அதுபெரிது உக்கோடிக் காட்டி விடும் - பழமொழி நானூறு 377

இன்னிசை வெண்பா

தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு
கடைப்பிடியில் லாதார்பால் வைத்துக் - கடைப்பிடி
மிக்கோடி விட்டுத் திரியின் அதுபெரி(து)
உக்கோடிக் காட்டி விடும். 377 பழமொழி நானூறு

பொருளுரை:

மேற்கொண்ட தமது செயலை தாம் சோம்பல் கொண்டு முடிக்கும் உறுதியில்லாதாரிடத்துத் தம் செயலை அவர் செய்யுமாறு வைத்து நடத்தி முடிக்கும் உறுதியை விட்டு செருக்கில் மிகுந்து ஓடித் திரியின் தாம் மேற்கொண்ட அச்செயல் மிகவும் சிதைந்து தன்னைச் செய்வதாக மேற்கொண்டவனிடத்தில் தவ்வையை அறிமுகப்படுத்தும்.

கருத்து: முயற்சி இல்லதானை மூதேவி அடைவாள்.

விளக்கம்:

தாமே செய்ய வேண்டியிருக்கவும் செய்யாது தன்னைப் போன்ற வேறு ஒரு சோம்பல் உடையாரிடத்தில் தன்னை வைத்து அவன் நீங்கலின், அது தானாகவே வலியச் சென்று அவனிடத்தில் மூதேவியை ஆற்றுப்படுக்கும்.

'அது பெரிது உக்கோடிக் காட்டிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-23, 7:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே