
ஆயிரம் இல்லை என்றாலும் ஏழோ (அ) பதினைந்தோ எலிகள் கண்டிப்பாக இந்த வீட்டில் இருக்கிறது.
அவைகள் குட்டி போடும்.
குட்டிகளும் குட்டிகள் போடும்.
வந்தனா எனக்கு எலிக்குஞ்சு என்று பட்டப்பெயர் வைத்திருந்தாள், நாங்கள் அப்போது ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம். ட்ரையம்ப் மிடில் ஸ்கூல்…
எனக்கு அவளோடு காதல் அரும்பிய வயது அது.
அந்த வயதில் ஒரு பிள்ளைக்கு காதல் வருமா?
எனக்கு வந்தது.
அது காதல்தான் என இன்றளவும் நான் நம்புகிறேன்.
மெய்ஞ்ஞானமும், அறிவியலும் இந்த காதலை எப்படியெல்லாமோ வர்ணித்தும் வகைப்பாடும் செய்து வைத்தாலும் எனக்கென்னவோ அதுதான் காதல் என்று தோன்றுகிறது.
வகுப்பறையில் அவளுக்கு முத்தமிட்டு இருக்கிறேன், கன்னத்தில் கிள்ளி…
அவள் ஒருபோதும் அதை மறுத்ததும் இல்லை. புகார் செய்யவும் இல்லை. திருப்பி கொடுத்ததும் இல்லை.
காலப்போக்கில் யாருடனோ திருமணம் ஆகி சென்று விட்டாள்.
எனக்கு இன்னும் ஆகவில்லை. இனி ஆகப்போவதும் இல்லை.
கொல்லைப்புறம் செல்லும்போது கிச்சன் மேடையில் காதுகளை உயர்த்தி கொண்டு பெரிய எலி தாவி ஓடியது.
நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் தன்னை மாயமாக மறைத்து வைத்து கொள்வதைப்போல் வேகமாக ஓடியது.
அந்த வேகத்தில் மறைந்தது எலி அல்ல.
நிகழ்காலம் மட்டுமே.
என் கண்களில் நீர் திரையிட்டது.
எலிக்குஞ்சு என்று ஒருமுறை எனக்குள் சொல்லி பார்த்துக்கொண்டேன்.
வந்தனா எதற்காக எனக்கு பட்டப்பெயர் வைத்தாள்?
கீச்சுக்குரலில் பேசுவதால்தானோ?
அச்சிறு வயதில் எனக்கு பொஸஸிவ் குணம் அதிகம்.
அவமானத்தில் என் முகம் கறுத்து போகும். சிவந்த நிறம் கூட இல்லை. அவள் நல்ல சிவந்த நிறம்.
பட்டப்பெயரை என் காதுபட அவள் சொன்னது இல்லை. அவள் தோழிகள் மாலதி, ரேவதி, மாங்கனி மூலமே எனக்கு தெரிய வந்தது.
அதன்பின், இந்த மூவரையும் சில நாட்கள் காதலித்தேன். ஆனால் மனம் என்னவோ வந்தனாவை மட்டுமே நினைத்தது.
மீண்டும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தனாவை காதலிக்க தொடங்கினேன்.
ஏழாம் வகுப்புக்கு வந்ததும் செக்க்ஷன் பிரித்து விட்டார்கள்.
துக்கம் நெஞ்சை பிழிந்தது.
அடுப்பறை மேடையில் எலிகள் பிளாஸ்டிக் குடுவைகளை கருவி இருந்தன.
இந்த எலிகளை எப்படி வீட்டை விட்டு துரத்தலாம் என்று யோசித்தேன்.
தாத்தா வைத்திருந்த எலிக்கூண்டு பரண் மூலையில் இருக்கிறது. துரு பிடித்த கூண்டு.
அதில் மசால்வடை வைத்தால் சிக்கும்.
முன்பு எல்லாம் எலிகளை உயிருடன் பிடித்து பள்ளிவாசல் சந்துக்கு பின்னே கொண்டு விட்டு விடுவது எங்கள் தெரு பழக்கம்.
ஆனால், இந்த எலிகள் எப்படியோ அதில் நிபுணத்துவம் பெற்று மசால் வடையை தின்றுவிட்டு லாகவமாக தப்பி செல்ல கற்றுக்கொண்டு விட்டன.
கூண்டுகள் துருப்பிடிக்க தொடங்கியது.
இடுப்பு உயரத்துக்கு ஒரு மூங்கில் கம்பை வைத்து குறிபார்த்து எலியின் மூக்கில் ஓங்கி அடித்து அதில் குருதி கசியும் வரை திரும்ப திரும்ப அடித்தே கொல்லும் வழக்கம் எங்கள் அக்ரஹாரத்தில் மெல்ல பரவியது.
மாமிகள் கட்டில் மீது ஏறி நின்று டிராபிக் கான்ஸ்டபிள் போல் கைகளை சுழற்றி தோ பாருங்கோண்ணா வாசப்பக்கமா ஓடறது, அடிங்கோ அடிங்கோ என்று கூச்சலிட மாமாக்கள் எகிறி ஓடும் காட்சிகள்…..
இந்த வீர விளையாட்டு எனக்கும் பிடிக்கும். நாளடைவில் எலி அடிப்பதில் விற்பன்னன் ஆனேன்.
நாட்டு எலி, சுண்டெலி, பெருச்சாளி, வயல் எலி என்றெல்லாம் பார்த்த பார்வையில் அதன் ஜாதியை கண்டுபிடிக்க தெரிந்து போனது.
மூஞ்சூறு மட்டும் பிள்ளையார் வாகனம் என்பதால் தப்பித்தது.
பெருச்சாளி முதுகு திண்ணென்று இருக்கும். அடி வாங்கிக்கொண்டு ஓடும்.
பயத்தில் கை நடுங்கினாலும், அதை நான் தாறுமாறாக அடிப்பேன்.
தொம் தொம்மென்று சப்தம் வரும்.
எப்படியோ தப்பித்து விடும்.
ஒவ்வொரு எலியும் என் கையால் சாகும்போது எனக்கு வந்தனாவின் நினைவு வரும்.
அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும்.
ஆறாம் வகுப்பில் ஒரு அந்தி மாலையில் மழை மேகம் சூழ வான் மேகங்களே அல்லது அழகிய விழிகளில் அறுபது கலைகளும் பாடல் ஒலிக்கும்போது நான் அவள் கரம் பற்றி ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் சொல்ல நாள் பார்த்து காத்திருந்தேன்.
ஆனால்…
எல்லா அந்தி மாலை நேரத்திலும் நான் என் சித்தி வீட்டில் டியூசன் படிக்க போக வேண்டியிருந்தது.
மழை வரும்போது வச்ச பார்வை தீராதடி பாட்டுதான் கேட்டது.
ஒருநாள்….
மழை வந்தது.
டியூசன் இல்லை.
அந்தி நேரம்.
வந்தனா வீட்டில்தான் இருந்தேன்.
தைரியம் மட்டும் வரவில்லை.
என் மனதுக்குள் ஆயிரம் முறைக்கு ஐ லவ் யூ மட்டும் சொன்னேன். அவளுக்கு எப்படி அது கேட்கும்?
வாய்ப்பு பறிபோனது.
வந்தனா எட்டாம் வகுப்புக்கு எங்கள் ஊர் ஹைஸ்கூலில் சேர்ந்தாள்.
இரவெல்லாம் அவளை மனதுக்குள் நினைத்துக்கொண்டு சிவனிடமும் காளி தேவியிடமும் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன்.
பரணில் எலி திடுதிடுவென ஓடும் சப்தம் கேட்டது. ஓட்டத்தை வைத்து பார்க்க அறுநூறு கிராம் எடை இருக்கும்.
நன்கு புடைத்த காதுகள். நீளமான கருப்பு வால். ஆளை அசத்தும் மிளகு கண்கள். இளம் முடி. வழு வழு அடி வயிறு. லேசான நாற்றம்.
விலங்குகளை ஹிம்சையாக கொல்வதில் விருப்பம் இல்லாது போனது.
காரணம், பிரியமாக நாய்க்குட்டி வாங்கி பிரியமாக வளர்த்து பிரியம் இல்லாமல் சாக கொடுத்ததுதான் என்று இப்போது நினைக்கிறேன்.
ரோஸி இருந்தவரை வீட்டில் எலிகளின் தொல்லை என்பது அறவே இல்லை.
எனக்கு எலி அடிக்கும் பழக்கமும் மறந்து விட்டது, சில நேரங்களில் ஒரு எலிகுஞ்சு கிடைத்தால் அதை தூக்கி கொஞ்சலாம் என்றும் தோன்றியது.
எலி வளர்ப்பு பிராணி ஆக முடியாது.
அறிவியல் எலிகளுக்கு பாஷாணம் என்று விஷத்தை தயாரித்தது.
அறிவியல் வஞ்சகம் இல்லாதது. ஆகவே மனிதருக்கும் உதவும்படி தயாரித்தது.
நான் சிறுவனாக இருந்தபோது…
எலி மருந்தை என் மாமா ஹிரோஷிமா அணுகுண்டை கையாள்வதுபோல் செயல்திட்டம் வகுத்து பயன்படுத்துவார்.
எலிகளின் நடமாட்டம், இனத்தொகை, அதன் பழைய புதிய பொந்துகளின் இருப்பிடம் என்றெல்லாம் கணக்கீடு செய்து நெல்லிக்காய் அளவு உருட்டி வைப்பார்.
அதன்பின் அவர் நிமிர்ந்து நிற்கும் ஆறடி பூனையாக மாறி விடுவார்.
அந்த விஷம் கொஞ்சம் பவர் கம்மி என்று தெரிந்துதான் வாங்குவார்.
எங்கள் குடும்பத்திலும் கஷ்டம் உண்டே.
பூனையாக மாறியவர் தினந்தோறும் செத்து விழும் எலிகளை வாசலில் தூக்கி எறிய எறிய எலிக்குடும்பத்தில் காலன் தன் கோர விளையாட்டை நிறுத்தும்வரை மனிதராக மாறவே மாட்டார்.
இவையெல்லாம் ரோஸி என்ற எங்கள் நாய்க்குட்டி வரும்வரை வரை நடந்தது. அது வந்ததும் எலிகள் இல்லை.
நான் கல்லூரி முடித்துவிட்டேன்.
கல்லூரிக்கு போய் கொண்டிருந்த காலத்தில் வந்தனாவை பார்த்தேன்.
அவள் பெண்கள் கல்லூரியிலும் நான் வெளியூரில் ஒரு கல்லூரியிலும் ஒரு ஆழாக்கு பிரயோஜனம் இல்லாத கோர்ஸை படித்து கொண்டிருந்தோம்.
அற்புதமிக்க மீசையும் வளர்ந்து விட்டது, எனக்குத்தான்…
அவள் மூன்று நிமிடங்கள் நடக்கும் ஒரு ஆள் அரவமற்ற சந்துக்குள் நேரம் பார்த்து அவள் கையை பிடித்து ஐ லவ் யூ என்று சொன்னேன்.
புன்னகைத்தாள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பேரின்பம் வசீகரமாக தீண்டிவிட்டு போகும் தினம் என்று ஒன்று உண்டு.
அதுதான் அன்று எனக்கு.
அவள் கடந்து போனதும் மளமளவென்று காரியங்கள் மனதுக்குள் நடந்தேறின.
பேச்சு வார்த்தைகள் நடந்து, முட்டல் மோதல்கள் கடந்து,கல்யாண பந்தல் நட்டு, தாலி கட்டி, முதல் பிள்ளைக்கு (பெண்) கணக்கு நோட்டு வாங்க கடைவீதிக்கு நடந்து போகும் நான்….
கனவு.
இதுவும் கனவு.
வந்தனா அன்று எனக்கு எதிர்ப்பும் சொல்லவில்லை, கேட்டதற்கு மறுப்பும் சொல்லவில்லை.
திடீர்ன்னு இப்படி சொன்னா….
எலிக்குஞ்சு என்று முடிப்பாளோ என எதிர்பார்த்தேன்.
என்ன சொல்வேன் ஸ்ரீ என்று முடித்தாள்.
போய் விட்டாள்.
அந்த சந்தில் அப்படி அடிக்கடி பேச முடியாது.
வந்தனா கிடைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பகலில் அமைதி.
இரவில் குடைச்சல் சப்தம்.
கடந்த ஐந்து நாட்களாக பார்க்கும்போது இந்த வீட்டில் எட்டு எலிகளாவது இருக்கும் என்று மனக்கணக்கு தெரிவித்தது.
வீட்டில் நான் மட்டுமே இருக்கிறேன்.
சலிப்பும் தனிமையும் மட்டுமே துணை. இந்த எலிகள் இருந்துவிட்டு போகட்டுமே என்று தோன்றியது.
ஆனால்,
பாத்திரங்களை உருட்டுவதும் இரவில் உருவாக்கும் குடைவு சப்தங்களை கேட்கும்போதும் பதற்றம் வந்தது. பயம் வந்தது.
வந்தனாவின் பிள்ளைகள் இப்போது கல்லூரிக்கு படிக்க சென்று இருக்கலாம்.
அவளை கட்டி கொடுத்த இடம் மதுரை மதுரை திருச்சி என்றெல்லாம் சொன்னார்கள்.
போகவும், கேட்கவும் பயம் வந்தது. பயத்தை விடவும் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்தது.
ஐ லவ் யூ சொன்னபோது புன்னகை பூத்த வந்தனா எனக்கு துரோகம் செய்ய மாட்டாள் என்றே தோன்றியது.
அவளை மிரட்டி திருமணம் செய்து வைத்து இருப்பார்கள் என்று எனக்கு ஆறுதல் சொல்லி கொண்டேன்.
நியாயமாக நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
செய்யாமல் போனதற்கு காரணமும் அதே பயம்தான்.
காலம் என்னை தனிமையில் விட்டு விட்டது.
சுற்றம் நட்பு எல்லாம் இருந்தும் எனக்கு அவை அனைத்தும் சுமை என்றே தோன்றியது.
ஏராளமான புத்தகங்கள் வாங்கி வீட்டை கிடங்காக மாற்றி இருந்தேன்.
எலிகள் அதை கடித்து பதம் பார்த்தால்?
அந்த எலிகளை இனி விட்டு வைக்க கூடாது என்று முடிவு செய்தேன்.
ஜெபமணி நாடார் கடையில் சென்று ஒரு எலி மருந்து பாக்கெட் என்றேன்.
நாடார் எடுத்து அதன் விலையை தன் கண்களை குறுக்கி நோட்டம் விடும்போது….
நல்லா ஸ்ட்ராங்கா இருக்குமா? உடனே வேலை செய்யுமா என்று அப்பாவியாய் நான் கேட்க…
நாடார் என்ன நினைத்தாரோ….
அதை மீண்டும் ரேக் உள்ளே வைத்துவிட்டு வீட்ல வேற யாரையாச்சும் வரச்சொல்லி வாங்கிக்கிடுங்க. நீங்க நம்மளை தப்பா நினைக்க கூடாது என்று அடுத்த ஆளை கவனிக்க போய் விட்டார்.
அவமானமாக இருந்தது. அதை விடவும் துக்கமாக இருந்தது.
என் வீட்டில் என் வந்தனா இல்லை.
மனதுக்குள் அவள் குறித்த ஏதோ சில சிதிலமான நினைவுகள் உண்டு.
அந்த நினைவுகளை பாலீஷ் போடும் சில இளையராஜா பாடல்கள் நிரம்பிய பென் ட்ரைவ் ஒன்றும் ஸ்பீக்கர் மீது தொற்றிக்கொண்டு இருக்கிறது.
இவற்றை விட்டால் எலிகள்.
அந்த எலிகளை விட்டே எலிகளுக்கு மரணமருந்து வாங்க முடியுமா?
வீட்டுக்கு வந்து விட்டேன்.
ரேழியில் தாய் எலி முன்னே செல்ல மூன்று குட்டி எலிகள் கூடவே ஓடின.
குடும்பத்தை பெருக்கி விட்டன.
கட்டு பிரிக்காமல் இருந்த புத்தகங்களை பார்க்க பார்க்க கிலி கூடியது.
இதே போன்ற அடி வயிற்று கிலியை முன்பு அனுபவித்ததும் உண்டு.
தெற்கு அக்ரஹாரத்தில் வசித்த வந்த வந்தனா ஆச்சாரமான சௌராஷ்டிர குடும்பத்தில் பிறந்தவள்.
அவா என்ன ஜாதிம்மா என்று கேட்டபோது அவாளும் நம்மளை மாதிரிதான்… என்ன, அவா பாஷை கடுகடுன்னு இருக்கும் என்று பால் வார்த்தாள் என் அம்மா.
