காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்

காலைத் தேநீரும் சிதறிய சிந்தனையும்

கேரளாவில் நீங்கள் சாலைவழி பயணம் மேற்கொண்டால் அதில் உள்ள சுகமே தனியானது. பயணம் செய்யும் எல்லா சாலைகளுக்கு பக்கங்களில் பச்சைப்பசேல் என பயிர்களும் மரங்களும் இருக்கும். இயற்கை தன் அழகை விரித்து தலையாட்டும் காட்சி கண்களுக்குக் குளுமையானது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் மாறுவது தெரியாமல் சாலைகள் செல்லும். நாம் எல்லையை கடப்பதை மைல் கல்லுகளால் தான் அறிவோம். மற்றும் ஒரு அடையாளம் அந்த எல்லைக் கல்லின் அடுத்து வரும் டீக் கடையைக் கூறலாம்.ஆம் எந்த நேரமும் தேநீர் கிடைப்பது இந்த நெடுஞ்சாலைகளில் தான். இந்தக் கடைகள் பயணம் செய்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும்,சாமான்களைச் சுமந்து செல்லும் லாரிகளை ஓட்டிச் செல்பவர்களுக்கும், பேருந்துகளை ஓட்டிச் செல்பவர்களுக்கும் ஒரு வரப் பிரசாதம். பயணிகளும் ஓட்டுனர்களும் அங்கு நிறுத்திச் சிறிது நேரம் ஒய்வு எடுத்து தேநீரைச் சுவைத்து பின்னர் புத்துணர்வோடு மீண்டும் செல்வர். அவ்வாறு நடக்கும் ஒரு டீக் கடையை பற்றியது தான் இக்கதை. கதை என்று கூறுவதை விட தகவல் எனக் கூறலாம்.
மலையாள மொழியில் எழுதிய வார்த்தைகளுடன் - அதன் அர்த்தத்தை தமிழிலும் எழுதியுள்ள அந்த டீக் கடைப் பலகை ஒரு புதிய அனுபவம்.இந்தக் கடை கோவையில் இருந்து பாலக்காடு வழியாக பல்லசேனா கிராமத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்து இருக்கிறது.ஆகவே தான் இந்த இரு மொழி கலந்த பெயர் பலகை. இந்த கடையின் முதலாளி மற்றும் சில வேலையாட்களும் தமிழிலும் மலையாளத்திலும் பேசக் கூடியவர்கள். கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் நமக்குப் புரியும் படி பேசுவார்கள்.
சில நேரங்களில் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் மலையாளம் கலந்த தமிழாக இருக்கும் மரியாதை கேள்விக்குறியாகும். நீங்கள் கல்லூரி விடுதியில் இருந்து படிப்பவராக இருந்தால்,வீட்டில் இருந்து மாதம் ஒரு முறை பணம் வரும் ரகத்தை சேர்த்தவரானால் நான் கூறும் இந்த வாக்கியங்களின் உண்மையை அறிந்திருப்பீர்கள். பணம் வரும் முதல் வாரம் தங்க வாரமாக இருக்கும்,காகித நோட்டுக்கள் கையில் புழங்கும் இரண்டாவது வாரம் வெள்ளி வாரமாகி,பெரிய அளவில் நாணயங்கள் பாக்கெட்டுகளில் நிறைந்து வழி நடத்தும், மூன்றாவது வாரம் செம்பு வாரமாகும் இந்த நேரத்தில் பைசாக்களை தேடித் தேடி எடுக்க வாரம் நடக்கும். நான்காவது வாரம் காலி வாரமாகி யாருக்கேனும் பிறந்த நாள் வருகிறதா என்ற எதிர்பார்ப்பில் காப்பு வாரமாக மாறும். அப்பொழுது "டீ" எனப்படும் தேநீரின் மகத்துவமும், முக்கியத்துவமும் நீங்கள் அறிவீர்கள்.ஏனென்றால் காலி பாக்கெட் தருணங்களில், உணவே இந்த "டீ" தான். நாம் வாழ்க்கையில் பயணம் செய்யும் அனைத்து பாதைகளும் நமக்கு இன்பத்தையும் , சந்தோஷத்தையும் நோக்கி நம்மை வழிநடத்துவதில்லை.அப்படி நான் தேர்ந்தெடுத்த ஒரு பாதை என்னைக் கேரளாவில் ஒரு தொலைபேசி தயாரிக்கும் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தின் கட்டுமான வேலையை நடத்தி முடிக்கும் பொறுப்பை என் கையில் ஒப்படைத்தது . 300 நாட்களுக்கு மேல் வேலை செய்த பின்னும் முன்னேற முடியாமல் பாதி வேலை முடிந்து இன்னும் மீதி வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வேலை எதிர்பார்த்த படி முடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்களை வரிசைப்படுத்தலாம் கேரளாவின் வேலை நிறுத்தங்கள், யூனியன் பிரச்சனைகள், கூலியாட்கள் மாறும் விதம் அதில் வரும் நுணுக்கங்கள் வேலையாட்களின் இட மாற்றங்கள், வேலை செய்யும் பணி நேரங்கள் என்று பலவிதமான தடைகள். இவைகள் யாவையும் எனக்கு இரவில் கண்களை மூட முடியாமல் கழியும் நாட்களை பரிசாகத் தந்தது.அப்படி ஒரு சோம்பேறித்தனமான காலையில் எழுந்தவுடன் முதலில் எனக்கு வேண்டிய டீயை செய்ய மனமில்லாமல் பக்கத்தில் உள்ள டீக் கடைக்குச் சென்றேன்.
