விடுமுறை கொண்டாட்டம்

கோடை விடுமுறை என்னவோ பள்ளியில் வருடம் ஒருமுறை ஆனால் எங்களுக்கு இரு வருடங்களுக்கு ஒரு முறை தான்,


அதாவது அந்தமானில் இருந்து தமிழ் நாடு வருவது இரு வருடங்களுக்கு ஒரு முறை தான்.


மூட்டை முடிச்சுக்களோடு கப்பலில் பிரயாணம் பிறகு சென்னையில் இருந்து பஸ் அல்லது ட்ரெயின், ட்ரெயினில் முன் பதிவு அவசியம் என்பதால்(அப்பொழுதெல்லாம் செல் ஃபோன் இருக்கவில்லை) பஸ்ஸுக்கு தான் முன்னுரிமை வழங்குவார் என் கணவர்.


ஒரு வழியாக அடித்துப் பிடித்து ஏறி ஊர் போய் சேரும் போது மறுநாள் விடியற்காலை ஆகியிருக்கும்.


வீடு போய்ச் சேரும் போது அதாவது வீட்டிற்குள் நுழையும் பொழுதே மாமியார்
"வாங்க வாங்க இப்போ தான் வாரிங்களா" என்று கேட்பார், அவர் கண் முன் உள் நுழையும் பொழுதே இந்த கேள்வி பிறக்கும் அத்துடன் ஆயி( என்னை அழைக்கும் முறை) அடுப்பு பக்கத்துல பால் வாங்கி வச்சுருக்கேன் பாரு என்பார்கள்.


அதாவது பாலை காய்ச்சி காஃபி யை போடு என்று சூசகமாக கட்டளை பிறக்கும்.
காலைக் கடன் கழிக்கும் நேரம் கூட என்னை விட்டு வைக்கும் மனது அவரிடம் இருக்காது.


அப்பொழுது தொடங்கும் ஊழியம் தொடரும் இரவு வரை.


கணவரோ காஃபி போட்டு வை ஃபிரண்ட்ஸ பார்த்துட்டு வரேன் என்று கிளம்பி விடுவார் குடுத்து வைத்த பிறவி.


இதே போல் விடுமுறை முழுவதும் கழியும். என் பிறந்த வீட்டாரிடம் இருந்து கேள்வி பிறக்கும் ஊருக்கு வந்து இத்தனை நாள் ஆகிவிட்டது எப்போது எங்கள் வீட்டிற்கு வரப் போகிறாய் என்று.


அடுத்து அனுமதி வாங்கும் படலம், கணவரிடம் சென்று அக்கா வீட்டுக்கு போக வேண்டும் என்றால், சரி என்று பெருந்தன்மையாக கூறுவார், " இன்னைக்கு "சாயங்காலம் கிளம்பி போய்ட்டு நாளைக்கு மத்தியானம்" வந்துடலாமா என்று சாவதானமாக கேட்பார்.


எங்கூட பிறந்த அக்காவ பார்க்க இவங்க கிட்ட அனுமதி கேட்கும் அவளம் நினைத்து மனம் குமுறும், தன்மானம் தடுக்கும்.


வாய்விட்டு ஒன்றும் கூற இயலாமல் நின்றால், மனதில் ஓடும் எண்ணத்தை என் அனுமதி இல்லாமலே எடுத்துரைக்கும் என் கண்கள்.


அதற்கும் உடனே பதில் கிடைக்கும், என்ன பண்ணுவதும்மா நாளைக்கு சாயங்காலம் கொத்தனார் வருவார் அப்ப நான் வீட்டில் இருந்தா தான் சரியாக இருக்கும் இல்லன்னா அப்பாவ ஏமாத்திட்டு சரியா வேலை பாக்காம போயிடுவான் என்பார்.


கொத்தனார் வந்தால் நீங்கள் தானே இருக்க வேண்டும் நானாவது அக்கா வீட்டில் இரண்டு நாள் தங்கி வருவேனே என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு வெளியே மௌனம் காக்க வேண்டும்.


வெளியில் தர்க்கம் செய்தாலும் என் சொற்கள் அரங்கேறாது என்று நன்கு அறிவேன்.


ஏனெனில் இரண்டு நாட்கள் நான் இல்லையெனில் யார் சமையல் செய்வது.
நேரத்திற்கு பரிமாறும் இயந்திரம் நான்.


இப்படியே ஒருவழியாக விடுமுறை கழிந்து ஊருக்கு திரும்பும் நாளும் வந்துவிடும்.


பின் சென்று சேர்ந்த உடன் இருக்கவே இருக்கிறது அதே செக்கு மாட்டு வேலை.


விடுமுறையும் வந்தது ஊருக்கும் போனோம் ஆனால் எனக்கு இதில் விடுமுறை எங்கே? கொண்டாட்டம் எங்கே?


இவ்வாறாக இருபத்து ஒன்பது வருடங்களை கடத்தி விட்டேன் இன்னும் எத்தனை வருடங்கள்...?. என் பொறுமை இன்னும் எத்தனை வருடங்கள் கை கொடுக்கும், யாம் அறியேன் பராபரமே ...!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (7-Sep-23, 10:28 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 201

மேலே