இடரென்னை துன்னூசி போம்வழி போகும் இழை - பழமொழி நானூறு 358

இன்னிசை வெண்பா

தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால்
என்ன படினும் அவர்செய்வ செய்வதே
இன்னொலி வெற்ப! இடரென்னை துன்னூசி
போம்வழி போகும் இழை. 358

- பழமொழி நானூறு

பொருளுரை:

இனிய ஓசையை உடைய மலைநாடனே! ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும் சுற்றத்தார் செய்யும் உறுதியாயின வற்றைத் தாமும் செய்வதே தைக்கின்ற ஊசி போகின்ற வழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; வரும் குற்றம் யாதுளது?

கருத்து:

உறவாக மதித்தார்க்குஉறவாய் நின்று உறுதி செய்க.

விளக்கம்:

ஊசிவழிச் செல்லும் நூல்போல, உறவாக மதிக்கப்பட்டார் அவர் வழியே செல்க என்பதாயிற்று. அவர் தமர் என்று ஒழுகியதால், தாமுந் தமராய் ஒழுகுதல் கடமையாம், 'என்ன படினும்' என்றமையால், துன்பமும் உள்ளவாதல் பெறப்படுதலின். 'இடர் என்னை' என்றதற்கு வரும் குற்றம் யாதுளது என்று கூறப்பட்டது. அதன்படியே நின்றொழுகுக என்பார், 'இடர் என்னை' என்றார்.

'ஊசி போம்வழி போகும் இழை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-23, 6:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே