’திருவிளையாடற் புராணத்தில் மதுரை என்ற சொல்’ உள்ள பாடல் 1
திருவிளையாடற் புராணம்
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
93
கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங்;
..கொப்பூழ்
அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற்
..றாலஞ்
செங்கை யேடக மேனியே பூவணந்
..திரடோள்
பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம்
..புரமே! 2
- திருநகரச் சிறப்பு, மதுரைக் காண்டம்
பொருளுரை:
(அந்நங்கைக்கு) கொங்கைகள் திருப்பரங்குன்றமும் திருக்கொடுங் குன்றமுமாகும்;
உந்தியாகிய உறுப்பு திருச்சுழியலென்னுந் தலமாகும்;
அவ்வழகிய வயிறு திருக்குற்றாலமென்னுந் தலமாகும்;
சிவந்தகை திருவேடகமென்னுந் தலமாகும்;
உடல் திருப்பூவண மென்னுந் தலமாகும்;
திரண்ட தோள்கள் சோலைகள் சூழ்ந்த வேணுவனம் என்னுந் தலமாகும்; அழகிய முகம் மதுரை யாகிய நகரம் ஆகும்!
அந்நங்கைக்கு என்பது வருவிக்க;
கொடுங்குன்று – பிரான்மலை;
வேய்வனம் – திருநெல்வேலி;
குன்றுகள் கொங்கைக்கு உவமமாகலின் பரங்குன்றம், கொடுங்குன்றுகளைக் கொங்கை யென்றும்,
நீர்ச்சுழி, ஆலிலை, தாமரை, மலர், மூங்கில் என்பன கொப்பூழ் முதலியவற்றுக்கு உவமமாகலின், பெயரான் அவற்றோடு இயைபுடைய பதிகளை அவ்வங்கங்கள் என்றும், சந்திரனது அமிழ்தத்தாற் சாந்தி செய்யப் பட்டமையின் மதுரை யென்பது பெயராயிற்று என மேல் இப்புராணத்துள் ஓதப்படுதலானும்,
சந்திரன் முகத்திற்கு உவமமாகலானும் மதுரையைத் திருமுகமென்றுங் கூறினார்.