காதலின் மறுபக்கம்
விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்து மங்களகரமான மஞ்சள் பட்டு பாவாடை சிவப்பு தாவணி சிவப்பு பிளவுஸ் என்று அமர்க்களமாக உடை உடுத்திக்கொண்டு துளசி மாடத்தில் கண்மூடி கைகூப்பி நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் காவ்யா.
தூங்கி விழித்து கண்களைக் கசக்கி கொண்டே வந்த கௌதம், என்றுமில்லாத அதிசயமாக அழகான தேவதை போல் பாவாடை தாவணி உடுத்தி ஈர முடியை துண்டை சுற்றி தூக்கி கொண்டையாக போட்டு கொண்டு விழி மூடி சிலையாக நின்ற காவியாவை கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டான்.
ஆச்சர்யத்தில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை இது உண்மைதானா என்று தன் கைகளை கிள்ளிப் பார்த்தான் வலித்தது.
அவனை அறியாமல் நின்றபடி அவள் அழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
முகத்திற்கு முன் சொடுக்கி, என்னடா பேயரைஞ்சா மாதிரி நிக்கிற எதையாவது பார்த்து பயந்துட்டியா என்றவாறு இவனைக் கடந்து கொண்டிருந்தாள் காவ்யா.
ம்ம் உன்னப் பார்த்து தான் என்றவாறு ஆமா இன்னைக்கு என்ன இவ்வளவு காலையில் எழுந்து ஸ்நானம் செய்து அம்மனுக்கு கூழ் ஊத்த போறமாதிரி நிக்கிற, என்றான்.
போடா இவன் கேட்டதும் நான் பதில் சொல்லனுமா என்ற தோரணையில் பார்வை பார்த்துக் கொண்டே சென்று விட்டாள்.
கேட்டா பதில் சொல்றாளா பாரு திமிரு புடிச்சவ என்று முனுமுனுத்து கொண்டான்.
ஆனாலும் இந்தத் திமிர் தான் இவகிட்ட அழகே என்றவாறு ரசனையாக சிரித்துக் கொண்டான்.
டேய் காலைலயே ஏர்போர்ட்க்கு போகனும்னு உன் அண்ணன் வர்றான்னு சொன்னா என்னடா நீ.... அப்பவே எந்திருச்சு வந்து மந்திருச்சு விட்ட மாதிரி இங்க நிக்கிற.
இன்னேரம் நீ குளிச்சுட்டு வந்திருப்பன்னு நான் வந்தா இன்னும் இங்கயே நிக்கிற என்று கௌதம் அப்பா கணேசன் ஓங்கி குரல் கொடுத்தார்.
இதோ குளிக்க போய்ட்டே இருக்கேன் அப்பா என்றவாறு துண்டை எடுத்து கொண்டு கிணற்று அடிக்கு விரைந்தான்.
உள் ரூமின் வாசலில் நின்று வாயைப் பொத்தி சிரிப்பை அடக்க முடியாமல் நின்று இருந்தவளை யாரது அங்க நிக்கறது என்று குரல் கொடுத்தார்.
நான்தான் மாமா என்றவாறு காவ்யா தன் தாய் மாமனிடம் சென்று நின்றாள். அவளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர் என்னடா இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்ட காலேஜ்ல ஏதாவது டூர் கீர் போறீங்களா என்ன என்றார்.
இல்ல மாமா என்று சினிங்கியவாறு,
ரவி மாமா இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து வருது இல்ல அதான் சீக்கிரம் எழுந்திட்டன் என்றாள்.
காவ்யாவை மேலிருந்து கீழ் வரை பார்த்து ஆச்சரியம் அடைந்தவர் என்னடா இன்னைக்கு பாவாடை தாவணி உடுத்தி இருக்க என்றவாறு அன்பாக அவள் தலையில் கைவைத்து நல்லா இருக்கு என்றவாறு எப்போதும் இப்படி உடுத்தறதுக்கு என்ன என்றவாறு பின் கட்டை நோக்கி நகர்ந்தார்.
தாய் மாமனிடம் பாராட்டு வாங்கிய சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு தன் அறைக்கு ஓடினாள்.
இவை அனைத்தையும் தன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த குமுதா தன் மகளின் மனதை தெளிவாகப் புரிந்து கொண்டாள்.
தாய் அறியாத சூல் இல்லையே, தன் மகளின் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவனையும், தன்னை விட்டு உயிர் பிரிந்த கணவனையும் தெய்வமாக நினைத்து வேண்டிக் கொண்டாள்.
இதில் தடங்கள் உண்டாக ஒன்றும் இல்லை, மாமன் மகனை விரும்பும் தன் மகளின் ஆசை நிறைவேற தடை என்ன என்று நினைத்துக் கொண்டு மனதில் அமைதி அடைந்தார் குமுதா.
தன் அறையின் ஜன்னல் வழியாக வாசலை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் காவ்யா.
அன்றலர்ந்த தாமரையாக அவள் முகம் மலர்ந்து இருந்தது. மனம் முழுவதும் மாமன் மகன் ரவிவர்மன் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தான்.
அவளுக்கே ஆச்சரியம் தான் ரவியை ஒரு நாள் இவளே இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பாள் என்று, முன்பு யாராவது கூறி இருந்தால் அவர்கள் கதி என்ன ஆகியிருக்குமோ தெரியாது.
இருவரின் சண்டையை விளக்க வீட்டில் ஒருவர் எந்த நேரமும் அருகில் இருக்க வேண்டும். அப்படி ரணகளமாக இருப்பார்கள் இருவருமே.
காவ்யாவை விட ஐந்து வயது பெரியவன் ரவி. காவ்யா தாயின் வயிற்றில் இருக்கும் போதே விபத்தில் சிக்கி உயிர் இழந்தார் அவள் தந்தை.
அதன் பிறகு அவர் சொந்தங்கள் குமுதாவுக்கு அங்கு வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கினர். நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல் கரித்து கொட்ட ஆரம்பித்தனர்.
வயித்துல இருக்கும் போதே அப்பன முழுங்கிடுச்சு இன்னும் யார் யாருக்கு என்ன என்ன நடக்கப் போவுதோ என்பது போன்ற சொற்களை இவள் காது படவே பேச ஆரம்பித்த உடன் குமுதா தன் அண்ணன் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
அதன் பிறகு குமுதாவுக்கு அவள் அண்ணன் தான் தெய்வம். அண்ணியும் நல்ல குணம் கொண்டவள் ஆகையால் ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை.
அந்த வீட்டில் இருந்த ஒரே பிரச்சினை ரவி காவ்யா சண்டை தான். என்நேரமும் இருவருக்கும் பஞ்சாயத்து நடந்தபடி இருக்கும்.
மாமா மாமா ரவி காசு வச்சு பளிங்கு விளையாடுறான் என்று இவள் அவனை போட்டுக் கொடுத்தால் பதிலுக்கு அவன், களத்து மேட்டில் பார்த்துப் பார்த்து ஒரு வாரமாக இவள் சேகரித்த நெல்லை தூக்கி கொட்டி விடுவான்.
பதிலுக்கு இவள், பள்ளியில் அவன் ஆசிரியரிடம் அடி வாங்கியதை வீட்டில் சொல்லி விடுவாள், உடனே பதிலுக்கு அவன் இவள் புத்தகத்தை எடுத்து மறைத்து விடுவான்.
பள்ளியில் அவள் அடி வாங்குவதை பார்த்து சிரிப்பான். இப்படியே இது தொடர்கதையாக வீட்டில் இருந்தவர்கள் இவர்களை திருத்த முடியாது என்று எக்கேடோ கெடட்டும் என்று தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள்.
காவ்யா பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது ரவி கணிதத்தில் எம் எஸ் சி முடித்து மேற்படிப்புக்காக ஜெர்மன் செல்கிறான்.
வாசலில் கார் ரெடியாக நிற்க அவன் கொண்டு செல்லும் பேக்கை காரில் வைத்துக் கொண்டு இருந்தார் மாமா.
அவன் அனைவரிடமும் விடைபெற்று வெளியே செல்ல திரும்பியவன் இவள் புறம் திரும்பி பார்த்து கை அசைத்தான்.
அவனுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் காவ்யா புரியாத மனநிலையில் இவனை பார்த்திருந்தாள்.
கையை அசைத்தபடி செல்லத் திரும்பியவன் ஒரு நிமிடம் நின்று இவள் புறம் இரண்டு எட்டு எடுத்து வைத்தான்.
அருகில் வந்தவன் காவ்யாவின் தலை மீது கையை வைத்து லேசாக அழுத்தினான்.
அதன் பிறகு லேசாக அணைத்து பின் விலகி அவள் விழிகளை பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தான்.
அவனின் செய்கை, அவளின் புரியாத மனநிலை என்னவென தெளிவுபடுத்தியது.
அவனின் பிரிவை எண்ணி இதயத்தில் எழுந்த வலியில் மளுக்கென்று விழியில் நீர் தழும்பி பார்வையை மறைக்க அவனை நோக்கி கை அசைத்தாள் காவ்யா.
