கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால் - பழமொழி நானூறு 367

இன்னிசை வெண்பா

கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல். 367

- பழமொழி நானூறு

பொருளுரை:

நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையுற அறிந்ததாக நினைக்கும் மிக்க நுண்பொருளை பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. ஆனபின், கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் உடையேம் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எக்காரணம் பற்றி?

தமது சொற்களால் தவத்திற்குப் பகையாயினாரைப் பணியச் செய்து, பணியாராயின் சினந்து கொல்லுகின்ற முனிவர்களுக்கும் தாங் கருதியதை எடுத்துச்சொல்ல முடியாத விடத்து தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இலவாம்.

கருத்து:

கற்றார்க்குச் சொல்வன்மை இன்றியமையாது வேண்டப்படும் பொருள்.

விளக்கம்:

‘ஒன்னார்த் தெறலும்' என்றபடி தீயோரை வணக்குதல், வெகுண்டு அடுதல் முதலியன தவஞ்செய்வார் தம் சொல்லாற்றலால் நிகழ்த்துவன. சொல்வன்மை யில்லாராயின், தவத்தினது ஆற்றலாகிய சாபஅருள் அவருக்கு இல்லை யென்பதாம்.

‘முற்றத் துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்; 'இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-23, 12:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

மேலே