வாசிப்பு அனுபவம்

பறவையின் வாசனை - கமலா தாஸ்

"முதலில் என்னைச் சூழ்ந்துள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன். பின்பு, இந்த மெல்லிய அரக்கு நிறத் தோலையும் அதனுள் இருக்கும் எலும்புகளையும் உதறுகிறேன். இறுதியில் வீடற்ற, அனாதையான, அதியழகு நிறைந்த தோல், எலும்புகள் என அனைத்துக்கும் அடியில் உள்ள என் ஆன்மாவை உங்களால் காண இயலும் என நம்புகிறேன்"

மேற்காணும் வரிகளை வனைந்தவர்
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும், கமலா தாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி முக்கிய எழுத்தாளராக திகழ்ந்த கமலா சுரையா என்று பின்னாளில் அறியப்பட்ட எழுத்தாளர் கமலா தாஸ்.

அம்மா அப்பா இருவருமே எழுத்தாளர்கள் என்ற நிலையில் இவருக்கும் எழுத்தின் மீதான பற்று அதிசயம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்கத்தை, பாலியல் வேட்கைகளை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக மெல்லிய வெடுக் தெறிப்புகள் சுழன்றோடும் கவிதைகளாக எழுதி புகழ் பெற்றிருந்த அவரின் கவிதைகள் தான் அவர் பக்கம் என்னை ஈர்த்தது.
என் கதை என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதை இருவேறு வகையான விமர்சனங்களால் பிரபலமான எழுத்தாளராக இவரை அறிய வைத்தது. ஆனால் இங்கே நான் எழுத வந்தது இவரது சிறுகதைகள் பற்றியது.

இவரது பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு "பறவையின் வாசனை" என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மலைச்சரிவுகளில் என்றொரு சிறுகதை. வேகவேகமாக பொட்டியை கட்டிக் கொண்டிருக்கும் அவள் சத்தியமாக அந்த நேரத்தில் சந்தடியின்றி நுழைந்த முரட்டு ஆடையுடன் கூடிய என்னை விட்டு விட்டு போகப் போகிறாயா? நீ போயிட்டா நான் என்ன பண்ணுவேன் என்னும் அவனை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுக்குள் நெகிழ சுவர்கடிகாரத்தில் ஆடாத பெண்டுலத்தை பார்க்கிறாள். குளோரோபார்ம் நெடி மூக்கை அடைகிறது. விழித்து பார்க்க இந்த மருத்துவமனை வெள்ளை சுவர்கள், வந்து போகும் நர்ஸ்கள் மற்றும் கடிகாரமும் என்னைப் போலவே செத்துவிட்டதா? என்று சிந்தனை வயப்படுகிறாள். கதவை திறந்து கொண்டு அவளது கணவன் உள்ளே நுழைகிறான் கிளம்பியாச்சா என்று கேட்டுக் கொண்டே. அவளுக்கு கண்களில் நீர் சொரிகிறது. அழாதே என்று செல்லமாக கடிந்து கொண்டவன் "அவள் பயமாயிருக்கு" என்று கூறவும் உண்மையில் ஆவி என்று எதுவும் இல்லை. இதோ நாம் வீட்டுக்கு கிளம்புகிறோம். சீக்கிரமே உனக்கு குணமாகிவிடும் என்று ஆறுதல் உரைக்கிறான். இருவரும் தங்களது பொருட்களுடன் காரில் பயணமாகிட அவள் கடல் பரப்பின் மேல் மிதக்கிறாள்... மீண்டும் தெளிவு ஏற்பட அவர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்குகிறது... அந்த விபத்தை ஏற்படுத்துபவன் மருத்துவமனையில் கண்ட அதே ஆசாமி... அலறிக்கொண்டே மயங்கி சரிகிறாள்... குளோரோபார்ம் நெடி மருத்துவமனையின் இருப்பை உறுதி செய்கிறது. நாள்பட்ட சுகவீனத்துக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனப்பிரமைகள் இக்கதையில் கச்சிதமாக கையாளப்பட்டுள்ளது.

