எருக்கு மறைந்துயானை பாய்ச்சி விடல் - பழமொழி நானூறு 376

நேரிசை வெண்பா

எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்லின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல். 376 - பழமொழி நானூறு

பொருளுரை:

அழகு நிறைந்து பொருந்தியிருக்கின்ற வளையையுடையாய்!

எல்லா வகையானும் உயர்ந்த அறிஞர்களை கல்லாமையைத் துணையாக உடைய அறிவிலார் தாம் அதனுள் மறைந்து நின்று வெறுக்கப் பண்ணுதலைச் சொல்லின் எருக்கம்புதரில் மறைந்து ஒருவன் யானையின்மேல் அம்பு எய்தலோடு ஒக்கும்.

கருத்து:

அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின், அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.

விளக்கம்:

எல்லாத்திறம் என்றது அறிவு, திரு, ஆற்றல் முதலியன.

எருக்கம் புதரில் மறைந்து நின்று எய்தானொருவன் கெடுதல் திண்ணம் ஆமாறுபோல, கல்லாமையினால் மறைந்து நின்று பெரியோரை வெறுக்கப் பண்ணினவனும் இறத்தல் திண்ணமாம்.

'எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-23, 7:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே