உரையுள் வளவியசொல் சொல்லா அதுபோல் நிரையுள்ளே இன்னா வரைவு - பழமொழி நானூறு 366

நேரிசை வெண்பா

பல்கிளையுள் பார்த்துறான் ஆகிய ஒருவனை
நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்
உரையுள் வளவியசொல் சொல்லா அதுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு. 366

- பழமொழி நானூறு

பொருளுரை:

நெருங்கிய பல சுற்றத்தார் நடுவே ஆராய்ந்தறிதல் இல்லாதவனாகி தமது கிளையுள் ஒருவனை அவனது வறுமை காரணமாக வேறுபட நினைந்து நன்றாக ஆராய்தலில்லாதவனாக ஒன்றைக் கூறின்,

சொற்களுள் நல்ல சொற்களைச் சொல்லாதவனாக ஆதல்போல, பத்தியாய்க் குழுமியிருந்த கூட்டத்தில் ஒருவனை வரைந்து சிறப்புச் செய்தலும் இன்னாது.

கருத்து:

கூட்டத்தில் ஒருவனை இழித்துப் பேசுதலும் ஒருவனை உயர்த்திப் பேசுதலும் தீதாம்.

விளக்கம்:

கூட்டத்துள் ஒருவனை வறுமை காரணமாக இழித்துக் கூறுதலும் ஆகாது; ஒருவனை உயர்த்திக் கூறிச் சிறப்புச் செய்தலும் ஆகாது. பொருள் இரண்டனுள் ஒன்று உவமையாகவும் மற்றொன்று பொருளாகவும் நின்றன.

'நிறையுள்ளே இன்னா வரைவு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-23, 12:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே