இஸ்ரோ-நாசா கலந்துரையாடல்
நாசா: வாழ்த்துக்கள். சந்திரனின் தெற்கு பகுதியில் வெற்றிகரமாக இறங்கிவிட்டீர்கள்.
இஸ்ரோ: நன்றி. நீங்கள் அடுத்த விண்கலத்தை சந்திரனின் எந்த பகுதிக்கு அனுப்பப்போகிறீர்கள்?
நாசா: நாங்கள் மேற்கத்திய நாடு என்பதால், சந்திரனின் தெற்கு பக்கத்திற்கு எங்களது அடுத்த விண்கலத்தை அனுப்பப்போகிறோம்.
இஸ்ரோ: அப்படி என்றால் நாங்கள் சென்ற பக்கத்திற்குத்தான் அடுத்த விண்கலத்தை அனுப்புகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?
நாசா: நீங்கள் கண்டுபிடிக்காததை நாங்கள் கண்டுபிடிப்போம்
இஸ்ரோ: நாங்கள் கண்டவைகளை பிடிக்கவில்லை. வெறுமனே புகைப்படம் எடுத்தோம். அவ்வளவுதான். நீங்கள் எதைக்கண்டு அதை பிடிக்கப்போகிறீர்கள்?
நாசா: எதை கண்டுபிடிப்போம் என்று இப்போதே சொல்ல இயலாது. அங்கு போய் தேட்டா போட்டால்தான் தெரியும்.
இஸ்ரோ: அங்கேயும் ஏலியன்ஸ் இருப்பதாக எங்களுக்கு சில அறிகுறிகள் கிடைத்துள்ளது. ஆகவே நீங்கள் சந்திரனில் ஏலியன்ஸ் எவரையாவது கண்டுபிடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நாசா: ஒருவேளை ஏலியன் எவரையேனும் பார்த்தால், எப்படியும் அவரை பூமிக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுவோம்.
இஸ்ரோ: ஏலியன்ஸ் என்றால் இளிச்சவாயன் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் அது அவ்வளவு சுலபமான வேலையாக இருக்காது. ஏனெனில், எங்கள் சாட்டிலைட்டில் சில புரியாத விசித்திரமான சப்தங்கள் பதிவாகி இருக்கிறது.
நாசா: எங்கள் சாட்டிலைட்டிலும் 1969 இல் சில பயங்கர சத்தங்கள் பதிவாகி இருந்தது.
இஸ்ரோ: அப்படி என்றால் அது நிச்சயம் ஏலியன்ஸ் சத்தமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
நாசா: நாங்களும் முதலில் அப்படிதான் நினைத்தோம். ஆனால், ஆராய்ச்சிக்கு பிறகுதான் தெரியவந்தது, அது சந்திரனில் முதல் காலடி வைத்த, எங்கள் அருமையான விண்வெளிவீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் குறட்டை சத்தம் என்று.
இஸ்ரோ: ஓ அப்படியா. ஆச்சரியமாக இருக்கிறதே. அது அவர் சந்திரனில் தூங்கும்போது விட்ட குறட்டையா அல்லது விண்கலத்தில் தூங்கும்போது விட்ட குறட்டையா?
நாசா: இந்த கேள்வியை ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் கேட்டபோது "நான் பொதுவாக குறட்டை விடும் ஆள் இல்லை. ஆனால் சந்திரனில் அரை மணிநேரம் தூங்கியபோது ஒருவேளை குறட்டை விட்டேனோ என்று தெரியாது. "என்று பிடிபடாமல் படத்தில் கொடுத்தார்.
இஸ்ரோ: அப்படியே அவர் குறட்டை விட்டிருந்தாலும் வேறு எதையும் கோட்டை விடாமல் வெற்றிகரமாக திரும்பிவந்தாரே.நாங்கள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பவில்லை. எனவே எங்கள் சாட்டிலைட்டில் பதிவான சத்தம் நிச்சயமாக குறட்டையாக இருக்காது.
நாசா: ஒரு வேளை அது ஏலியன்ஸின் குறட்டையாகக்கூட இருக்கலாம் அல்லவா?
இஸ்ரோ: உங்கள் சந்தேகம் மிகவும் சரியானதே. இந்த சாத்தியக்கூறை பற்றி எங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரியப்படுத்துகிறோம்.
நாசா: நல்லது. எங்கள் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திலிருந்தும் விசித்திரமான சில சத்தங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அது ஏலியன்ஸின் குறட்டை சத்தமா அல்லது அரட்டை சத்தமா என்பது பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இஸ்ரோ: நீங்கள் செவ்வாய் கிரகித்து ஏலியன்ஸை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் நாட்டில் ஆங்காங்கே சில மனிதர்கள் கூட ஏலியன்ஸ் போலத்தான் இருக்கிறாரகள். சிறிய முகம், உருளும் மிரட்சி விழிகள், குட்டியான கால்கள், சொப்பு போன்ற வாய், முகத்தைவிட பெரிய தலை, குறுகிய இடுப்பு இதற்குமேலாக இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் புரிவதில்லை. சப்பாத்தியும் சோறும் சாப்பிடுகிறார்கள் என்பதால் இவர்களை நாங்கள் நமது கிரகத்தின் மக்களாக ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.
நாசா: அப்படிப்பட்ட சிலரை நீங்கள் நாசாவிற்கு அனுப்பிவையுங்கள். ஒருவேளை அவர்கள் ஏதாவது வேறு கிரகத்தின் வேவு பார்க்கும் ஏலியன்ஸா என்பதை ஆராய்ச்சி செய்து சொல்லுகிறோம்.
இஸ்ரோ: ஐயோ. அப்படியெல்லாம் இல்லீங்க. அவங்க எங்க நாடு பிரஜைகள்தான். ஒரு பேச்சுக்காக சும்மா சொன்னேன். அவ்வளவுதான். வருங்காலத்தில் சந்திரனில் சில பூங்காக்கள் அமைத்து, அங்கே எங்கள் நாட்டில் உள்ளதுபோல பொது வானொலி அமைத்து, அதில் இந்திய செய்திகள் மற்றும் எங்களது பாடல்களை ஒலிபரப்ப ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.
நாசா: நாங்கள் ஏற்கெனவே அந்த முயற்சியை செய்துவிட்டோம்.
இஸ்ரோ: அப்படியா, உண்மையாகவா? என்ன விளைவு?
நாசா: நல்ல இனிமையான பாடலை இங்கிருந்து அனுப்பி சந்திரனில் அது ஒலிபரப்பாகும்போது, அதே பாடல் கர்ணகொடூரமாக கண்ணராவியாக காதில் விழுகிறது.
இஸ்ரோ: ஆஹா, எங்களுக்கு இப்போது ஒரு அருமையான யோசனை வந்திருக்கிறது. நீங்கள் சந்திரனுக்கு அனுப்பிய இனிமையான பாடல்கள்தானே கேட்பதற்கு கொடுமையாக இருக்கிறது. எங்கள் நாட்டில் ஹிந்தி தமிழ் சினிமா பாடல்களை சந்திரனில் ஒலிபரப்பும்போது அவை நிச்சயமாக காதுக்கு இனிமையாக ஒலிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
நாசா: அதனால் உங்களுக்கு என்ன லாபம்?
இஸ்ரோ: அட நீங்க என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்? இங்கே பல ஆண்டுகளாக எதையெதையோ பாடிக்கொண்டு எங்களையும் எங்கள் காதுகளையும் சித்திரவதை செய்யும் ஆயிரக்கணக்கான பாடகர்கள் பாடகிகளை சந்திரனுக்கு நாடு கடத்துவதற்கு எங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு ஏற்படும். இவர்கள் சந்திரனில் பாடுகையில் அது இனிமையாக மாறிவிடும் அல்லவா?
நாசா: ஓ அப்படியா, இந்த நல்ல யோசனையை நாங்கள் வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கிறோம். அமெரிக்காவிலும் பாடுகிறேன் பேர்வழி என்று கன்னாபின்னாவென்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பேர்களை என்ன செய்யலாம் என்று எங்கள் அதிபரும் யோசித்து வருகிறார். உங்கள் யோசனையை சொன்னால் நிச்சயம் அவர்களை சந்திரனுக்கு நாடு கடத்திவிட அவர் முயற்சி செய்வார்.
சரி, இப்போது எனது பெண் தோழி டேட்டிங்கிற்கு அழைத்திருக்கிறாள். நான் உடனே செல்லவேண்டும். மீண்டும் ஒரு முறை பேசுவோம்.
இஸ்ரோ: நன்றி ராசா இல்லை.. இல்லை.. நன்றி நாசா!