மரணங்கள் மலிந்த பூமி – புத்தக விமர்சனம்

மரணங்கள் மலிந்த பூமி – புத்தக விமர்சனம்

எழுதியவர் “செங்கை ஆழியான் (கலாநிதி கந்தையா குணராசா)
சிறந்த நாவலாசிரியர், ஆய்வாளர், இலங்கை சாகித்திய மண்டல பரிசினை ஏழு தடவைக்கு மேல் வாங்கியவர். சிங்கள மொழியில் சிறுகதை தொகுதி (இரவு நேர பயணிகள்) காட்டாறு நாவல் வெளி வந்துள்ளன. The Beast ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளது.

பதிப்பு: அரவிந்தன் பதிப்பகம், P-18, ArAVIND NARAIN ENCLAVE, தி நகர், சென்னை-600 017, தொலை பேசி: 9677249001

முன்னுரையாக நான்,
நூலகத்திலிருந்து இந்த நாவலை எடுத்து வந்து வாசித்தேன். மனதை நெருட செய்த நாவல் என்பதில் சந்தேகமில்லை, படித்து முடித்த பின் நமக்குள் இறங்கும் ஒரு வித மன இறுக்கம் “வன்முறை தேவையில்லை” உலகமே அன்பால் ஆனது என நினைக்கும் ஆன்மாக்கள் முன் அவர்கள் குடும்பம் வன்முறையாலேயே சுட்டு கொள்வது”
ஒரு எழுத்தாளர் உண்மையில் நடந்த நிகழ்வை பதிவிடும்போது
தனது நிலைப்பாட்டை முன்னிருத்தாமல் நடு நிலைமையுடன் இந்த நாவலை படைத்திருக்கிறார். இரு பக்கமும் ஏற்படுகின்ற வன்முறை உணர்ச்சிகள், அதனால் நடுவில் இருக்கும் அப்பாவி நகர மக்கள் படும் துன்பங்கள், அதனால் ஏற்படும் இடப்பெயர்ச்சி, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பூமியை விட்டு இலங்கை ராணுவமும் விடுதலை படை அமைப்பும் மோதிக்கொள்ள, இவர்கள் நகரத்தை விட்டு இடம் பெயரும் அவலம் இருக்கிறதே..! அதுவும் வயதானவர்கள், அந்த மண்ணோடு ஒன்றி அதனுள்ளே வாழ்வை முடித்துகொள்ள வேண்டும் என்று உறுதியோடு இருந்தவர்கள், அவர்களின் உறவுகள் கனடாவுக்கும், வெளி நாடுகளுக்கு தஞ்சம் பிழைக்கவும், அல்லது கற்று முன்னேறி செல்பவர்களுக்கும் இடையில் இவர்கள் மட்டும் மண்ணின் பிடிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இந்த மோதலின் காரணமாக அவர்கள் கட்டாயமாக மண்ணை விட்டு வெளியேறும் சூழல்.
தனி மனித சுயநலன்கள், விட்டு சென்ற பொருட்களை வீடு புகுந்து கொள்ளை யடிக்கும் கூட்டம், மனிதர்களின் மனதுக்குள், இடம்பெயரும் போதும் இருக்கும் சாதீய உணர்வு, தீவிரவாதத்தை விரும்பும் பெண்ணின் மனதுக்குள் நுழைந்து அன்பை பரப்ப நினைக்கும் ஒரு இளைஞன், அந்த இளைஞனிடமே தன்னுடைய சகோதரியை குடும்ப வாழ்க்கைக்கு இழுத்து வர வேண்டுகோள் விடுக்கும் அந்த பெண்ணின் சகோதரன்.
விடுதலை அமைப்பை சேர்ந்த இளைஞர்களை வேட்டையாட வந்த இலங்கை இராணுவ வீரனை மண்ணின் பிடிப்பில் இங்கேயே தங்கி விட்ட மாணிக்கதாரர் என்னும் ஜீவன் காப்பாற்றி அவன் உயிரை மீட்டு கொடுக்கும் தன்மை, அதற்கு நன்றி கூறும் அவனிடம் அவர் கேட்கும் கேள்வி ஏன் இந்த போராட்டம் இரு பக்கமும்? ஒருவரை ஒருவர் அழித்து கொள்ளவா இந்த உலகம்?
பாவம் அவரின் கண் முன்னேயே கடைசியில் மகளையும், அவள் கணவனையும், பேரன் பேத்திகள், சகோதரியை குடும்ப வாழ்க்கைக்கு அழைத்து செல் என்று சொன்ன சகோதரனும், அவளை விரும்பிய காரணத்திற்காக அந்த இளைஞனும், இவர்கள் இருவரின் குடும்பமே இலங்கை இராணுவத்தின் சந்தேகத்திற்கு உட்பட்டு மொத்தமாய் அழிக்கபட்டு விடும் அவலம்.
வன்முறையின் மொத்த அவலத்தையும் கண் முன்னே தன் பாத்திரங்கள் மூலம் கொண்டு வந்து காட்டுகிறார், ஆசிரியர் இந்த நாவலில். இதை வாசிக்கும்போது “தற்போது ஹமாஸ் இயக்கம் ஆரம்பித்த பொறி பதினைந்து பதினாறு நாட்களாக பாலஸ்தீனிய மக்கள் படும் துன்பம்” இஸ்ரேலின் கண் மூடித்தனமான தாக்குதல், இவர்கள் இருவருக்கும் சண்டை என்றால் நாங்கள் என்ன செய்தோம்? இறந்தும், காயம்பட்டும், வீட்டை விட்டு நாடோடிகளாய் ஓடி கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் கேள்வி, கண்டிப்பாய் உங்கள் மனதுக்குள் வரும்.

“நாவலுக்குள்” செல்வோம்.
1997 ஜூலை 25 எங்கள் வானத்தில் சில மாதங்களாக குண்டு வீச்சு விமானங்களின் பேரிரைச்சல் எழுவதில்லை” இப்படி ஆரம்பிக்கிறார்.
கலட்டி அம்மன் கோயிலி கந்தசஷ்டி விரதிகள் குழுமியிருந்தனர். திருக்கலியாணம் முடிந்து குருக்கள் பஞ்சாலத்தியை கரத்திலெடுத்த வேளையில் கோயில் வாசலில் சடுதியாக ஒரு மோட்டார் சயிக்கில் வந்து நின்றது
“அன்னை எல்லோரையும் “சாவகச்சேரிக்கு போகட்டாம் ஆமி வருகுதாம்”. அவனால் ஒழுங்காக பேச முடியவில்லை, குரல் பயத்தால் தடுமாறி தத்தளித்தது. கோயில் நின்றவர்கள் “அம்மளாச்சீ…முருகா” அலறியபோதுதான் எதுவோ நிகழ்ந்து விட்டதென மாணிக்கத்தாருக்கு புரிந்தது.
என்ன..என்ன ?
மெய்யாவே?
பொய் சொல்லாதையடா”
அப்படியிருக்காது
உண்மையே நந்தன்
ஆர் அறிவிச்சவை?
ஏதுவுமே கூறாது நந்தன் மோட்டார் சயிக்கிலை வேகமாக்கி கொண்டு போய்விட்டான்.

மாணிக்கத்தார் எதிரே இரத்தினம் நின்றிருந்தார்.
அண்ணை நீங்க வீட்டை விட்டு போகவில்லையா?
வீட்டை விட்டு எல்லாரும் ஓடுறியள், நான் இந்த கோயில்லதான் இருக்கப்போறன், ஆர் ஓடினாலும் ஓடட்டும், வாற ஆமி வாறட்டும், செய்யிறதை செய்யட்டும். நீ புள்ளை குட்டிக்காரன் எங்காவது ஓடி தப்பு, நாவாலி பக்கம் உனக்கு சொந்தக்காரனிருக்கையில, அங்கு போயிரன்.
வலிக்காமம் முழுதும் வெளியேறிடணுமாம், அதுவும் உடனே, நான் வீட்டை விட்டு போக போறதில்லை, இந்தியன் ஆமி வந்தப்ப கோயிலில் அடைக்கலம் போனது போல கோயில இருப்போம், கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை விட்டு பிச்சைக்காரனாட்டம் ஓட முடியாது.

கேட்டை திறந்து கோயிலுக்குள் அவர் மகள் சரோசா வருகிறாள், அவளை தொடர்ந்து மருமகன் சிவசாமியும், பேரன் பேத்தியும் வருகிறார்கள்.
வெளிக்கிடுங்கோ அம்மான், எல்லாரும் அங்கால கொஞ்சம் காலத்திற்கு போயிருந்துட்டு வருவோம், வயசு வந்த பிள்ளைங்கள வச்சுகிட்டு இங்க எப்படி இருக்கிறது?
மாணிக்காத்தாருக்கு இரத்தினத்திடம் சொன்னது போல் மகளிடம் சொல்ல முடியவில்லை
“நீங்க எல்லாரும் கவனமா போயிட்டு வாருங்கோ” பிள்ளையன் நான் இங்க இருக்கறதா முடி பண்ணிட்டன், என்னால இந்த வயசுல அங்க இங்க ஓடி வரமுடியாது.
நீண்ட விவாதங்களுக்கு பிறகு, இவர் மறுத்து விட மகளும், அவள் குடும்பமும் கிளம்பி செல்வதை கண் கலங்கி பார்க்கிறார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரே உறவு,மற்ற பிள்ளைகள் எல்லாம் வெளி நாட்டில் குடியேறி அங்கேயே தங்கி விட்டார்கள்.
“இந்த மண்ணின் சமாதானப் புறாவை எல்லாரும் சேர்ந்து கொத்தி குதறி குற்றுயிராக்கி விட்டார்கள். மனித வாழ்க்கை என்பதே எவருக்கும் தெரியவில்லை. அமைதியும் சமாதானமும் நிறைந்த வாழ்க்கை என்பது இந்த மண்ணிற்கு இனி கிட்டாத இலக்கு களாகிவிட்டன.
வெளியே மழை சோனாவாரியாக பொழிய தொடங்கியது. “ஷெல்களின் வெடிப்பு சத்தமும்” துப்பாக்கி சன்னங்களின் பட பட ஓசையும் கேட்கின்றன இராணுவம் முன்னேறித்தான் வருகின்றதோ?

சிவசாமி மனைவியையும் குழந்தைகளையும் பார்த்தார், சின்னவள் குளிரில் நடுங்குவது தெரிகின்றது, மாலதியும் நகுலனும் தோய்ந்து விரைத்து நிற்கின்றனர். எங்கு நிற்பது? வீடுகளை பூட்டிக்கொண்டு தம் விதியை நொந்தபடி எல்லோரும் வீதியில் இறங்கி கொண்டிருந்தனர்.
“போவம் பிள்ளையள் பனிரண்டு மணிக்குள் நாவற்குழி பாலத்தை கடந்திடணுமாம்
நாலு இலட்சம் மக்கள் எப்படி அப்பா இந்த ஒரு பாதையால அங்கால போறது?

மக்கள் திரளாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். சயிக்கிள்களில் ஏற்றிய பாரச்சுமைகளோடு ஒரு பகுதியினர், மாட்டு வண்டிகள் சுமை தாளாமல் கட கடத்தன, சுமையேற்றிய வண்டிகளில் வயோதிகர்கள் ஏற்றப்பட்டிருந்தனர். இடுப்பில் தூக்கிய கைக்குழந்தைகளுடன் நடக்க முடியாத தத்தளிக்கிற தாய்மார், வயது போன தாய்மாரை கரம் பற்றி அழைத்து செல்வோர், கிழவர்கள், நோயாளிகள், நடுத்தர வயதினர், இளம் வயதினர்,சிறுவர்கள், குழந்தைகள் அனைவரும் வயது வேறுபாடின்றி அரசடி வீதியில் இலக்கின்றி நடந்தனர்.
ஒரு நாட்டையே புலம் பெயர்க்கின்ற துயர சம்பவம் யாழ்ப்பாண வரலாற்றில் எப்பொழும் நிகழ்ந்ததாக இல்லை, ஆட்சியாளர்கள் எதிரிகளிடம் நாட்டை ஒப்புக்கொடுத்துவிட்டு ஓடிய வரலாறு உண்டு, ஆனால் இப்படி ஒரு புலம்பெயர்வு புதிய துயர அனுபவம். எதிரிகளுக்கு கூட இப்படி ஒரு அவலம் நிகழக்கூடாது.

நல்லூரானுக்கு கண்ணில்லை சரஸ்வதி தன்னையறியாமல் குமுறினாள், எவ்வளவி விரதம் பிடிச்சம், இப்படி எதுமில்லாம தெருத்தெருவா ஓட வச்சுட்டான்.
கடவுளை ஏன் நொந்து கொள்கிறாய்? எல்லாத்தையும் நல்லவையாகத்தான் படைச்சர். “கண்ணுக்கு தெரியாத சுதந்திரம் எண்ணும் உணர்விற்காக கண் முன் இருந்த அனைத்தையும் இழக்க வச்சுட்டம், தங்கச்சி. உம்முடைய மனுசன் இராசரத்தினம் மாஸ்ரற்றை மாணவன் அடிக்கடி சொல்வான், யாழ்ப்பாண சமூகம் திருந்தனும், சாதியம் பேசி பேசி ஒரு பகுதி மக்களை அடக்கி வச்சிருந்தது, வர்க்க வேறுபாடு மறையணும்னா யுக புரட்சி ஒன்று வந்து பொதுவுடமை மலர வேணும்” இண்டைக்கு ஒரு மணி நேரத்துல மக்கள் எல்லாரும் கையேந்திர நிலைமைக்கு வந்திட்டோம், எல்லாரையும் ஒரே மட்டத்திற்கு கொண்டு வந்திட்டது இந்த புரட்சி.
வசந்தனுக்கு புரிந்து அவருக்கு பதில் சொல்ல விரும்பினாலும் அவனுக்கு புரிந்தது “மானிட சோகம் எதையும் பேச வைக்கும், நம்பிக்கை இழந்த நிலையில் மக்கள் வீதியில் இறங்கி விட்டார்கள். செயலை விட நம்பிக்கைதான் முக்கியமான வாழ்வின் பிடிப்பு என்பது அவனுக்கு புரிந்தது. அதை இழக்க தயாரில்லை.

நீங்கள் எல்லாம் இடம் பெயர்ந்து வந்ததுல எனக்கு மறைமுக சந்தோசம்
சிவசாமி வியப்புடன் அவரை பார்க்க,
அதாலத்தான் என்ர வீட்டு முற்றத்துல இவ்வளவு பிள்ளைகள் துள்ளி விளையாடுதுகள், மனிசிக்கும் வலு சந்தோசம், ஒரு வீட்டிற்கு குழந்தைகள் பெருஞ் செல்வம்தான்.
ஒரு விசயம் சிவா, நாங்க சைவக்காரர், நீங்க அப்படியிருக்க தேவையில்லை, புரியுதோ, இது உன்ர வீடு, உன்ர வளவு என்று எண்ணிக்கொள். “என்ர மனிசி கொஞ்சம் தீட்டு துடக்க் பார்க்கிறவ, இங்க எல்லாரும் அப்படித்தான், அதனால அந்த வேளையில கிணத்துல துலாகயிறு பிடித்து தண்ணியள்ளாம இருந்தா சரி.

திண்ணையில் அமர்ந்து கொண்ட நகுலன் சுகந்தி ஏன் இயக்கத்திற்கு போனாள்? அவள் குடும்பத்தில் இராணுவத்தால் எவராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது பேரினவாதத்தால் தமிழ் சமூகம் படுகின்ற இன்னல்களை பொறுக்க முடியாமல் சேர்ந்தாளா? சுகந்தியை எண்ணும்போது அவனுக்கு பெருமிதமாக இருந்தது, துணிச்சலான பெண், அவளுடைய மென்மையான கரங்கள் துப்பாக்கியை தூக்கியிருக்குமா? அவளுடைய மலர்ந்த முகத்தில் வன்மம் கவிய முடியுமா?

வாடா சிவா..” வந்து கதிரையில் அமர்ந்தான்
எனக்கு என்ன செய்யயிறதெண்டே புரியலையடா நகுலனின் போக்கில் மாற்றத்தை உணர்ந்து கொண்டேன், அதற்காக காரணம் இராசரத்தினத்தின் மகள் சுகந்திதான், என்பது எனக்கு புரியாமலில்லை அவனை இரக்கத்துடன் பார்த்தேன்.
அப்ப சுகந்தியை அவனுக்கு பேசி முற்றாக்கிவிடன். அவன் வயசுல நீ கலியாணம் கட்டிவிட்டாய், அவனுக்கு தொழில் இல்லையென்று யோசிக்க வேண்டாம். அவன் பல்கலை கழக மாணவன், நீ சாதி சனம் பார்க்கிறாய் போலிருக்கிறது சிவா.
விசர்க்கதை அதெல்லாம் நான் பார்க்கவில்லை, என்ர பொடியனை நான் கட்டுப்பாடாய் வளர்த்தாலும் அவனுடைய சுதந்திரத்தில் தலையிடறதில்லை, பிரச்சினை அங்கில்லை என்றான் துயரத்துடன்
எங்க பிரச்சினை?
அவன் வெகு நேரம் பேசாமல் இருந்தான்.
தெரியாமல்தான் கேக்கறியா?
நான் அவனை ஏறிட்டு பார்த்தேன், உண்மையில் எனக்கு காரணம் தெரிந்திருக்கவில்லை.
சுகந்தியை எங்கு தேடிபிடிப்பன்? எங்கு எந்த யுத்த களத்தில் நிற்கிறாளோ?
நான் நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன், முதுகெலும்பினூடே சுளீரென்று குளிரேறிய உணர்வு
என்னடா சொல்கிறாய்?
நான் இதெல்லாம் உனக்கு தெரியுமெண்டிருந்தேன், சுகந்தியால நான் என்னொட இரண்டு பிள்லையளை நான் இழந்திட்டேன், அவளிட்ட ஆசை வச்சதால நகுலன் படிக்கீர நிலையிலயில்லை, ஒரு வருசம் பிந்தி யுயினிவர்சியில படிக்கிறதா எழுதி கொடுத்துட்டான், எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன், கொஞ்சம் வேகமா சொன்னா “நானும் போயிடுவேன்னு” சொல்றான்.
சிவசாமியின் தோள்களில் ஆதரவோடு கரங்களை பதித்தேன். அவன் குரல் கம்மியது, யாழ்ப்பாணத்து தந்தையரின் சோகம் அவன் கண்களில் தெரிந்தது. அவன் தொடர்ந்தான், சுகந்தி வன்னிக்கு போகும்போது என் மகள் மாலதியையும் கூட்டிட்டு போயிட்டா, இந்த பிள்ளியகளுக்கு என்ன பிடித்து விட்டது? நான் விரும்பித்தான் போறேன்னு சிறு கடிதம் எழுதி வச்சுட்டு போயிட்டா.

நான் கோயில் வாசலில் மாணிக்காத்தாரோடு பேசிக்கொண்டிருந்தேன். “இந்த யுத்தத்திற்கு ஒரு முடிவு வராவிட்டால் அது எங்கள் எல்லோரையும் ஒரு முடிவிற்கு கொண்டு வந்து விடும்”
மாணிக்காத்தாரின் செல்பாடுகள் எனக்கு இப்பொழுது நினைத்தாலும் வியப்பாகத் தானிருக்கிறது. “அவனை வீட்டிற்கு இழுத்து வந்து கழுவி துடைத்து காயத்திற்கு மருந்திட்டு “தேத்தண்ணி” பருக்கி பார்க்கும் வரை அவன் “ஆமி பொடியன்” என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை, பின்னர் ஐயப்பட தொடங்கினேன்,. “அம்மே” என்று புலம்பியதும் அது உறுதியானது. அவனை வெறுக்க என்னால் முடியவில்லை, ஜெகன் மாதிரித்தான் அவனும் எனக்கு தெரிந்தான்,
என்ன ஆழமாக ஏறிட்டார், திடீரென உள்ளே நுழைந்தவர்கள் “பொடியன்” என்று நான் நினைச்சேன், அதனால “தம்பிமாரே சுட்டுடாதீங்கோ” என்று கத்தினேன். அதுக்கிடையில வெடி என் காலை துளைத்து கொண்டு சென்று விட்டது, நான் அப்படியே அலறியபடி நிலத்தில் சாய்ந்தேன். வாங்கில் படுத்திருந்த சிறிபால் ஆவேசத்தோடு எழுந்து சுட்டவனை ஓங்கியறைந்தான். பின்னர் என்னருகில் வந்து என்னை தூக்கி கொண்டான். அவன் கண்கள் கலங்கின
“தாத்தே சமாவென்ன” அப்பு என்னை மன்னியுங்கள் அழுதான். நான் கண் விழித்த போது “பலாலி ஆஸ்பத்திரியில்” இருந்தேன், ‘சிறிபால’ அருகில் இருந்தான் பிறகு என்னை கொண்டு வந்து ‘அச்சோலி வயோதியர்’ இல்லத்தில் வைச்சிருந்தனம். பிறகு நான் வீட்டிற்கு வந்து விட்டன். இப்ப திருனெல்வேலி காம்பில் இருந்தான், என்னிய அடையாளம் கண்டு கொண்டவன் ஓடி வந்தான் “தாத்தே நீங்கதான் எனக்கு உயிர் தந்த தெய்யோ” என்று தளுதளுத்தான். மாணிக்கத்தார் தயங்கினார்.
ஏன் இங்க வந்தே தாத்தே?
நகுலன் என்ர பேரன், இஞ்ச் இருக்கிறான், பிடிச்சு வைச்சிருக்கிலியாம் தம்பி, என்ர பேரன் சோலி சுரட்டிக்கு போகாத பிள்ளை”
உங்க பேரன் உங்க மாதிரித்தான் இருப்பான், அவனை அழைத்து வந்து என்னிடம் ஒப்படைத்தான்.
வர்றம் பிள்ளை .
சந்தோசம்தானே
மாணிக்கத்தார் சிறிபாலை நிமிர்ந்து பார்த்தார் இல்லையென்பது போல தலையசைத்தார்
கியன்ன தாத்தே?
கண்டபாட்டுக்கு சந்தேகமெண்டு இளம் பிள்ளையனைப் பிடிக்காதீங்கோ, இப்ப எஞ்சியிருக்கிறதுகள். அதுகள்தான். தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ வற்புறுத்தியோ உதவியவை எல்லாரும் கொட்டியாக்கள் என்றால் தம்பி யாழ்ப்பாணத்தில் எல்லாரும் கொட்டியாக்கள்தான். துப்பாக்கி ஏந்திய கரங்களுக்கு முன்னர் நாங்கள் எல்லாரும் எம்மாத்திரம்?
சிரிபாலன் விழிகளில் வியப்பு படர்ந்தது, விளங்குது விளங்குது என்று சிரித்தான்.

இராணுவ கெடுபிடி குருனகர்க்கரையில் பெரிதாகவில்லை. அவர்கள் தாவி வந்த பொருள்களை பரிசோதித்தார்கள். கரையில் அவர்களுக்கு குரு நகர் மக்கள் குளிர்பானம் வழங்கினர். இராணுவம் எல்லார்க்கும் உண்வு பார்சல் வழங்கியது. எல்லோரும் ஸ்நோர்க் காம்பிற்கு போங்கோ, அங்க குளிச்சுட்டு சாப்பிடுங்கோ, உங்கட பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் வந்து உங்களிய அடையாளம் காட்டி அழைத்து செல்வார்கள், அதுவரை நீங்கள் அங்குதான் இருக்க வேணும்.
மூன்று நாட்கள் அங்கிருந்தார்கள், “கிராம உத்தியோகஸ்தர்” வந்து எல்லோரையும் அழைத்து போனார்கள். நீ இராஸரெத்தினம் மாஸ்ரரின் மகள் என்ன? நீதானே கிளிநொச்சி கச்சசேரியில் கிளார்க்காக வேலை பார்க்கிறினீர்? விதானையார் அவளை கேட்டபோது ஆமென தலையாட்டினாள், அப்பா இப்படியொரு கதையை பரப்பியிருக்கிறாரா?
விதனைமார் பஸ் நிலையத்திலிருந்து தாவடி மட்டும் போக இருநூற்றைம்பது கேட்டான் ஒரு சாரதி, தற்செயலாக நேரம் சென்று விட்டால் தட்டாதெரு பொயின்றில் மறீச்சிவிடுவாங்கள். இரவு அங்கால தங்க வேண்டி வந்துடும், சரியென்றால் சொல்லுங்கோ
சம்மதம் தெரிவிப்பதை விட வேறு வழியில்லை
கொக்குவிலிய நோக்கி ஓட்டோ விரைந்தது.
பிள்ளையவள் எவ்விடமிருந்து வாறியள்?
நாங்க கிளிநொச்சியில் வேலிய பார்க்கிறனங்கள், வீட்டிற்கு போகுது என்றாள் சுகந்தி.
இதென்ன கெ.கெ.எஸ் ரோட்டால போகாமல் வெற வழியாக போகுது
இப்ப அங்கால போக ஒரு வழிதான்.
கலட்டி ஸனதியில் ஓட்டோ நின்றாது, பரிசோதனை நடந்தது.
மே கவுத துவத..
சுகந்தி மொந்திக்கொண்டு “ஓவ் துவ அபி” என்றாள்
ஓட்டோவில் மீண்டும் ஏறியதும் என்ன கேட்டவன் பிள்ளிய?
உங்கட பிள்ளைகளோ?
நீர் என்ன சொன்னீர்?
இல்லையெண்டான்.
ஓமெண்டாலா சொன்னீர், இங்க பார் பிள்ளை வீணாக அவனுகளிடம் பேசக்கூடாது, அவன் சிங்களத்தில் கேட்கறதுக்கு ஒரு மறு மொழியும் எதிர்பார்க்கறதில்லை, தமிழ் தெரிந்த மாதிரி அவனும் ஹரி என்பான். நீ சிங்களத்தில் பதில் சொன்னால் விடுத்து விடுத்து கேட்பாங்கள்.
சுகந்திக்கு அவர் அறிவுரை எரிச்சலை தந்தது.
அவர்கள் இருவரும் வாசலில் தயங்கி நின்றதை முதலில் கண்டவன் நகுலன் தான்.
அவன் சத்தம் கேட்டு விரைந்து வந்த சிவசாமி இருவரையும் பயத்துடன் பார்த்தார்.
ஏன் இங்க வந்தியள்?

ஆடுக்களையில் மாலதி தாயுடன் தர்கிப்பது மாணிக்கத்தாருக்கு தெரிந்தது.
என்னை உங்கள் எவருக்கும் பிடிக்கவில்லை, அப்படியே செத்து போயிருந்தா சந்தோசப்படிருப்பள், நானும் அதைத்தான் விரும்பினேன், அதுக்கும் கொடுத்து வைக்கலை.
சரோசா மகளை ஆழமாக பார்த்தாள் விசரி மாதிரி பேசாதை, உங்களை நாங்கள் பெத்து வளர்த்தது சண்டைக்கு அனுப்பி சாகடிப்பதற்கல்ல, இந்த போராட்டத்தால் வந்த பயன் என்ன? எவ்வளவு உயிர்கள், சொத்துக்கள், இந்த நாடே சுடுகாடாகி விட்டது.
மாலதி தாயை எரிச்சலுடன் பார்த்தாள். உங்களுக்கும் ஒண்டும் விளங்காது, எங்களை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசுதான். இப்ப நீங்கள் எல்லாரும் இங்க சந்தோசமானவா இருக்கறீங்க? என்ன பாதுகாப்பு இங்கே இருக்கிறது?
கத்தாதியயடி
நான் கத்துவேன்
வெளியே டிறக் சத்தம்
மாலதி விருட்டென்று பின்பக்கம் சென்று அங்கிருந்த மதில் சுவரை தாண்டி குதித்தாள்
டிறக்கிலிருந்து சிறிபாலன் வருவதை மாணிக்கத்தார் கண்டார்.
நான் தேவாலயத்துக்கு போனேன், அங்க நீங்க இல்லை, விசாரிச்சு இங்க வந்தது அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.
மாணிக்கத்தார் இரக்கத்துடன் அவனை பார்த்தார், இந்த யுத்தம் முடியாதா தம்பி
அவன் அவரை கவலையோடு பார்த்தான், யுத்தம் கூடாது தாத்தே
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
தமிழ் மக்களுக்கு மிச்சம் பிரச்சினை இருக்குது, தமிழ் மக்களுக்கு சிறுபான்மை என்ற வகையில் விசேஷ பிரச்சினை நிறைய உண்டு.
அப்ப தீர்த்து வைக்கறதுதானே
அவன் மெளனமாக இருந்தான். தாத்தே எனக்கு சரியாக சொல்ல தெரியலை, ஆனா யுத்தத்தால, சண்டையால அதை தீர்க்கலாமென்பது பிழை. எங்களை போல எத்தனை இளம் பிள்ளைகள் சாகிறம், அங்காலும் இங்காலும் எல்லரும் சகோதரங்கள், அடிச்சு கொள்ளுறளம், வாயாலே பேசணும், துவக்கால பேச கூடாது
சரோசா அவனை விரைவில் அனுப்பி விடும் நோக்கில் கோப்பி கிளாஸ்களுடன் வந்தாள்.
தாங்க்ஸ் அன்ரி
சற்று நேரம் இருந்து விட்டு விடை பெறும் முன் அவர் முன் மண்டியிட்டு வணங்கினான். மாணிக்கத்தார் விழிகள் நனைந்தன.

உள்ளே தாயிடம் மாலதி சொல்வது மாணிக்கத்தாருக்கு கேட்டது, நானேன், இங்க வந்தனன் என்றிருக்கிறது, அம்மா வீட்டில அனபான பாச அரவணைப்பில்லை, அப்பா முகம் கொடுத்து பேசறதில்லை, அண்ணனும் தங்கச்சியும் பயத்தோட என்னை பாக்கினன். நீயெண்டால் டிரெக் சத்தம் கேட்டால் ஓடி ஒளி எங்கிறாய்..!
கண்களில் வழிந்த கண்ணீரை சரோசா துடைத்து கொண்டாள்.
மாலதிக்கு யதார்த்த நிலைமை புரிந்தது. இடம் பெயர்வதற்கு முன்பிருந்த ஊர் அல்ல., அப்பதன்ர ஊருக்கு போய்விடுவம், அங்க எங்களை தெரியாது.
நான் இப்பை இயக்கத்துல இல்ல அம்மா
அதை யார் நம்புவினம், உன்னிய ஒருத்தன் கையில பிடிச்சி கொடுத்து விடவேணும்
நான் வருத்தக்காரி அம்மா, எதற்கும் இனி உதவன், மாலதி சாதாரண பெண்ணாகி விம்ம தொடங்கினாள்.
மாலதி உன்னை பெத்த தாயடி, நான் உன்னை இழந்துட்டு என்னால ஒருக்காலும் உசிரோட இருக்க முடியாது.

யுத்த அரக்கன் இரக்கமற்ற கரங்கள் வன்னி பிரதேசத்தை பற்றி பிடித்து விட்டன. மரணங்களின் எண்ணிக்கையும் அதற்கான காரணங்களும் யாழ்ப்பாணத்திற்கு தெரிய வந்த போது உறவினர்கள் துடித்து போயினர். பெற்றார் யழ்ப்பானத்திலும் பிள்ளைகள் வன்னியிலும் பிரிந்திருந்தனர். கணவன் யாழ்ப்பானத்திலும், மனைவி மக்கள் மல்லாவியிலுமாக தவித்தனர். மனித உறவுகள் சிதறி போய் விட்டன.

