திருவன்பிலாலந்துறை, ஐந்தாம் திருமுறை – பாடல் 1

திருநாவுக்கரசர் தேவாரம், ஐந்தாம் திருமுறை
080 திருவன்பிலாலந்துறை – பாடல் 1
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2 , 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்;நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக்
கோனெஞ் செல்வனைக் கூறிட கிற்றியே. 1

பொழிப்புரை:

நெஞ்சே! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை; நீ கெடுவாய், பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக.

குறிப்புரை:

வானம்சேர் - ஆகாயத்தைச் சேர்ந்துள்ள, மைந்தன் - இளையன், வலியன்,

நெஞ்சே நீ - மனமே நீ, கெடுவாய் – கெட்டுவிடுவாய்,

நினைகிற்கிலை - நினையாமல் இருக்கின்றாய், நீ நன்மையடைதற் பொருட்டுக் கூறவில்லையாதலால் கெடுவாய் என இயைத்துக் கூறுக.

ஆனஞ்சு – பஞ்சகவ்வியம், கோன் – தலைவனாகிய,

அன்பிலாலந் துறை இறைவன் திருப்பெயரைப் பலகாலும் சொல் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-23, 5:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே