2 மினர்வா

    What some people call a nightmare, a writer calls a plot.
James Paddock.
                        ____________
மதிய நேரம்.

மதிய நேரத்தில் மருத்துவமனைகள் என்பது தேவையற்ற அவசியமற்ற கொந்தளிப்புகளை கொண்டு இருக்காது.
விபத்து என்று யாரேனும் வந்தால் மட்டுமே நோயாளிகளுக்கும் ஆர்வம் புடைக்க ஒரு வேகம் வரும்.

இப்போது பூர்ணிமா மட்டும் எனக்கு துணைக்கு இருக்க நான் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து அதிலிருந்து ஒரு பாதிப்பக்கத்தில் பிரித்தேன்.

கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் மனம் புத்தகத்துக்கு வெளியில் நோய் இல்லாத பட்டாம்பூச்சியாக சுற்றி அலைந்து கொண்டிருக்க...

என் அறைக்கு வெளியில் நர்ஸ்கள் சிலர் கூடி நின்று பேசும் குரல்கள் கேட்டது.

சில நேரங்களில் அப்படி அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை உற்றுக்கேட்க எனக்கும் ஆவலாக இருக்கும்.

எழுத்தாளர் சுஜாதா தன் இறுதி நேரத்தில் மருத்துவமனையில் தன் மனைவியிடம் தளர்வாக பேசி கொண்டிருக்கும்போது அவருக்கு ஊக்கம் கொடுத்த மனைவியிடம், "நான் இத்தனை நாள் இருந்தது போதுமே… இப்போ இருக்கவே போர் அடிக்கிறது" என்றாராம்.

நிலை தடுமாறும் மனிதனின் ஒரே ஒரு வாழ்க்கைக்குள் இந்த காலம் என்பது வாழ்வை பற்றிய மர்மமான அடர்ந்த சலிப்பை எப்படி மறைத்து வைத்திருக்கிறது என்பதை நினைக்க எனக்கு பயம் பெருகியது.

எது எல்லாம் இப்படி மனிதனுக்கு சலிப்பு தரும் என்று நான் யோசித்து பார்த்தால் அதில் பேசும்மொழி என்பதுதான் முதலிடம் பெற்றது.

ஒரு மனிதனை முழுக்க சலிக்க வைத்து விடுவது மொழிதான் என்று முடிவு செய்து அதை நான் என்னருகே இருந்த பூர்ணிமாவிடம் சொன்னேன்.

மொழின்னா என்ன ஸ்பரி என்று அவள் என்னிடம் கேட்டாள்.

எனக்கு Ferdinand de Saussure (சசூர்) சொன்னதுதான் முதலில் நினைவுக்கு வந்தது. “சொ‌ல் ம‌ற்று‌ம் பொரு‌ள் ஆ‌கிய இர‌ண்டு‌க்கு‌ம் இடை‌யிலான உறவு  ‌இய‌ற்கையானது அ‌ல்ல”.

“மாலினோவ்ஸ்கி ம‌ற்று‌ம்  பிர்த்  இந்த இருவரும் ஒரு ஆய்வு கட்டுரையில் “ஒரு சொ‌ல்‌லி‌ன் சூழலை அ‌றி‌ய முடியாம‌ல், அ‌ந்த சொ‌ல்‌லி‌ன் பொருளை அ‌றிய இயலாது எ‌ன்று கூ‌று‌கிறா‌ர்கள்.“

பூர்ணிமாவுக்கு இப்படி கேட்டதும் அது அவளுக்கு ஆச்சரியம் தரவும் எனக்கு இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றாள்.

என் நினைவுகள் அந்த நொடியில் எங்கெங்கோ தீவிரமாக அலைந்தது. அது எங்கு செல்கிறதோ அங்கெல்லாம் நானும் அதனூடாக எவ்வித பிடிப்பற்று செல்வதாக மட்டுமே உணர்ந்தேன்.

கவிதை ஒன்று எழுதும்போது ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு நான் எத்தனை நாட்கள் காத்திருந்தேன், அதன் காரணமாக எத்தனை எத்தனை அகராதிகளை ஒப்பிட்டு படித்து கொண்டிருந்தேன் என்று அவளுக்கு சொல்ல விரும்பினேன். ஆயினும் தூக்கம் என் கண்களை இழுத்து கொண்டது.

என் அருகில் இருந்த பூர்ணிமா சற்று அசதி கொண்டவளாக அறை வெளியில் அந்த இளம் நர்ஸ்கள் பேசுவதை செவி மடுத்து கொண்டிருக்கலாம் என்று நான் நினைத்து கொண்டேன்.

நாங்கள் வாட்ஸாப்பில் பேசி செய்திகள் பரிமாறிக்கொண்ட அந்த நாட்களின் நினைவுகள்தான் வந்தது.

முன்பெல்லாம் ஆன்லைனில் சாட் என்று மொபைலில் வருபவர்கள் உடன் வெகு நேரம் பேசிக்கொண்டு இருப்பது என் வழக்கம்.

நான் ஒரு மன நோயாளியுடன் பிரியம் மேலிட இலக்கியம் தவிர்த்து மற்ற அனைத்தையும் வெகு நாட்கள் வரையும் அப்படித்தான் பேசி கொண்டிருந்தேன், அவர் ஒரு தீவிரமான மனநோயாளி என்பது தெரியாமல்…

அல்லும் பகலும் அந்த வசீகரமான அரட்டை ஒருநாள் எங்களிடையே முற்றுப்பெற்றபோது நான் மிகவும் மோசமாக உடல்நலம் குன்றிப்போய் இருந்தேன்.

என் மருத்துவரின் எனக்கு கொடுத்த முதல் அறிவுரை சாட் என்பது மனநோய்க்கு சொர்க்க வாசல் என்பதை புரிந்து கொண்டு அதில் முற்றிலும் நீங்கள் விலகி இருங்கள் என்பதுதான்.

விலகி விட்டேன்.

பூர்ணிமாவும் அப்படி ஒரு சாட் மூலம் வந்தாள். ஆனால் பெயரை உறுதி செய்துவிட்டு அடுத்த மூன்றாவது நிமிடத்தில் தன் போன் நம்பரை கொடுத்து அதில் பேச சொன்னாள்.

நாங்கள் பேசினோம்.

பூர்ணிமா என்னிடம் நிறைய கேள்விகள் இருப்பதாகவும் அதை போலவே நிறைய தேடல்கள் இருப்பதாகவும் அதனால் நாம் பேச வேண்டியது என்பது அதிகமாகவே இருக்கும் என்றாள்.

பூர்ணிமா என்பவள் இயல்பிலேயே நேர்மையானவள். உடனடியாக தனது எண்ணை கொடுத்துவிட்டு கால் செய்து விட்டாள். அப்போதும் எனக்கு அந்த குரூரமான மன நோயாளியின் நினைவு வந்தது.

பூர்ணிமா வந்த சில நாட்களில் அந்த மனநோயாளியின் நினைவுகள் மறக்க தொடங்கின என்றாலும் உடல் நோய் உடனே தீர்ந்து விடாது என்பதையும் நான் ஏற்று கொண்டே ஆக வேண்டும்.

பூர்ணிமா பேசுவதே ஒரு அழகு.

ஃபேன் காற்றுக்கு சுற்றி சுற்றி அலையும் ஒற்றை காகிதம் போல அவள் படபடப்பு நீங்காது பேசினாள். எந்த இடத்தில் தன் உரையை நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்தி நான் அவள் பேசுவதை கவனிக்கிறேனா என்பதையும் தெளிவாக உறுதி செய்து கொண்டு பின் மீண்டும் பேசினாள். நிறைய தெரிந்து வைத்து இருந்தாள். அகத்தின் அறிவு அவள் முகத்திலும் தெரியுமோ என்று அன்று நான் சற்று யோசித்தும் பார்த்தேன்.