பிரியா விடை கொடுத்து அன்று பிரிந்து சென்றவன் ஐந்து வருடங்கள் கழித்து இன்று தான் வருகிறான்.
தன் மனம் கவர்ந்த ரவிவர்மன் என்ற ஓவியத்தை காண அவனுக்கு பிடித்த மஞ்சள் சிவப்பு என்று தன்னை அலங்கரித்து அவனுக்காக காத்திருந்தாள் காவியமாக.
இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் மனம் கவர்ந்தவன் அவள் முன், மனதில் எழுந்த பரபரப்பை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறிக் காத்திருந்தாள்.
திடீரென வீட்டில் எழுந்த பரபரப்பில் ரவி வந்துவிட்டான் என்று அறிந்து வேகமாக வாசலை நோக்கி ஓடும் போது மாமி மீது மோதிக் கொண்டாள்.
ஏம்மா காவ்யா வந்தவுடனே அவன் கிட்ட சண்டை போட தான் இவ்வளவு வேகமா ஓடுறியா என்க, போங்க மாமி என்று வெட்கத்துடன் வாசலை நோக்கி சிட்டாக பறந்தாள்.
காவ்யாவின் வெட்கம் ஆச்சரியமாக இருந்தது ரவியின் அம்மாவுக்கு. தன் மகனுக்காக அவள் கண்ட ஆசை நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை கீற்றாக மனதில் உதிக்க துள்ளி ஓடும் தன் மருமகளை ஆசை தீர பார்வையால் வருடினாள்.
வாசலை அடைந்த காவ்யா காரில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்த ரவியை கண்டு வெட்கத்துடன் அங்கேயே தேங்கி நின்றாள்.
ரவியை பின் தொடர்ந்து மஞ்சள் சேலை உடுத்திய வெண்தாமரை போன்று ஒரு பெண் வெட்கத்துடன் இறங்கி ரவியின் அருகில் வந்து நின்றாள்.
ரவிக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள் என்ற எண்ணம் அவள் நினைவில் எழ குனிந்து தான் உடுத்தி இருந்த உடையைப் பார்த்தாள் பின் அந்தப் பெண்ணின் உடையையும் கூர்ந்தாள்.
முன்பெல்லாம் இதே மஞ்சள் நிற உடையை உடுத்த மாட்டாள் ஏனென்றால் ரவிக்கு பிடித்த நிறத்தை தான் உடுத்துவதா என்ற அகம்பாவம் இத்தனைக்கும் மஞ்சள் நிறம் இவளுக்கும் மிகவும் பிடித்த நிறம் இருந்தாலும் ஒரு விதமான பிடிவாதம்.
அப்படிப்பட்ட தன்னைப் பற்றி அவன் வேறு விதமாக நினைக்கவில்லை என்று குறைபடுவதில் என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.
நிலைப்படி அருகில் நின்ற காவ்யா விழுந்து விடாமல் இருக்க கதவை இறுக பற்றி அதன் மீதே சாய்ந்து கொண்டாள்.
இவளை சுட்டிக் காட்டி ரவி அவளிடம், என்னோட கஸின் சின்ன வயதில் இருந்து என்னுடன் சண்டை போடுவாள்ன்னு சொன்னேன்ல என்று அறிமுகப் படுத்தினான்.
அவன் மனதில் தனக்கான பிம்பம் எது என்று உணர்ந்து நொறுங்கியது அவள் மனம்.
பிறந்ததில் இருந்து சண்டை போட பாசம் வைக்க என்று ஏதோ ஒரு ரூபத்தில் அவனை தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக கொண்டு இயங்கிய அவள் உலகம் திடீரென்று தலைகீழ் ஆனதாக உணர்ந்தாள்.
அவன் இனி தனக்கு இல்லை என்ற உண்மை மனதை வாட்ட சிதைந்த இதயத்தின் ஓலம் மௌனமாக விழிகளில் கண்ணீராக அவள் பார்வையை மறைக்க இவளை நோக்கி
கையை ஆட்டிய ரவிக்கு இணையாக இவளும் கையை ஆட்டினாள்.
என்ன நம்பிக்கையில் அவனிடம் தன் மனதின் உணர்வை பகிர்ந்து கொள்ளாமல் தன் மனதில் பூட்டி வைத்தாள் என்று யோசித்தாள் காவ்யா.
தன் காதலின் மீது இருந்த நம்பிக்கையா அல்லது கர்வம் தலைக்கேறி அவன் எங்கே போய்விட போகிறான் என்ற ஆணவமா? எது அவளை இந்நிலைக்கு ஆளாக்கியது என்று நினைத்து மனதுக்குள் மறுகினாள் காவ்யா.
முற்றும் -
கவிபாரதீ ✍️