பறவையின் வாசனை என்றொரு கதை... வேலைத் தேடி நேர்காணலுக்கு செல்லும் ஒரு இல்லத்தரசி. சென்ற வேலைக்கான நேர்காணல் நடைபெறும் இடம் தெரியாமல் அந்த பல அடுக்கு மாடி கட்டிடத்தில் அங்குமிங்குமாக அலைக்கழிந்து எதிர்பாராத விதமாக அந்நிய ஆடவன் ஒருவனால் ஓரறைக்குள் சிறைபிடிக்கப் படுகிறாள். அவன் அவளுடைய சிறுவயது முதலே அவளுக்கு அருகிலேயே இருப்பதாகவும் இருவருக்கும் முன்பே அறிமுகம் என்றும், அதுவும் முதன் முதலாக அவளுக்கு மஞ்சள்காமாலை பீடித்த பதினோரு வயதிலிருந்தே அவள் தன்னை மிகவும் நேசிப்பதாகவும் கூறுகிறான். அவள் வேண்டுவது விடுதலை. அவன் வேண்டுவதோ முழுசரணாகதி. அந்நியன் அவளை முழுவதுமாக தன்னிடம் சரணாகதி அடைய கூறிட தனக்கு ஒரு குழந்தை இருக்கிறது... தன்னை நம்பி குடும்பம் இருக்கிறது நான் எப்படி உன்னை விரும்ப இயலுமென்று வாதம் புரிகிறாள் நாயகி. மரணத்தின் வாசனை பறவையின் வாசனை என்கிறான். அவள் அத்தனையும் மறுத்து ஏகத்துக்கும் வாதம் புரிந்து தப்பி பிழைத்து மின்தூக்கியில் ஏற மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்தூக்கி இடையிலேயே நின்றுவிடுகிறது. இருள் சூழ்ந்த லிஃப்ட்டில் தன்னந்தனியே மாட்டிக்கொள்கிறாள். வெளியே லிஃப்ட் பழுது என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது. மரணம் சம்பவிக்கும் போது மனம் தனது பொறுப்புகளை நினைவுகூர்ந்து தான் வாழ விரும்புவதாக தர்க்கம் செய்வதை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

மாலுமி சீருடை அணிந்த சிறுவன் கதையில் ஒரு அமைச்சர் தனது தனிச்செயலாளரையும் அவனது இளம் மனைவியையும் இரவு விருந்துக்காக அழைக்கிறார். அமைச்சர் மனைவி தகுதிக்கு குறைவான ஆட்களை விருந்துக்காக அழைப்பதை ஆட்சேபனை தெரிவித்தாலும் அமைச்சர் அழைப்பை இரத்து செய்யவில்லை. விருந்து நாளில் மெலிந்து குள்ளமாக வந்து நின்ற இளம் பெண்ணை பார்த்ததும் அமைச்சரின் மனைவிக்கு அதிர்வு. நடுத்தர வயதில் மகப்பேறு கிட்டாத அவருக்கு வந்திருந்த இளம்பெண் ஒரு கர்ப்பிணி என்று தெரிந்ததும் இன்னும் பிடிக்காது போகிறது‌. ஆனாலும் அமைச்சர் வர தாமதித்தாலும் அவரது அறிவுறுத்தலின் பேரில் விருந்தினர்களுக்கு குடிக்கவும் கொறிக்கவும் அளித்து உபசரித்து பார்க்க தடிமனான ஃபோட்டோ ஆல்பம் அளிக்கிறார்.

அமைச்சர் நிலைப்படியில் மௌனமாய் வந்து நிற்க திடீரென்று உணர்வு பெற்ற இளம்பெண் ஃபோட்டோ ஆல்பத்தின் ஒரு பக்கத்தை வெறித்து தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள். அது அமைச்சர் நான்கு வயதில் மாலுமி சீருடை அணிந்து எடுத்தது எனவும் அமைச்சரின் தாயாருக்கு மிகவும் பிடித்ததால் அவர் இறந்த பின்னர் தான் அந்த புகைப்படம் சட்டகத்திலிருந்து ஆல்பத்தில் சேர்த்ததாகவும் தகவல்களை அளிக்கிறார் அமைச்சரின் மனைவி.

அமைச்சர் அப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டே வர கணவன் இளம் பெண்ணை எழுந்து நிற்க கூறியும் அவள் அசையாமல் அப்படியே அமர்ந்திருக்கிறாள். அமைச்சர் தனிச்செயலாளரிடம் பரவாயில்லை என்று உரைத்ததோடு அந்த இளம் பெண்ணின் அருகே வந்து அமர்ந்து அவனிடம் மது அருந்துவதைப்பற்றி கேட்க அவன் மறுக்கிறான். பிறகு தனக்கு மதுவும் அவர்களுக்கு தக்காளி ஜுஸ் எடுத்து வர கூறிவிட்டு விருந்தினர்களிடம் தனது தாயாரைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் அமைச்சர்.

அத்தோடு நில்லாமல் ஆல்பத்தின் அடுத்த பக்கத்தை திருப்பினால் மற்ற புகைப்படங்கள் பற்றியும் விளக்கமாக கூறுவதாக அமைச்சர் கூற பக்கத்தை திருப்பாமல் அந்த புகைப்படத்தை பார்த்தபடியே அசையாமல் அமர்ந்திருக்கிறாள் இளம்பெண்.

அவளை ஃபோட்டோ பக்கத்தை திருப்ப கணவன் வலியுறுத்தியும் அவள் அப்படியே அமர்ந்திருக்கிறாள்.

அந்த ஃபோட்டோ தனக்கு வேண்டும் என்று இளம் பெண் கேட்க... உங்கள் ஆல்பத்திற்கு வேண்டுமானால் மனைவியோடு தான் அமெரிக்காவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் அளிப்பதாக அமைச்சர் கூற அதெல்லாம் வேண்டாம் இந்த ஃபோட்டோ மட்டும் போதும் என்கிறாள் அந்த இளம்பெண்.

மாலுமி சீருடை அணிந்த சிறுவன் புகைப்படத்தை யாருக்கும் அளிக்கு
இயலாது என்று மறுத்து அமைச்சர் மனைவி கடுகடுக்கிறார்.

இதை நான் எப்பவும் பார்த்திட்டு இருக்கணும் என்று இளம் பெண் கூற அவளை கண்டிக்கிறான் கணவன் உனக்கு பைத்தியமா? என்று.

குழந்தைகள் படம் வேண்டும் எனில் வேறு சேகரித்து வைத்திருக்கிறேன். அதை தருகிறேன் என்று அமைச்சர் கூற, இளம் பெண் மறுத்து எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்று கூறி
அந்த புகைப்படத்தை தடவிக் கொண்டே இருக்க அமைச்சருக்கு சிலிர்க்கிறது.

இந்த புகைப்படம் வேண்டும் என்று திரும்ப திரும்ப அவள் சொல்ல அதில் ஓர் ஏக்கம் கலந்திருப்பது தெரிந்து அமைச்சர் அமைதியாக இருக்கிறார் அவள் கண்களில் எதையோ தேடிக் கொண்டு...

அப்புகைப்படம் தனக்கு வேண்டும் என்று அவள் அடம்பிடித்து வைக்க அமைச்சரின் மனைவி ஆல்பத்தை பிடுங்கவும் இளம்பெண் கணவன் அவளை வசைப்பாடிக்கொண்டே அங்கிருந்து இழுத்துச் செல்கிறான்.
மறுநாள் காலை தனிச்செயலாளர் வீட்டு காலிங் பெல் ஒலிக்கிறது. வெளியே அமைச்சர். அந்த புகைப்படம் எடுத்து வந்திருக்கிறேன் என்று. அவள் இருக்கையில் அமர அவளுக்கு எதிரே மண்டியிட்டு தரையில் அமர்ந்த அமைச்சர் அப்புகைப்படத்தை அவளுக்கு அளிக்க அதை ஆதாரத்துடன் வருடிக் கொண்டே இருக்கும் அவளைப் பார்த்து அமைச்சர் "நேத்து எனக்கு அடையாளம் தெரியவில்லை" யென முணுமுணுப்பு செய்கிறார். அவர் தலையை தடவிக் கொடுத்து அவளுக்கு அந்நியமான குரலில் மெதுவாக கூறுகிறாள்
"இனி எழுந்திரு" . என்னை மிகவும் பாதித்த கதை.

டார்ஜிலிங் என்ற கதையில் முப்பத்தொரு வயதான இல்லத்தரசி திடீரென்று மாரடைப்பால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். கணவன் தனது அலுவலகத்தில் முன்பணம் ஐநூறு ரூபாய் கேட்டு ஆங்கிலத்தில் விண்ணப்பம் எழுதி அளித்து விட்டு மனைவியை சந்திக்க மருத்துவமனை விரைகிறான். மருத்துவ உபகரணங்கள் மத்தியில் அழுத்தி பிடித்து வைத்திருந்த அவளைப் பார்த்து அவளது குழந்தை அழ கணவன் குழந்தையைத் தேற்றி தாய் செய்து வைத்த லட்டோடு உணவூட்டி குழந்தையை உறங்க வைக்கிறான். மருத்துவர் இல்லத்தரசி வயது கேட்டு அதிர்ந்து அவருக்கு எப்படி இவ்வளவு சிறு வயதில் மாரடைப்பு ஏற்பட்டது? ஏதாவது மன அழுத்தம் இருந்ததா என்று விசாரிக்க, அவளுக்கு எந்த கவலையும் அழுத்தமும் இல்லை. நான் தான் அனைத்தும் கவனித்து கொள்கிறேன் என்கிறான் கணவன்.
மறுநாளே அவனுக்கு அலுவலகத்தில் கேட்ட முன்பணம் ஒப்பளிப்பு செய்யப்பட்டு கையில் கிடைக்க அவனது கடித வரைவு திறமையை சிலாகித்து பேசுகின்றனர் அலுவலகத்தினர்.

அவனது குழந்தை விழித்தெழுந்து குதூகலிக்கிறான் "அப்பா... நாம் எல்லோரும் டார்ஜிலிங் போறோமா .. அம்மாவுக்கு டார்ஜிலிங் போய் வெண்பனியை பார்க்க ஆசை தெரியுமா?" என்று.

வெளியேற்றம் என்று சிறுகதையில் சிலைவடிக்கும் கலையில் திறமையும் பெயரும் பெற்ற அவளுக்கு கலைதான் எல்லாம். கணவன் பக்க துணையாக இருக்க மென்மேலும் உயரம் செல்கிறாள். ஒரு கட்டத்தில் குழந்தைபேறு கிடைக்காத அவளை வீட்டோடு வலம்வந்து அனைத்து வசதிகளும் அனுபவிக்கும் கணவன் அவளை மிருகத்தனம் நிறைந்தவளாக மனிதாபிமானம் அற்றவளாக மாறிப் போனதாய் குறைகூறுகிறான். ஆனால் அவனுக்கு சிலை வடிக்க மாதிரியாக வந்த பெண்ணிடம் உறவு. அதை மறைத்து வைத்து இவளை வெறுமை படுத்தி பேசும் கணவன் உண்மை மனமறிந்து துரோகத்தின் வலி தாங்காமல் வெகுண்டு வெளியேறுகிறாள் அவள்.... வலிக்கச் செய்யும் கதை.

நெய்பாயாசம் என்ற கதையில் கணவன் வேலைக்கு சென்றிருக்க.. எதிர்பாராத விதமாக காலையில் மாரடைப்பால் இறந்திருக்கிறாள் அவனது மனைவி. மருத்துவமனையிலிருந்தே அவளது ஈமச்சடங்கு அனைத்தும் முடிந்து வீடு திரும்பும் கணவனுக்கு மனைவி இறந்து விட்டதால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று அலுவலகத்திற்கு எழுதி போடுகிறான். அவள் இல்லாமல் எப்படி மூன்று பிள்ளைகளை குளிப்பாட்ட , அவர்களை வளர்க்க, சமைத்து போட என்று தலையில் கைவைத்து அமர்ந்து விடுகிறான்.

அம்மா வரலையா என்று ஓடிவரும் மூன்று பிள்ளைகளுக்கும் என்ன பதிலளிக்க முடியும்? சமையலறை மேடையில் அவள் விதவிதமாக சமைத்து வைத்திருந்த உணவு... அவளது கைப்பட்ட அனைத்திலும் மரணத்தின் ஸ்பரிசம். அவற்றை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்து "நான் உப்புமா செய்யுறேன் சாப்பிட்டு படுக்கலாம்" என்று குழந்தைகளிடம் கூறுகின்றான். அப்பா நெய் பாயாசம் என்று அந்த பாத்திரத்தில் விரலை வைத்து கேட்கிறான் பெரிய மகன். சரி இனி இவர்கள் அவள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட வாய்ப்பில்லை ... இதையாவது கடைசியாக ருசித்து கொள்ளட்டும் என்று சமாதானம் செய்து கொண்டு நீயே பறிமாறு எனக்கு தலைவலிக்கிறது மனைவி அமரும் பலகையில் அமர்கிறான் கணவன். நெய் பாயாசம் ருசித்த பிள்ளைகள் இதுவே போதும் உப்புமா வேண்டாம் என்கிறார்கள். "சரிதான் அம்மா அசல் நெய் பாயாசம் தான் செய்திருக்கிறாள்" என்றவன் குழந்தைகளிடம் இருந்து தனது கண்ணீரை மறைக்க குளியலறைக்குள் நுழைந்து கொள்கிறான்.

குளிர், சிவப்பு பாவாடை ஆகிய சிறுகதைகளும் இருக்கின்றன.

தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளிலும் பிரதானமாக மரணம், இல்லத்தரசி சுகவீனம், அவளது மௌனியான ஆசைகள் காலங் காலமாக தொடர்ந்து வரும் ஆண்களின் ஆதிக்கம், துரோகங்கள், பேசப்படுகிறது. அதிகப்படியான சோகம் இழைந்தோடுகிறது. ஏன் கமலா தாஸ் கதைகளில் வரும் நாயகிகள் அனைவரும் சுகவீனமாகவே இருக்கின்றனர், மருத்துவமனை, மரணம், மரணத்துவிடுவோம் என்ற அவர்களது பீதி நிறைந்தவர்களாக, துரோகத்தின் சுவடுகளை காலம் கடந்து கவனிக்கும் பேதைகளாக வலம் வருகிறார்கள் என்று புரியவில்லை. எத்தனை சலித்துக் கொண்டாலும் அவரது படைப்புகளில் சரடாக இழையோடும் அந்த மெல்லிய உணர்வுகள் நம்மை கொஞ்சம் நெகிழ வைப்பதும் உண்மை என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

"எங்களுக்கு எதைக் கற்றுத் தரப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். ஒருவேளை சிரிக்கக்கூடும். நான் தவறான பாதையில் பயணித்து எது சரி எது தவறு என்று உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். வாழ்க்கைக்கு எந்த ஒழுங்கு முறையும் இல்லை. சில சமயம் நீங்கள் அதில் எந்தப் பொருளையும் காணப்போவதில்லை"
சொன்னது கமலா தாஸ் தான்

புத்தகம் பெயர்: பறவையின் வாசனை
எழுதியவர்: கமலா தாஸ்
பக்கங்கள்: 166
பதிப்பகம்: காலச்சுவடு

எழுதியவர் : எண்ணம் (26-Aug-23, 9:12 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
Tanglish : vaasippu anupavam
பார்வை : 88

மேலே