ஜாதி பிரச்னை வராது என்று நம்பிக்கை வந்தது.
எல்லாம் அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்து வந்த குழப்பம்தான் இது.
இல்லையென்றால் ஜாதி பற்றி எல்லாம் யோசிக்கும் வயதா அது?
லட்சுமணனுக்கு போன் செய்து நாடார் சொன்னதை சொல்லி எலி மருந்து பாக்கெட் வாங்கி வர கேட்டு கொண்டேன்.
சொன்னதும், சில பாக்கெட்ஸ் கொண்டு வந்து கொடுத்தான்.
டேய், இப்பவும் சொல்றேன், ஒரு கல்யாணத்தை கெட்டிட்டு நிம்மதியா இருக்க பார்றா… இந்த எழவு எடுத்த புஸ்தகத்தை எல்லாம் தூக்கி அடிச்சிட்டு சந்தோஷமா இருக்க பாரு என்று சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு கிளம்பினான்.
என் மாமாவை நினைத்துக்கொண்டு நெஞ்சில் துயரம் முட்ட நான் ஒரு பாக்கெட்டை பிரித்தேன்.
ஜாதி ஒரு பிரச்னை இல்லை. ஆனால் பதினைந்து வயதுதான் பிரச்சனை.
மேலும், வந்தனா வீட்டில் வந்தனாவுக்கு மேலும் கீழுமாக பெண்கள் பெண்களாக இருந்தனர். ஆண் வாரிசுகளே இல்லை.
சம்பாதித்தல் என்ற சொல்லே அறியாத வயது. சாலரி என்ற சொல்லே இருபது வயதில்தான் தெரியும்.
இருபது வயதில் வந்தனாவை மணமுடித்து அனுப்பி விட்டனர்.
வீட்டில் பத்திரிகை கொடுத்தும் அதை மறைத்து விட்டனர்.
ஒரு சௌராஷ்டிர தோழன் விஷயத்தை சொன்னபோது கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.
எனக்கும் திருமண வயது வந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தபோது பெருமிதமாக இருந்தது.
அதனால் ஒரு உபயோகமும் இல்லை.
வாக்கிங் போய்விட்டு வந்தபோது தாழ்வாரத்தில் ஒரு பெரிய எலி மயங்கி கிடந்தது.
கிட்டே போனால் வால் துடித்தது.
அமைதியாக மரணத்தை தழுவட்டும் என்று கதவை மூடி வைத்து விட்டு உள்ளே வந்தேன்.
கொல்லையில் காகங்கள் கரையும் சப்தம் கேட்டது.
இரண்டு நாட்களில் வேகமாக எலிகள் குறைய தொடங்கின.
ஆனால் எங்கேயோ சென்று அவைகள் தம் மரணத்தை ஏற்றுக்கொண்டன. நான் இறந்த எலிகளை பார்க்கவில்லை
தாய் மட்டும் இறந்தால் குட்டிகளின் கதி?
என் வீட்டில் அடுத்த வேளை பாலுக்கோ உணவுக்கோ அனாதையாக சுற்றுமே?
என் வீட்டில் நானே அனாதைதானே?
எலிகளுக்கு அது புரியுமா?
பூமியில் விலங்குகள் அனைத்தும் அனாதைகள்தாம். ஆனால் எதுவுமே அனாதைகள் இல்லை.
ஆனால், மனிதர்கள்?
எனக்கு தலை சுற்றியது. சமீபத்தில் வந்தனாவின் நினைவுகள் நிறைய வர துவங்கி விட்டன.
சென்று பார்த்தால் என்ன? யாரிடம் எப்படி விசாரிப்பது?
அவள் திருமணம் முடிந்ததும் பக்கத்து வீட்டு அலக்ஸ்சாண்டருக்கு தங்கள் வீட்டை விற்றுவிட்டு சென்று விட்டார்கள்.
மதுரையில் சௌராஷ்டிர மக்கள் அதிகம் என்பதால் எங்கள் ஊரில் இருந்து மினி மைக்ரேட் ஆகி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
எனக்கு மட்டுமே அழகாக இருந்த என் காதல் கதை என் தெருவில் அப்படி பார்க்கப்படவில்லை என்பது புரியாத வயதில் வந்த காதல் அது.
புரிந்தபோதும் அதில் குற்றமாக என்ன இருந்தது என்பதும் புரியவில்லை.
வந்தனாவுக்கும் புரிந்திருக்காது.
என்னை பழி வாங்கும் எலிகள் வந்த கனவிலிருந்து விழித்து கொண்டதும் உடல் வலித்தது.
எலிகள் இனத்தையே ஒழித்து விட்ட பாவத்தை செய்தது போல் உணர்ந்தேன்.
கட்டில் அடியில், மேசையில், அலமாரியில், ரேக்கில் இருந்த அத்தனை புத்தகங்களையும் சுற்றி சுற்றி பரிசோதித்து எலிக்கடி வாங்கவில்லை என்று உறுதி செய்தேன்.
தலை வலித்தது.
காஃபி….
கிச்சனில் நுழைந்தபோது ஒரு சிறு எலி துடித்து கொண்டிருந்தது.
பாத்திரங்களை நான் நகர்த்த நகர்த்த ஒவ்வொரு ஓசைக்கும் சப்தத்துக்கும் நடுவில் சிக்கிய அந்த சிறிய உடலை மரணபயம் தூக்கித்தூக்கிப்போட்டு நடுநடுங்க வைத்தது.
சே….
கதவை மூடிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தேன்.
தாழ்வு மனப்பான்மை என் நெஞ்சை பிளந்தது.
எனக்கு முரட்டுத்தனம் இருக்கிறதே தவிர தைரியம் இல்லை.
பயம் இருக்கிறதே தவிர அன்பும் ஈவும் இல்லை.
எனக்கு வந்தனாவிடம் இருந்தது உண்மையில் காதல்தானா என்று கேட்டுக்கொண்டேன்.
அங்கிருக்க பிடிக்காமல் வாசலை பூட்டிக்கொண்டு வெளியேறினேன்.
பஸ் ஏறினேன்.
குமாருக்கு பேசினேன்.
போடியில்தான் இருக்கேன் வா. மதியம் இங்கேயே சாப்பிட்டு சாயந்திரம் உன் வீட்டுக்கு போய்க்க, இல்லாட்டி தங்கிட்டு நாலுநாள் கழிச்சி போய்க்க.
போனை வைத்து விட்டான்.
போடி நகரம்.
எலி செத்து இருக்குமா?
இன்னும் எவ்வளவு நேரம் துடிக்கும்?
வயிறு வீங்குமா?
தாகம் எடுத்து குடல் வரை எரியும் என்று சொன்னார்களே?
அடித்தே கொன்றிருக்கலாமோ?
போடி, மூன்றாந்தலில் இருந்து கால் போன போக்கில் நடந்துவிட்டு மதியம் குமாரை பார்த்தேன்.
நல்லவேளை… வந்துட்டே, வா தாசில்தார் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வரலாம்.
பைக் பின்னால் அமர்ந்தேன்.
தாசில்தார் அலுவலகத்தில் கூட்டம் இல்லை.
தாசில்தார் ஒரு பெண். ஓடிசலான ஆனால் மஞ்சள் நிறத்தில் இருந்தாள்.
என் வயதுதான் இருக்கும்.
என்னை பார்த்தவள் என் பெயரை சொல்லி அழைத்தாள்.
நீங்க?
மாங்கனி. நினைவு இருக்கா?
பேசிட்டு இருங்க. இப்போ வரேன் என்று இங்கிதமாக குமார் கிளம்பினான்.
ஆங்… இருக்கு. உன்னை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு மாங்கனி.
பேசி கொண்டிருந்தோம்.
வந்தனாவை பற்றி கேட்க ஆவலாக இருந்தது.
போன மாசம் மதுரைக்கு போய் இருந்தேன்.
ம்ம்ம்.
இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு வேண்டுதல் இருந்தது. அங்கே வந்தனாவை பார்த்தேன்.
நான் நிமிர்ந்து பார்த்தேன்.
எப்படி இருக்காங்க மாங்கனி?
எலிக்குஞ்சு பார்த்தியான்னு கேட்டுச்சு.
மனதை விஷமூட்டப்பட்ட எலிகள் ஒன்று கூடி பிறாண்டி கிழிக்கும் வலி வந்தது.
காட்டிக்கொள்ளாமல் சிரித்தேன்.
சிரிக்காதே… நீ அவளுக்கு மகாபலிபுரத்தில் இருந்து போன் செஞ்சு பேசினியா என்று கேட்டாள் மாங்கனி.
மகாபலிபுரம்?
நான் சென்னையில் பத்திரிகை மாத இதழில் வேலை செய்து வந்தேன்.
தினகரன் அழைப்பின்பேரில் வியாழன் அன்று மகாபலிக்கு போனேன்.
அந்த கடற்கரையில் குளிர்ந்த இரவில் மது இறங்கியதும் முதலில் நினைவுக்கு வந்தது வந்தனா. தொடர்ந்து வந்தது அழுகை.
எல்லாவற்றையும் தினகரன் கேட்டான்.
தோஸ்து… ஒருநாள் வாழ்ந்தால் கூடியும் போதும். எவளை நினைக்கிறோமோ அவ கூட வாழ்ந்துடனும். கிளம்பு.
எங்கே?
போன் பூத் போய்ட்டு கால் பண்ணுவோம். அவகிட்ட நேரே பேசிடு. எல்லாம் பேசிடு.
போன் செய்தேன்.
முதலில் எடுத்தது அவள் அப்பா.
பின் அவள் அம்மா.
இருவரிடமும் ஒன்றுதான் சொன்னேன்.
வந்தனாகிட்டே போனை கொடுங்க.
கொடுக்கிறேன். நீங்க யார்னு சொல்லுங்க.
தினகரன் முகத்தை பார்த்தேன்.
அவன் என் தோள்பற்றி எச்சரித்தான்.
நீ யார்னு சொல்லாதே. அவள்கிட்டே பேசணும் அவளுக்கு தெரியும்னு திருப்பி திருப்பி சொல்லு.
அப்படியே சொன்னேன்.
போன் வைக்கப்பட்டது.
அதன்பின் எப்போதும் அவளுக்கு செய்ய மனதில் தைரியம் வரவில்லை.
மாங்கனி முகத்தை ஏறிட்டு பார்த்தேன்.
ஒருதரம் பேசினேன் மாங்கனி, அன்னிக்கு என்ன ஆச்சுன்னா…
அதை நீ நேரில் பேசி இருக்கலாமே? ஏன் நேரில் வந்து வந்தனா முகத்தை பார்த்து பேசலை நீ?
பேசினா பெருசா என்ன ஆகியிருக்கும்?
நீ இங்கே இப்போ தனியா வந்து இருக்க மாட்டே. வந்தனா கூட வந்து இருப்பே. உன் ரெண்டு பிள்ளைகளும் காலேஜில் படிச்சிட்டு இருக்கும்… அப்புறம்….
நான் வெளியில் வந்து விட்டேன்.
கால்கள் தள்ளாடின.
மனசுக்குள் விஷம் தின்ற எலிக்குஞ்சு துள்ளி துள்ளி விழுந்தது.
தண்ணீர் குடிக்க குடிக்க தாகம் எடுத்தது.
அலுவலகத்தை விட்டும் வெளியில் வந்தேன்.
கண்கள் இருட்டியது.
பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன்.
எதிரில் இருந்த முனிசிபல் சாக்கடைக்கு வெளியே காகங்கள் சூழ்ந்து ஒரு இறந்த பெருச்சாளியை ஆழமாக கொத்தி இழுத்து கொண்டிருந்தன.
அன்று இரவே குமாரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தபோது மணி இரவு ஒன்று.
இன்று வீட்டின் தனிமை பேய் நகங்கள் போல் இருக்கும் என தோன்றியது.
தலையில் மீண்டும் வெறி ஏறியது.
பெண்டாட்டி பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட தினகரன் மீது வெறி வந்தது.
காலையில் உயிருக்கு துடித்து கொண்டிருந்த சுண்டெலி மீதும் வெறி வந்தது.
அதையாவது நசுக்கி கொல்லலாம்.
ஷுவை கழற்றாமல் கதவுகளை திறந்து எலி இருக்குமிடம் நோக்கி போனேன்.
எலி அங்கே இல்லை.
அது எங்கேயும் இல்லை.
எது இருந்தது என்றால்…
தனிமை.
மிச்சமான எலி மருந்து பொட்டலங்கள்.