டீக் கடையும் டீக் கடைகாரரும் புதிதாக வரும் என்னை வரவேற்றனர்.அவர்கள் தோற்றம் மற்ற இடங்களில் இருந்து வித்யாசமாக இருந்தது.
டீக் கடைக்காரரின் வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம். அவர் வெள்ளை குர்தா அணிந்து வேஷ்டியை ஒத்த மங்கலான வெளிர் நிறத்தில் சுடியும் அணிந்திருந்தார். காந்தி குல்லாவும் முகம் மறைக்கும் தாடியுடன் நின்றிருந்தார். கடையில் நான் கண்ட பலகையில் எழுதியிருந்த வார்த்தைகள் ஆச்சரியத்தை அளித்தன.
"இங்கு புகையிலை பொருட்கள் விற்கபடுவதில்லை" எனக் கையால் எழுதப்பட்ட வாசகம்!
"ஜங்க் பூட்ஸ்" (Junk Foods)என அழைக்கப் படும் எண்ணையில் வறுத்த பிராண்டட் சிப்ஸ் பாக்கெட்டோ,மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த நேரப்போக்கு உணவுவகைகளோ கார்போனேடட் ட்ரிங்க்ஸ்" (carbonated drinks)எனப்படும் சோடாக்களோ பழ ரசங்களை குருக்கி பதனிட்டு அதனுடன் கலந்த சோடாக்களையோ மற்ற உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருள்களோ காணவில்லை.
கடையில் கண்ணாடி காட்சிப் பெட்டிகளில் குடிசை தொழில் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட தின்பண்டங்கள் மட்டும் இருந்தன.
கண்ணாடி காட்சிப் பெட்டிகளின் மேல் வைக்கபடிருந்த இரண்டு தேநீர் குவளைகள் என் கவனத்தை ஈர்த்தன. இரண்டிலும் தண்ணீர் அதில் தேநீர் துகல்கள்.
ஆச்சரியங்களைக் காட்டிலும் பசியின் மிகுதியால் உள்ளிருந்த கடைக்காரரை நோக்கி "ஏக் சாய் தேஜியே" என எனது கொச்சையான ஹிந்தியில் நான் கூற உள்ளிருந்து என்னை நோக்கி வந்த அவர் "யெஸ் சார் , என்ன வேண்டும் எனத் தமிழில் கேட்க நான் என்னையே திட்டிக் கொண்டேன் உடையைப் பார்த்து எதற்கு உனக்கு முழுமையாக தெரியாத மொழியில் பேச வேண்டும்.
நான் மீண்டும் " ஒரு டீ " என்றேன்.
"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க கிளாஸ்களை ஸ்டெர்ரெயில்(sterile) செய்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.
இது எனக்கு மற்றும் ஒரு ஆச்சரியம்.
ஏனென்றால் அவர் கூறியது போல அடுப்பின் மேல் கொதிக்கும் தண்ணீரில் கண்ணாடி கிளாஸ்கள் நீராடிக் கொண்டிருந்தன.
கிடைத்த அந்த இடைவெளி நேரத்தில் அவரை என்னிடம் ஈடுபட வைக்க நான் என் எண்ணத்தில் தோன்றிய கேள்விகளை அவர் முன் வைத்தேன்.
முதலில் கண்ணாடி காட்சி பெட்டிகளின் மேல் இருந்த கண்ணாடி குவளைகள் பற்றி
அதற்கு அவர் அளித்த பதில்
"ஒன்று உண்மையான டீ தூள் ; மற்றொன்று கல்மிஷம் " என்றார்
கல்மிஷம் என்ன ?? என்றேன்
ஆமா சார் கலப்பட டீ தூள் கல்மிஷம் தானே?? என்றார்
மேலும் தொடர்ந்தார்..
"நல்ல டீ தூள் என்பது கொதிநிலையில் நிறம் மாறும், கலப்பட டீ தூள் உடனே நிறம் மாறும்"
"உங்களைப் போல படித்து விட்டு இங்கே வரவங்க இதை தெரிஞ்சுக்கணும் என்று இங்கே இதைக் காட்சிக்கு வைத்து இருக்கேன்" என்றார்.
"நல்ல விளம்பர யுக்தி" என்றேன்.
"இது விளம்பரம் இல்லை சார், விழிப்புணர்வு.
எனது கொள்கை அனைத்திலும் மக்களுக்கான நல்வாழ்வும், விழிப்புணர்வும் . ஆகவே தான் இந்த முயற்சி" ..என்றார்.
இப்போதுதான் எனக்கு புரிந்தது ஏன் குடிசை தொழில் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுக் கொள்முதல் செய்யப்பட்ட தின்பண்டங்கள் "மட்டுமே" புகையிலை பொருட்களுக்கு இடம் இல்லை என எழுதிய வாசகத்தின் முழுப்பொருள்.
மேலும் அவர் தொடர்ந்தார் எங்களிடம் கார்போனேட்டட் குளிர்பானங்கள் இல்லை
நாங்கள் பயன்படுத்தும் தேநீர் துகள்கள் விலை மிகுதியாக இருந்தாலும் நேரடியாகத் தேயிலை தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுபவை.
இல்லாதவருக்கும் , கைவிடப்பட்டவருக்கும் இங்கு என்றுமே தேநீர் இலவசம் தான் என்றார்.
நான் என் ஆர்வ மிகுதியால் அவர் காதில் கிசுகிசுத்தேன் இங்கே போட்டி வியாபாரம் அதிகம் ஆச்சே , உங்கள் யுக்தியையும் சிந்தனையையும் மத்தவங்க எப்படி என நான் முடிக்கும் முன்னரே
"அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை சார், எனக்கு மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யவேண்டும் அதை அவர்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்.
அது நல்ல எண்ணமா இருந்தாலும் சரி கொள்கையாக இருந்தாலும் சரி டீ யா இருந்தாலும் சரி என முடித்தார்.
ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட கண்ணாடி குவளையில் தேநீர் கொண்டு வந்து அதை சூடு தாங்கும் அட்டையில் செய்த கீழ் கவர் வைத்து அதிலிருந்து வெளிப்படும் கைப்பிடியுடன் கொடுத்தார். அவர் கொடுத்த விதம் மிக நாகரிகமாக இருந்தது. குடித்து முடித்தவுடன் அட்டையில் உள்ள ஒரு ஸ்டிக்கரை எடுத்து அதில் அச்சடித்த எண்ணைக் காட்டினார் அந்த எண்ணுக்கு ஏற்றவாறு சதவிகிதத்தை குறைத்து .. தேநீர்க்கு பணம் கேட்டார். இந்த புதிய அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பணம் கொடுத்து நன்றி சொல்லி விட்டு நகர்ந்தேன்.
எதிரில் உள்ள தெருவில் சலூன் கடையில் சென்று அமர்ந்தேன்முடி திருத்தி ஷேவிங் செய்துகொள்ள. சலூன்காரர் கிருஷ்ணன் குட்டி எனக்கு பழக்கமானவர் ஒரு வருடமாக இங்கு இருப்பதால் பலமுறை வந்துள்ளேன்.
"சாரே காலத்து ஊனு கழிஞ்சோ ? (என்னா சார் காலை சாப்பாடு ஆச்சா) என்றார்.
இல்ல இப்போதான் எதிர் வரிசையில் தள்ளி இருந்த கடையில் "டீ" குடிச்சேன் என்றேன்,
கணீர் என சிரித்தவர் "அவனொரு வட்டான சார்" (அவன் ஒரு மென்டல் சார்) என்றார் டீக் கடையை நோக்கி
வீட்டிற்கு வந்த நான் குளித்து முடித்து கட்டிட வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். அங்குள்ள வேலையாட்கள் பலர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களது கண்ணாடி குவளைகளை பார்த்தபொழுது அவையாவையிலும் நல்ல கறுப்பான டீ.
எண்ணத்தில் ஒரு கேள்வி இவர்கள் யாவரும் வாங்கியது நான் சென்ற கடையில் இருந்து தான் என அறிந்ததும் எனக்களித்த விளக்கங்களை இவர்களுக்கும் அளித்திருப்பாரா "மென்டல்" என அறியப்பட்ட அந்த டீ கடைக்காரர் என்ற எண்ணம் என்னை ஆக்கிரமித்தது. என்னிடம் பேசி விலை உயர்ந்த தேயிலையில் செய்யும் டீயை குறைந்த விலையில் விற்பது மக்கள் நலனை கருதியே என் லாபத்திற்க்காக அல்ல எனக் கூறியவர் இவர்களிடம் எந்த தேயிலை வைத்து டீ கொடுத்திருப்பார் என்ற என்ன அலையில் நான் தொலைந்து போனேன்.அவரது மக்கள் நலனை கருதி கொள்கையை பரப்பி மக்களின் செல்வாக்கை பெற்று அவர் என்ன செய்யப்போகிறார். இந்த கொள்கைகளால் அவரது வியாபாரம் தழைக்குமா?நிலைக்குமா?
யார் அவருக்கு பக்க பலம் எதனால் இந்த நல்ல எண்ணம் என்றெல்லாம் எழுந்த கேள்வியை புறம் தள்ளினேன்.
அனைத்தையும் தாண்டி ஓங்கி ஒலித்த ஒரு கேள்வி..
அவன் மென்டலா இல்லை நான் தான் மென்டலா என்ற அளவிற்கு என்னை குழப்பிய ஒரு காலை டீயை எண்ணி எண்ணி சிரித்தபடி வேலையாட்களிடம் அன்று நடக்க வேண்டிய வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

எழுதியவர் : கே என் ராம் (9-Jul-23, 4:43 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 137

மேலே