வியாபாரம்

வியாபாரம்.

" தங்கம் " என்று மிகவும் குழைவான குரலில் கூப்பிட்டபடி தன் முன்னால் வந்து நின்ற தன் கணவன் இளங்கோ(வன்)வை தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் மனம் பேசியது.......
இவனையா நான் காதலித்தேன்.
வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி
இவனோடு குடும்பம் நடத்த
புறப்பட்டேனே என் புத்தியை
செருப்பால் அடி, தனக்குள்ளே
எண்ணிக்கொண்டாள்.

தங்கத்தையும் ஒரு விதத்தில்
பிழை சொல்லமுடியாது.
இளம் வயதில் அவள் வசித்த
கிராமத்தில் அங்கிருந்த இளம்
பெண்கள் பலருக்கு இளங்கோ
மீது ஒரு வித மயக்கம்.
பார்ப்பதற்கு இளங்கோ வாட்ட
சாட்டமாக இருந்தான். மற்ற
இளம் வட்டங்கள் போல்
சோலி சொட்டுக்கு போகாதவன்.
அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பவன்.
நாலு காசு சம்பாதித்து ஒரு மோட்‌டாரும் வாங்கி வைத்திருந்தான்.

அவன் குடும்பத்தில் அவன்
மாத்திரமே அவன் பெற்றோருக்கு
பிள்ளை. கிராமத்தில் இருந்த
பலருக்கு அவனை தங்கள்
பிள்ளைகளுக்கு கட்டி கொடுக்க
விரும்பினார்கள். அவனோ
தங்கத்தை பார்த்த நாளில் இருந்து
கட்டினால் அவளைத் தான் என்று
மனதில் வரைந்து கொண்டான்.
இதே போல் தான் தங்கத்தின்
மனநிலையும் இருந்தது. இதற்கு
தடையாக இருந்தது தங்கத்தின்
சாதியும் அவள் பெற்றோரின்
பரம்பரை அந்தஸ்தும் தான்.
ஒரு நாள் தங்கம் யாருக்கும் சொல்லாமல் இளங்கோவுடன்
வாழ்வை ஆரம்பித்து விட்டாள்.

ஆரம்பம் நன்றாக தான் இருந்தது.
நாள் செல்ல செல்ல இளங்கோ
கையில் இருந்த பணமும் கரைந்து
போய்விட்டது. இடமோ புதிது.
அவனை நம்பி எவரும் பெரிய வேலை ஏதும் கொடுக்க தயங்கினார்கள்.
சூழ்நிலை அவனை மெதுவாக
மாற்றிவிட்டது. குடிக்க பழகி
கொண்டான். அது கறையான்
போல் அவர்களுடைய வாழ்வை
தின்று கொண்டு இருந்தது.

இவ்வளவு நாளும் வேலைக்கு
போகவிடாமல் வைத்திருந்த
தங்கத்தை இளங்கோவும் வேறு
வழி இன்றி வேலைக்கு போக
சம்மதித்தான். அவளும் ஏதோ
வேலை செய்து இருவருடைய
வயிற்றுப் பிழைப்பையும் பார்த்து
கொண்டு இருந்தாள். முன்பு
போல அவளும் இப்போ அவனை
அவ்வளவாக கண்டு கொள்வது
இல்லை. ஆனால் 'தங்கம்' என்று
குரலில் கனிவுடன் கூப்பிட்டபோது
அவளால் அவனை அசட்டை செய்ய முடியவில்லை. தலை நிமிர்ந்து பார்த்த தங்கம் உனக்கு இப்போ என்ன வேண்டும், குரலில்
அப்படி ஒரு பாசம் கொட்டுதே
என்று கடுகு ஆனாள்.

இளங்கோ தயக்கத்துடன்,
பார் தங்கம் , இந்த புது
இடத்தில் எவரும் எனக்கு ஒரு
நல்ல வேலை தருவார்கள் என்று
தெரியவில்லை . ஏதும்
வியாபாரம் செய்யலாம் என்று
நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்றவன்,
சற்று தைரியத்தை வரவழைத்து
கொண்டு.......தங்கம்,
உன்னுடைய கழுத்தில் உள்ள
சங்கிலியை கழட்டி தா. அதை
வைத்து நான் வியாபாரத்தை
ஆரம்பிக்கலாம். பணம் கொஞ்சம்
கையில் சேர்ந்தவுடன் மீட்டு
எடுத்து தருகிறேன் என்று
சொல்லி அவள் முகத்தை ஒரு
குற்ற உணர்வுடன் பார்த்தான்.
அவனுக்கு தெரியும் அந்த
சங்கிலியின் கதை.

சரி பார்ப்போம். யோசித்து
சொல்கிறேன் என்று சொல்லி
விட்டு அவள் வேலைக்கு கிளம்பி
விட்டாள். போகிற வழியில்
யோசித்து கொண்டே போனாள்.
அந்த வழியில் எங்கோ போய்
கொண்டு இருந்த மகேஸ்(வரி)
இவளைப் பார்த்து விட்டு, அக்கா
ரொம்ப யோசிக்கிற மாதிரி
தெரியுது என்று தங்கத்தின் முன்
வந்து நின்றாள். ஒன்றும்
யோசிக்கவில்லை, வேலைக்கு போகிறேன் என்று சொல்லியபடியே அவள் தன் நடையை வேகப் படுத்தினாள்.

இளங்கோ கேட்ட சங்கிலி அவள்
பெற்றோர்கள் அவளுடைய
18 வயது பிறந்த நாளுக்கு
ஆசையாக வேண்டி போட்ட
சங்கிலி. அதை கழட்டி கொடுக்க
விருப்பம் இல்லை, அதையும்
விற்று குடித்து கொள்வானோ
என்று அவள் உள்மனம்
கேட்டது. சில நாட்கள் கழித்து தங்கம் கோவிலுக்கு சென்று அம்மனுடன் சில நிமிடங்கள் மனம் திறந்து பேசினாள். அம்மன் சந்நிதியில் அவள் மனம் அமைதி கண்டது போல் உணர்ந்தாள்.
பின்பு கோவில் வழியில் பார்த்த ஒரு சிலருக்கு தன் கையில் இருந்த பணத்தில் கொஞ்சம் அவர்களுக்கும் கொடுத்தாள்.
அதில் ஒரு முதியவர் நீ மகா
ராணியாக இருப்பாய் ஒன்றுக்கும் கவலைப் படாதே. உனக்கு நல்ல காலம் மிக விரைவில் பிறக்கும் என்று முகம் மலர்ந்து சொன்னார்.
ஆனால் வீடு திரும்பிய தங்கத்தின் மனதில் மீண்டும் இளங்கோவை
பற்றிய சந்தேகங்கள் தலை
தூக்கியது. கவலையுடன்
படுத்தவள் வேலை அலுப்பால் நன்றாகவே தூங்கி விட்டாள்.

எழுந்தவள் நேராக வீட்டில்
மாட்டி வைத்திருந்த சாமிப்
படங்களின் முன்னால் போய்
நின்று கண்களில் கண்ணீர்
கசிய தன் கழுத்தில் இருந்த
சங்கிலியை கழட்டி தன் இரண்டு
கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
தூங்கி கொண்டு இருந்த
இளங்கோவனை எழுப்பி இதோ
நீங்கள் நேற்று கேட்ட சங்கிலி
என்று சொல்லி அவன் கையில்
வைத்தாள். அவனும் கண்களில்
கண்ணீர் கசிய தங்கம் (மலர்)
என்னை நீ நம்பு. எங்களுக்கும்
நல்ல காலம் வரும் என்று சொல்லி
விட்டு சங்கிலியுடன் கிளம்பியவன்
அன்று இரவு வீடு திரும்பவே
இல்லை. ஏன் ஒரு வாரத்திற்கு
மேல் அவன் தங்கத்தை வந்து
பார்க்கவே இல்லை.

நான் இந்த முறையும் ஏமாந்து
போனேன் என்று சாமி படத்தின்
முன்னால் நின்று தன் தலையில்
அடித்து கொண்டாள். ஆண்டவன்
ஒன்றுமே சொல்லவில்லை.
ஆனால் படங்களின் பின்னால்
இருந்த பல்லி மாத்திரம் அவள்
சொல்வது உண்மை என்பது
போல் டிக், டிக். என சத்தம்
போட்டது கவலையுடன் சாமிப்
படத்தின் கீழ் அமர்ந்து இருந்த
அவளின் மூளை ஏதோ சொல்ல
விரும்புவது போல் அவள்
உணர்ந்தாள். தினம் தினம்
அவளுடைய வீட்டுக்கு வந்து
போன மகேஸை(வரியை)
இரண்டு வாரத்திற்கு மேல்
காணவில்லை. விசாரித்ததில்
மகேஸின் தகப்பன் கத்தியோடு
இளங்கோவனை தேடும் செய்தி
தெரிய வந்தது. அவர் தங்கத்தின்
மீது கோபப் படவில்லை. மாறாக
அவளை தன் வீட்டிற்கு
அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்து
தன் மகள் போல் பார்த்து வந்தார்.
பல வருடங்கள் கழித்து அவர்
தங்கத்தின் விருப்த்தை அறிந்து
அவள் பெற்றோரின் சம்மதத்துடன்
தன் மகனுக்கே திருமணம் ஊர்
அறிய செய்து வைத்து மகிழ்ந்தார் அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவர்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (28-Sep-23, 4:53 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : vyapaaram
பார்வை : 108

மேலே