தமிழ் எங்கள் உயிருக்கு மேல் நூல் ஆசிரியர் கவிஞர் இராஇரவி நூல் விமர்சனம் கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு, ஆகஸ்ட் 2023
*****
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
அளவில் சிறிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அகிலப் புகழ்பெற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், உரைநடனம் என்று தமிழில் பல்வேறு வகைகளில் கவித்திறன் காட்டி வருவோர் நடுவே கவிஞர் இரா.இரவியும் ஒருவர். “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?” என்று நெற்றியடி அடித்தவர் இரவி. இந்நூலில் சற்று பெரிய பெரிய கவிதைகள், அதுவும் அதிகமாகப் பெரிதாகாத அழகான கவிதைகள். எல்லாக் கவிதைகளும் தமிழ் குறித்தது. தமிழின் பெருமை குறித்தது. தமிழ் குறித்த நமது பொறுப்பு குறித்தது. பாவேந்தர், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றுதானே பாடினார். அது உயிருக்கும் மேலானது என்பதே கவிஞர் பாடவந்த செய்தி. தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழ்இனத்தின் பண்பாடாகவும் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இதை, “போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ், போரிலும் அநீதியைத் தவிர்த்திட்ட தமிழ்” என்கிறார் கவிஞர் இரவி. அமுதம் உண்டால் ஆயுள் நீளுமாம், அப்படியொரு நம்பிக்கை நமக்குண்டு. கவிஞர் இரவியிடம் அமுதம் வேண்டுமா? என்று கேட்டால் அமுதினும் மேலாய், தன் ஆயுளுக்கும் மேலாய் தமிழே வேண்டுமென்பாராம், “அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால் அமுதம் வேண்டாம், தமிழ் வேண்டும் என்பேன்” எனும் வரிகளில் அவரது மொழிப்பற்று மிகுந்து காணப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். குறள் எதற்கு? என்றால் படிக்க மட்டுமல்ல, அதன்வழி நடக்கத்தான் என்பதை அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தாத படைப்புகளில்லை, பொழிவுகளுமில்லை. கவிஞர் இரவி 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் குறைந்தது பத்து குறள்பா நெறிகளை மேற்கொண்டாலேயே போதும் என்கிறார். “1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று என்பது ஏற்கத்தக்கது. கவிஞர் இரவி எப்போதுமே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை விரும்பாதவர். தமது பல கவிதைகளில் இதை வலியுறுத்துவார். இந்த நூலிலும் ஒரு பாடல், “தமிழா நீயின்று பேசுவது தமிழா? தமிழை நீ இல்லாது பேசுவது தகுமா?” என்ற அறைதல் சிறப்பு. உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தின் பயன்பாடு பெருகிக் காணப்படும் மொழி தமிழ் எனும் கவிஞர் இரவி இணையத் தமிழ் குறித்தும் ஒரு கவிதை பாடியுள்ளார். இணையத்திலேயே இப்போது இன்பத் தமிழை மாந்தலாம் என்பதற்கு கவிஞர் இரவியே ஓர் எடுத்துக்காட்டு. அவரையும் அவரது படைப்புகளையும் இணையத்தில் பாராத நாடே இருக்காது. கீழடி சிறப்பைப் பற்றி இரண்டொரு கவிதைகள், என்னதான் ஆங்கில ஆதிக்கமிருப்பினும் இன்னும் தமிழில் தொலையாத வார்த்தைகள் குறித்த கவிதையும் சிறப்பு. இந்நூல் கவிஞர் இரவியின் தமிழ்ப்பற்றினை உணர்த்துவது மட்டுமின்றி நமக்கும் ஊட்டுகிறது.
*****