கைகோர்த்த வாசுகி

அடிக்கொருதரம் சினிமாவுக்கு கூட்டி போக மாட்டான் சித்தார்த். வருடத்தில் ஒன்றோ இரண்டோ படங்களுக்கு அழைத்துப் போவான் அதுவும் இரண்டு மாதம் இவள் கெஞ்சினால் ஒருமுறை மனமிரங்கும் அந்த வேதாளம்.

பிடித்த படம் ஓடும் சமயம் அவனிடம் கூறி உடனே அழைத்துப் போனான் என்ற சரித்திரமே கிடையாது. அவன் மனமிரங்கும் போது எந்த படம் ஓடுகிறதோ அதைத்தான் பார்க்க முடியும்.

அப்போதும் இந்த படமா.... என்று லேசாக இவள் இழுத்தால் உடனே ஆமாம் இந்த படம் நல்லாவே இருக்காதுன்னு என் ஃபிரண்ட்ஸ கூட சொன்னாங்க வாசு அதுனால நாம அப்புறம் நல்ல படமா போடும்போது போவோம் என்று ஒரேயடியாக முடித்து விடுவான்.

அதுனாலேயே இவள் மூச்சே விடாமல் கிளம்பி விடுவாள். வாசுகிக்கு நல்ல படம் பார்ப்பதை விட வீட்டில் இருந்து வெளியேறி சுதந்திர காற்றை சுவாசிக்க ஒரு வாய்ப்பு என்ற அளவில் திருப்தி பட்டு கொள்வாள்.

அன்றும் அப்படித்தான் " இணைந்த கைகள்" என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு ராம்கி நடித்த படம் பார்க்க வாய்ப்பு. எப்பொழுதும் போல் ஏதோ ஒரு படம் என்று திரையரங்கை நெருங்கினால் அதிர்ஷ்டவசமாக இவளின் ஆதர்ஷ நாயகன் நடித்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்.

உன்மையான மனமகிழ்ச்சியுடன் படம் பார்த்தாள் வாசுகி. திரையரங்கை விட்டு வெளியேறும் போது மக்கள் வெள்ளம் போல் திரண்டு ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.

இவர்கள் ஏன்தான் இப்படி இடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் வீட்டுக்குள் சென்று அடைந்து கொள்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம்.

படம் முடிவதற்கு இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. அன்று அவர்கள் பார்த்தது மாலை ஆறு மணி காட்ச்சி.

மக்கள் கூட்டத்தில் கணவன் முன்னே செல்லும்போது இவள் பின்தங்கி விட்டால் அதற்கு வேறு அவனிடம் திட்டு வாங்க நேரிடும்.

அவன் திட்டினால் இவளுக்கும் தன்மானம் பொத்துக்கொண்டு கிளம்பும்.
பின் இவளாக சென்று அவனிடம் பேசவேண்டும் அது மிகக் கொடுமை நிறைந்த தருணம் அவளைப் பொருத்தவரையில்.

நாம் தவறு செய்யாத போது நாம் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இவள் மனம் முறுக்கி கொள்ளும்.

ஏன் இவ்வளவு வம்பு என்று எங்கு சென்றாலும் அவன் கையைப் பிடித்து கொண்டு சென்று விடுவாள்.

உண்மையாகவே இந்த ஒரு காரணம் தாங்க "சத்தியமா" நான் சொன்னால் நீங்க நம்பிதான் ஆகனும் சரியா.🤣🤣🤣

அன்றும் அப்படித்தான் அவன் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டே படத்தில் அவளுக்கு பிடித்த காட்சிகளை பற்றி வளவளத்தபடி அவன் பின் சென்று கொண்டிருந்தாள்.

அவனும் சமைக்காமல் ம்ம்...ம்.... ம்ம் என்று கொட்டிக் கொண்டு நடந்தான்.

வாசுகி க்கு சந்தேகம் கணவன் நல்ல மூடில் இருக்கிறான் போலும் அதான் நாம் சொல்லுவதற்கு எல்லாம் அவனும் சமைக்காமல் ம்ம் கொட்டுகின்றான் என்று தோன்றியது.

இல்லையெனில், அவன் ஃபுல் ஃபாம் இல் இருந்தால் இன்னேரம் வாயமூடிட்டு வரப்போறியா இல்லையா என்று சீறி இருப்பானே என்று எண்ணி நிமிர்ந்து பார்த்தாள்.

அவ்வளவுதான் " சப்தநாடியும்" விதிர்த்து அங்கேயே நின்று விட்டாள். அவள் கைபிடித்து சென்றது மாற்றான் கைகளை. வெடுக்கென்று கைகளை பின்னுக்கு இழுத்துக்கொண்டு சுற்றிலும் இவளுடைய சித்தார்த்தை விழிகளால் சல்லடை போட்டாள்.

அதற்க்குள் இவள் பிடிக்க கையை கொடுத்திருந்தவன் " என்னம்மா ஆச்சு வா இன்னும் கொஞ்சம் தூரம் தான் அதோ அங்க தெரியுது பார் ஆஷ் கலர் வா சீக்கிரம்" என்றானே பார்க்கலாம், ஒரே ஓட்டம் தான் இவள் நிற்கும் திசையின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த சித்தார்த்தை பார்த்து ஓடி அவன் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

"தாயின் மடி சேர்ந்த கன்றாக" அவள் மனம் நிம்மதி அடைந்தது.

வழக்கமான சிடுசிடுப்புடன் "மனுசன் போகும்போது கூடவே வான்னு எத்தனை முறை சொல்லறது. கையையாவது பிடிச்சுக்கிட்டு வர்றது" சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது என்று முனுமுனுத்துக் கொண்டவாறு நடந்தான்.

என்றும் இல்லாத திருநாளாக இன்று அவன் வசவும் அவளுக்கு இனிய சங்கீதமாக செவிகளில் பாய்ந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக இதயத்துடிப்பு சமன்பட ஆருயிர் வேதாளத்தின் கரங்களை கெட்டியாக பிடித்து அவன் புஜங்களில் முகத்தை புதைத்தபடி அவனுக்கு ஈடு கொடுத்து நடந்தாள்.

ஏய் என்னடி பன்ற இது ரோடு கொஞ்சமாவது சொரனை இருக்கா என்றபடி அவளுடைய "செல்ல வேதாளம்" தன் கையை இழுத்தான். அவன் இழுத்த உடன் கையை விட்டுவிட்டால் அவள் வாசுகி அல்லவே.


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (8-Jul-23, 11:50 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே