கிபி 2222 இல் சந்திரனில்

சந்திரமோகன்: சந்திரமுகி, உன் மேக் அப் எப்போது முடியும்? இன்னும் ஒரு மணி நேரத்தில் விண்கலம்-10 பூமிக்கு புறப்பட்டுவிடும். நாம் பத்து நிமிடங்களுக்கு முன்பாக விண்கல நிலையத்தில் இருக்கவேண்டும். பூமியில், இந்தியாவில், மதுரையில் நாளை என் தம்பியின் திருமணம்.

சந்திரமுகி: சந்து, உனக்கு எவ்வளவு தடவை சொல்வது. விஞ்ஞானத்தால் எல்லாமே வேகமாக செயல்படமுடியும், ஆனால் பெண்களுக்கான மேக் அப் நேரத்தில் அதிக மாற்றமே இல்லை. 2023 இல் ஒரு பெண்ணுக்கு மேக் அப் செய்ய சராசரியாக அரைமணி நேரம் எடுக்குமாம். ஆனால் அப்போது மூன்று அல்லது நான்கு முகப்பூச்சுகள் மட்டுமே இருந்தது. இந்த 2222 இல் குறைந்தது இருபத்தி ஐந்து முகப்பூச்சுகள் உள்ளன. ஆனால், என்னிடம் இருபது வகைகள்தான் இருக்கிறது. இருப்பினும் நான் அரைமணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளமாட்டேன். அது சரி, மதுரை மீனாட்சி கோவில் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துவிட்டீர்களா?

சந்திரமோகன்: நான் அதற்கு டிக்கெட் பதிவு செய்துவிட்டு உனக்கு அன்றே சொன்னேனே. மறந்துவிட்டாய் என்று நினைக்கிறன். அதுவும் தரிசனம் பௌர்ணமி அன்று. பூமியிலிருந்து நாம் குடியேறியுள்ள சந்திரனை இரவில் கண்டு அதன் அழகை ரசிக்கலாம்.

சந்திரமுகி: எனது தோழி ஒருத்தி இந்தியாவிலிருந்து moonaapil (மூன் ஆப்) ஒரு மெசேஜ் கொடுத்திருந்தாள். இப்போதெல்லாம் சந்திரன் முன்புபோல அதிக ஒளியுடன் அழகுடன் இல்லயாம், சந்திரனில் ஆங்காங்கே நிறைய கீறல்களும், கீழும் மேலும் கோடுகளும் தெரிகிறதாம். இது எதனால் இருக்கும்?

சந்திரமோகன்: பின்னே எப்படி அழகாக இருக்கும். இப்போது சந்திரனில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மனிதர்கள் குடியேறிவிட்டார்கள். சீனாவிற்கு அடுத்தபடியாக நாம் இந்தியர்கள்தான் இங்கு அதிகம். சீனாவும் அமெரிக்காவும் அதிக அளவில் தொழிற்சாலைகள் ஆரம்பித்துவிட்டார்கள். அதில் வெளியாகவும் புகைகளும் மற்றும் பலதரப்பட்ட வாகனங்களின் நச்சுப்புகைகளினால் சந்திரனின் மேற்பரப்பில் அசுத்தம் படிய ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் பூமியிலிருந்து நம் கோளை பார்க்கையில் இப்படிப்பட்ட கீறல்களும் கோடுகளும் தெரிகிறது. சரி, இப்போது அதிக பேச்சுக்கு நேரமில்லை. இந்த விண்கலத்தை மிஸ் பண்ணா அடுத்த விண்கலம் இன்று இரவு எட்டு மணிக்கு. அது நாளை மாலைக்கு மேல்தான் பூமிக்கு செல்லும். அதற்குள் என் தம்பியின் திருமணமே முடிந்துவிடும்.

சந்திரமுகி: நான் இன்னும் பத்து நிமிடங்களில் தயாராகிவிடுவேன். நீங்கள் விண்வெளி மையம் போக காலா டாக்ஸியை புக் பண்ணுங்க. அதற்குள் நான் தயாராகிவிடுவேன். மறக்காமல் அந்த சந்திர கற்கள் பொட்டலத்தை சூட் கேசில் எடுத்துவைக்க மறக்காதீர்கள்.

சந்திரமோகன்: அப்பாடி, டாக்ஸி புக் பண்ணுவதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாய். ரொம்ப மகிழ்ச்சி.

விண்வெளி மையம் சேர்ந்தவுடன் இருவரும் பாதுகாப்பு சோதனையை முடித்துவிட்டு பூமிக்கு செல்ல விண்கலம்-10 இல் ஏறிக்கொண்டனர். அடுத்த பத்து நிமிடங்களில் விண்கலம் சந்திரனின் தென்பகுதியிலிருந்து பூமியை நோக்கி பாய்ந்தது.

விண்கலத்தின் உள்ள இருவரும் உரையாடுகிறார்கள்.

சந்திரமோகன்: எதற்காக சந்திரனின் கற்களை நீ எடுத்துவருகிறாய்? ஏதோ அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு சோதனையின்போது அதைப்பற்றி கேட்கவில்லை.

சந்திரமுகி: சென்னை தங்க மாளிகையில் விண்கல் ஒரு கிராம் ஒரு லட்சத்திற்கு வாங்கிக்கொள்கிறார்களாம்.

சந்திரமோகன்: தங்க மாளிகையில் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

சந்திரமுகி: உங்களுக்கு விஷயம் தெரியாதா? சந்திரனின் கற்கள் கோர்த்த தங்க நகைகள் இப்போது மிகவும் பிரபலம் ஆகிவிட்டதாம். வெறும் தங்க ஆபரணம் என்றால் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது. சந்திரனின் கற்கள் பதித்த ஆபரணம் என்றால் குறைந்தது இரண்டு லட்ச ரூபாயாம். நாம் கொண்டு செல்லும் சந்திர கற்களுக்கு குறைந்தது ஐம்பது லட்சம் இந்திய நாணயம் கிடைக்கும். அந்த பணத்தை நாம் சந்திர நாணயமாக மாற்றிவிட்டால் இங்கே சந்திரனில் சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடலாம்.

சந்திரமோகன்: மிகவும் அற்புதமான திட்டம்தான். ஆனால், ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

சந்திரமுகி: என்ன பிரச்சினை?

சந்திரமோகன்: இந்தியாவில் விண்வெளி நிலையத்தில் சோதனை செய்யும்போது, சந்திரனின் கற்களை வெளியே எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டார்கள். மாறாக உன்னையும் என்னையும் உள்ளே எடுத்து போட்டுவிடுவார்கள்.

சந்திரமுகி: சந்து, நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க. நான் சமாளித்து கொள்கிறேன்.

சந்திரமோகன்: எப்படி சந்திரா?

சந்திரமுகி: மாயவரத்தில் உள்ள என்னுடைய மாமியார் வீட்டில் துணி துவைக்கும் சலவைக்கல் உடைந்துவிட்டது. சந்திரனில் உள்ள கற்கள் மிகவும் கெட்டியாக உறுதியாக இருப்பதால், இந்த கற்களைக்கொண்டு சலவைக்கல் செய்து என் மாமியாருக்கு, அன்பளிப்பாக கொடுக்கப்போகிறேன் என்று இந்தியாவில் பாதுகாப்பு சோதனையில் சொல்லிவிடுவேன்.

சந்திரமோகன்: அப்பாடி, என்ன ஒரு அதிரடி திட்டம். என் ஒன்று விட்ட மாமாவின் மாமியாரும், என்னிடம் சந்திரனிலிருந்து ஒரு அம்மிக்கல் வாங்கி வரும்படி கேட்டிருந்தார்கள். இந்த கற்களில் கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் அம்மிக்கல் செய்துகொள்வார்கள்.

சந்திரமுகி: என்னை என்ன ஒன்னும் அறியாத குத்துக்கல் என்று நினைத்தீர்களா? என்னுடைய தங்கை இந்திரா, சந்திர கல்லால் செய்த தோசை கல்லில் தோசை செய்தால் ரொம்ப ருசியாக இருக்குமாம், முடிந்தால் நீ இரண்டு கிலோ சந்திரா கல் வாங்கி வரமுடியுமா? என்று கேட்டதற்கே நான் "அவ்வளவு எல்லாம் கொண்டு வரமுடியாது. ஒரு கால் கிலோ வரை கொண்டு வர முயற்சி செய்கிறேன் “என்று சொல்லிவிட்டேன். நீங்கள் என்னடாவென்றால் உங்களுடைய ஒன்றுவிட்ட மாமாவின் மாமியாருக்காக அம்மிக்கல்லுக்காக சந்திர கற்களை கேட்கிறீர்கள். அவர்களிடம் சொல்லிவிடுங்கள். சந்திரனிலிருந்து கற்களை பூமிக்கு கொண்டுவருவது தடை செய்யப்பட்டிருக்கிறது. முடிந்தால் அடுத்தமுறை மீண்டும் பூமிக்கு வரும்போது ஒரு கால்கிலோ கல் கொண்டு வந்து கொடுக்கலாம்.

சந்திரமோகன்: சரி, சரி. புரிந்தது. இப்போது உணவு கொண்டுவருகிறார்கல். ஆ ஆ. இல்லை, இல்லை கொண்டுவருகிறார்கள். சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் படுத்து எழுந்ததால் பூமிக்கு சென்றுவிடுவோம்.

சந்திரமுகி: அப்படியே சந்து. ஒரு வேளை சாப்பிடும்போது, கல் ஏதாவது வாயில் மாட்டிக்கொண்டால், தூரப்போடவேண்டாம். அது சந்திர கல்லாகவும் இருக்கக்கூடும்.

பின்னர் இருவரும் உணவு உண்ணத் தொடங்குகிறார்கல் (கள்).

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Sep-23, 12:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 89

மேலே