அவள் என்ன கேட்க போகிறாள் என்பதை விடவும் அவள் கேட்பதன் மூலம் நான் என்ன கற்றுக்கொள்ள முடியும்? அடுத்து என்ன நான் கற்க வேண்டும் என்பதுதான் என் முதல் கவலையாக இருந்தது.

சிலர் பேசுவதை கேட்டால் எனக்கு உடனே களைப்பு வரும். சிலர் பேசியதை மீண்டும் நினைத்து பார்த்தால் கூடவும் களைப்பு வரும். சிலரை நினைத்தாலே களைப்பு வந்து விடும். பூர்ணிமா அப்படி இல்லை என்பது முதலிலேயே எனக்கு தெரிந்து விட்டது.

அவள் யோசித்து பேசினாள். எப்படி நீ யோசித்து பேசுவாய் என்று ஒருமுறை நான் அவளிடம் கேட்டேன்.

ஸ்பரி, யோசித்து பேசுவது என்றால் அது ஒரு ஒத்திகை மாதிரிதான். காரண காரிய தொடர்பு என்பார்களே ஸ்பரி…

Causation theory?

கிட்டத்தட்ட… நீங்கள் அரிஸ்டாட்டில் இது குறித்து சொன்னதை சொல்ல முடியுமா என்று என்னிடம் கேட்டவள் தொடர்ந்து நிறுத்தி the material, the formal, the efficient, and the final என்று முடித்தாள்.

ஒரு மரக்கட்டை டைனிங் டேபிளாகி அதை உணவு உண்ணும் மேசையாக பயன்பாட்டில் கொண்டு வருகிறோமே அப்படித்தானே என்றேன். ஆனால், நான் நீ பேசுவது பற்றித்தான் அறிய ஆவல் என்றேன் மெல்ல சிரித்தபடி…

எளிமைதான் ஸ்பரி… ஒன்றை ஒருவரிடம் பேசும் முன்னர் நான் எந்த சொல்லை எந்த தொனியில் என்ன டெசிபலில் பேச வேண்டும் என்பதை திட்டவட்டமாக முடிவு செய்தபின்னரே பேசுவேன்.

என் கேள்விகள் ஒருவருக்கு பயணத்தை ஆர்வத்துடன் துவக்கி வைக்குமே தவிர அவரை தாக்கி மூலையில் முடக்கி வைக்கக்கூடாது என்பதிலும் சிறிதளவு கவனம். (இப்போதும் அந்த மன நோயாளி நினைவு. அவள் பிறருடன் ஒப்பிட்டு அல்லது தொடர்புபடுத்தி அனைத்து ஜேம்ஸ்பாண்ட் வேலைகளையும் கச்சிதமாக செய்வாள்). முடிந்த அளவு எனது கண்களில் கருணையோ அன்போ பொய் கலவாது இருக்க வேண்டும் என்னும் ஆவலும் இருக்கும் என்றாள்.

அதன்பின் நாங்கள் அளவலாவுவதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

கேள்விகளுடன் வரும் அவள் நான் பதில் கொடுக்க தேவையான நேரம் கொடுத்து அவளும் அது பற்றி அடுத்தடுத்து பேச வரும்போது புதிய புதிய குறிப்புகளுடன் மட்டுமே வந்தாள்.

சசூர் என்று நான் ஒரு பெயரை மட்டும் சொன்னால் பூர்ணிமா அவளின் அடுத்த அழைப்பில் லிங்க்விஸ்டிக் சயன்டிஸ்ட் வரிசைகளை சரமாக அடுக்கி விடுவாள்.

அதுதான் பூர்ணிமா…

ஒரு செய்தியில் அல்லது விவரத்தில் நாம் கவனம் கொண்டு புதுப்புது தகவல்களை திரட்டும்போது மலை போல் நம்முன் குவியும் அத்தனை விதமான விவரங்களையும் ஒருவர் கற்க, பயில வேண்டிய அவசியம் உள்ளதா என ஒருமுறை அவளிடம் கேட்டேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (13-Aug-23, 4:06 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 41

மேலே