நாட்டுப்பற்று

லட்சிய ஆசிரியர்
நாட்டுப்பற்று மிக்க சமுதாயத்தை உருவாக்குவது என்பது நம் தலையாய கடமையாகும். இந்தியா என் நாடு. இந்தியாவில் வாழும் அனைவரும் என் சகோதர சகோதரிகள் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வதிலோ அல்லது எந்த ஒரு முக்கிய விழாவின் இறுதியில் நாட்டுப்பண் பாடுவதிலோ இல்லை நாட்டுப்பற்று. தனி மனிதனுக்கு தன்மானம் எவ்வளவு முக்கியமானதோ அதைவிட நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நாட்டுப்பற்று என்பது மிகவும் முக்கியம். ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பை அளவிட அளவுகோல் இல்லை அதைப் போல நாம் ஒவ்வொருவரும் நம் தேசத்தின் மீது அளவில்லாப் பற்று கொண்டு நாட்டுப்பற்றுடன் வாழ்ந்து முன்னேற்றம் காண வேண்டும்.
மத நல்லிணக்கமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தூய்மைமிகு இந்தியா, வல்லரசு நாடு, ஊழலற்ற சமுதாயம், வன்முறை, ஏமாற்றும் வதந்திகள் இல்லாத வலுவான சமுதாயம், அமைதி மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. ஒரு குழந்தையை ஒழுங்கான முறையில் வளர்ப்பதில் தாய்க்கும், தந்தைக்கும் பொறுப்பு உண்டு. வளர்ந்த குழந்தையை வாழ்க்கையில் வரும் சவால்களை தைரியத்துடன் எதிர் கொண்டு வெற்றியடையச் செய்வதில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உண்டு. தவறான காரியங்களில் ஈடுபடும்பொழுது அதை தவறு என்று சுட்டிக்காட்ட ஒவ்வொரு நண்பர்களுக்கும் பொறுப்பு உண்டு. வறுமையில் வாடுபர்களுக்கும், பசியால் துடிப்பவர்களுக்கும் உணவு கொடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. பொறுப்புணர்வுடன் செயல்படும் பொழுதுதான் நிறைவான சமுதாயத்தை நாம் காண முடியும்.
யாருக்கும் பயன்படாத
தக்காளிச் சட்டினி
தட்டில் அல்ல
சாலையில்….
சாலையில் நடக்கும் விபத்தை நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்களைவிட சாலையில் விபத்து நடக்காமல் தடுக்க தற்போது நம் மாணவிகள் கண்டுபிடித்த நுண்ணறிவு தலைக்கவசம் என்பது மிகவும் பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல "ஜல்லிக்கட்டு" என்ற பாரம்பரிய மிக்க விளையாட்டை மீட்டெடுக்க மாணவச் சமுதாயம் என்ற இளைஞர் சமுதாயம் ஒன்றிணைந்து “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை நிலை நிறுத்தியதும் பாராட்டுக்குரியது.
ஒற்றுமைக்கு பஞ்சம் இல்லை
ஓயாத உழைப்பிற்கும் பஞ்சம் இல்லை
தஞ்சம் புகுந்தவர்களுக்கு பஞ்சம் இல்லை
நெஞ்சம் உடையவர்களால் ஆம்
நேர்மையான நெஞ்சம் உடையவர்களால் ஊழல் இல்லை.

தான் செய்யும் வேலையை கடமை என நினைத்து பணியாற்றும் ஊழியர்களால் நாட்டில் ஊழல் இல்லை. அதைப் போல தன் வேலை முடியும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஊழல் கொடுப்பதில்லை. ஊழலைத் தடுக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. பொறுப்புணர்வுடனும் சமுதாயப்பற்றுணர்வுடனும் செயல்படுவது மிக அவசியம். தனி மனித வருமானம் உயர்ந்தால் மட்டுமே நாட்டு வருமானம் உயரும். அதற்கு வேலைவாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். வேலை கிடைத்தவர்களுக்கு வேலைப்பளு அதிகம். வேலையில்லாதவர்களுக்கு மனப்பளு அதிகம். மனக்கசப்புகளை நீக்கி மன நிம்மதியுடன் வாழ்பவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தது. தக்காளியின் விலை தங்க விலையைப் போல உயர்ந்தாலும் தக்காளியை வாங்காதவர்கள் இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைப் போல சக மனிதர்களின் வாழ்க்கையின் நிலை உயர வேண்டும் என்பதே என் ஆசை.
அறிவுரையைப் பின்பற்றுபவர்களை விட அதி நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றுபவர்கள் அதிகம். நாம் வாழும் புவியில் இரவு பகல் எவ்வாறு மாறி மாறி வருகின்றதோ, நாம் வாழும் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் எவ்வாறு மாறி மாறி வருகின்றதோ, நம் உறவு முறையில் நட்பு பகை எவ்வாறு மாறி மாறி வருகின்றதோ, அதைப் போலவே தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதிலும் நன்மை தீமைகள் மாறி மாறி வருகின்றது. எனவே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாக இருக்காமல், தொலைநோக்குப் பார்வையுடன் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களாக வளர வேண்டும் என்பதே மாணவச் சமுதாயத்திற்கு நான் விடுக்கும் அன்பு வேண்டுகோள்.
காலநிலையில் மாற்றம் ஏற்படுவதைப் போல ஒவ்வொருவரின் மன நிலையில் மாற்றம் தேவை. பிறரை தன்னுடைய சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் காயப்படுத்தாதவர்களாக நாம் மாற வேண்டும். தன் வாழ்க்கையை தனக்காக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னைப் பெற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களாகவும் அவர்கள் முதுமை அடையும் பொழுது அவர்களை மறக்கத் தெரியாதவர்களாகவும் வாழ வேண்டும். கண்ணியத்தைக் கடைபிடித்து கர்ச்சிக்கும் சிங்கங்களாக வாழ்ந்து தன் பங்கை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும்.
மதுவிற்கு அடிமையாகாமல், சமூக வலைத்தளங்களில் சுற்றுலா செல்லாமல், களவுகளில் ஈடுபடாமல், பிறரைத் துன்புறுத்தாமல், ஆன்லைனில் விளையாடாமல், தன் குடும்பத்தைக் காக்கும் தன்னார்வலர்களாகவும், தன் சமுதாயத்தைக் காக்கும் சமூக ஆர்வலர்களாகவும் உருமாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தொட்டால் சுடும் நெருப்பு
பட்டால் வரும் பொறுப்பு
ஒரு செயலைச் செய்யாதீர்கள் என்று சொன்னால் வரும் கடுப்பு. ஆனால் நல்ல செயலைச் செய்தால் வரும் சிறப்பு.

ஒரு செயலைச் செய்து அதன் மூலம் வரும் பின்விளைவுகளை எதிர்கொண்டவர்களுக்கு கிடைப்பதுதான் அனுபவம். அனுபவம் மிக்க ஆசிரியர்கள் அதிகாரத்துடன் கட்டளையிட்டால் பதிலுக்கு கிடைப்பதை விட அன்பின் கட்டளையாகக் கூறும் நல்ல காரியங்களை மாணவர்கள் ஒருபோதும் வெறுப்பதில்லை.
என் பார்வையில் மாணவச் சமுதாயம்
இலட்சியத்தை
அலட்சியப்படுத்தாதவர்கள்
என் மாணவர்கள்......
கல்விக் கட்டணத்திற்காக
பகுதி நேர வேலை செய்து
பெற்றோரின் சுமையை
குறைக்கத் தெரிந்தவர்கள்
என் மாணவர்கள்......
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு
அடிமையானவர்கள் அல்ல
அடிக்கும் வெயிலில்
கிரிக்கெட் விளையாடுபவர்கள்
என் மாணவர்கள்......
கற்பைச் சூறையாடுபவர்கள் அல்ல
நட்பினால்
பிறர் மனததைக்
காயப்படுத்தாதவர்கள்
என் மாணவர்கள்......
நிந்திக்கத் தெரிந்தவர்கள் அல்ல
என் மாணவர்கள்......
பிரார்த்திக்கத் தெரிந்தவர்கள்
என் மாணவர்கள்......
அவமானத்தால் அவதிப்படுபவர்கள் அல்ல
என் மாணவர்கள்......
தன்மானதால்
தலை நிமிர்ந்து
வாழத் தெரிந்தவர்கள்
என் மாணவர்கள்......
அன்னதானம் செய்ய
அகிலத்தில் நிறைய பேர்
இரத்ததானம் செய்ய
மாணவச் சமுதாயம்…
போரில்
வெற்றி கொள்ள தேவை
"ஆயுதப்படை"
நம் சமுதாயத்தைச்
சீர்திருத்தி
வெற்றி கொள்ள தேவை
"மாணவர் படை"
பாதையில்
நடந்து செல்லும்
பாதசாரிகள் அல்ல
என் மாணவர்கள்…
சமுதாய சோலையை
பூத்துக் குலுங்க வைக்கும்
பூங்கொத்துக்கள்
என் மாணவர்கள்….
வாழ்த்துங்கள்
இளைய தலைமுறையினரை…
வளர விடுங்கள்
மாணவச் சமுதாயத்தை…
செழிக்கட்டும் நம் பாரதம்!

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (27-Jul-23, 7:27 pm)
பார்வை : 997

மேலே