வன்னியிலிருந்து வரும் மக்களை சிங்கள் இராணுவம் சந்தேக கண் கொண்டு பார்த்தது.

நகுலன் மிகுந்த காதலுடன் சுகந்தியை பார்த்தான். அவன் விழிகள் அவளிடம் யாசித்தன
நகுலன் ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்தியறியள்? நான் எப்பவோ என் முடிவை உங்களுக்கு சொல்லிட்டன், நீங்கள் நினிக்கற மாதிரி கலியாணம் கட்டி வாழற பெண்ணல்லள், இலட்சியத்துக்காக மரணத்தை கழுத்தில கட்டிடு உலவரவள்.
அவமாக இந்த வாழ்வை முடிகிறன் என்கிறீரே, இந்த உலகம் எவ்வளவு இனிமையானது
இந்த உலகம் இனிமையானதா? எனக்கு அப்படி தெரியலை, இந்தமண்ணில அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீலவானம் கண்ணீர் வடிக்கின்றதாவும், பூக்கும் பூக்கள் மரணிக்கற மக்களுக்காக அஞ்சலி செய்வதாக எனக்கு படுகிறது
உம்மை மாற்றவே முடியாதா? ஆற்றாமையோடு கேட்டான்
அவள் அவனை பார்த்து சிரித்தாள்.
சுகந்தி நீர் செல்கின்ற பாதை சரியானதாக எனக்கு படவில்லை, அதற்காக உமது சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன். இந்த மண்ணில் இரத்த ஆற்றை ஓட விட்டு அவற்றில் விழுந்து கிடக்கிற சடலங்களின் பிணங்களின் மேல் நீங்கள் எதிர்பார்க்கிற சுதந்திரம் எங்களுக்கு கிடைக்குமென்றால் அதை நான் வெறுக்கிறேன்.
நீங்கள் கொஞ்சமேனும் இனபற்றில்லாதவர், அடிமைத்தனமாய் இருந்து பழகியவர், உயிருக்கு பயந்த கோழை
அவன் அமைதியாக பதில் சொன்னான் “இந்த உலகத்தில் விலை மதிப்பில்லாததும், இழந்தால் திரும்ப பெற முடியாததுமானதும் உயிர்தான். சுகந்தி இந்த உயிர் வாழ்தலிற்குத்தான் இந்த உலகம் இயங்குகிறது.
எமக்கு விலை மதிப்பில்லாதது சுதந்திரம்
எனக்கு எங்கள் உயிர்தான்
இரந்துட்டு வாழப்பழகி விட்டியள், கோழைகள், அப்போதுதான் அவள் அதை சொன்னாள், ஒரு கோழையின் மனைவியாக இருப்பதை காட்டிலும் ஒரு வீரனின் விதவையாக விரும்புகிறேன்.
உம்மை எனக்கு வழிக்கு கொண்டு வர முடியாது, நல்லது சுகந்தி ஒன்றை மட்டும் திடமாக சொல்லூறன், என் உள்ளத்தில் உம்மிய தவிர வேறு ஒருத்தியும் சலனத்தை ஏற்படுத்தியவளல்ல.
சொல்லிவிட்டு எழுந்தவன் சயிக்கலை உருட்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
சுகந்தியின் உள்ளம் ஒரு கணம் அதிர்ந்தது. “மெல்லிய நீரோடையின் சலசலப்பு” உள்ளத்தில் ஜலதரங்கமிட்டது.
மாணிக்கத்தார் என்னை பார்த்து சிரித்தார், இங்க பார் தம்பி எங்கட காலத்து காதலல்ல இது
எந்த காலத்திலும் காதல் காதல்தான், அண்ணை, அணுகு முறை, பழகு முறை மாறும்

விடிந்தும் விடியாத அதிகாலை பொழுதில் தாவடியை சுற்றி வளைத்து கொண்டது இராணுவம், மின்னல் வேகத்தில் இராசரெத்தினத்தின் வீட்டு சுற்றாடல் அவர்களால் அரண் செய்யப்பட்டது. உறக்கத்திலிருந்த இராசரத்தினம் துடித்து புதைத்து எழுந்திருந்தார். நிலைமை அவருக்கு புரிந்தது, அறைக்குள் ஓடியவர் மனைவியை தட்டி எழுப்பி விட்டு விட்டு சுகந்தியை காண ஓடினார். அவள் அறை திறந்து கிடந்தது.
வசந்தன் எழுந்து வந்தான், ஆமி சுற்றி வளைச்சுகிட்டது, செக் பண்ண போகினம், அப்பா இவளால எவ்வளோ கஷ்டம் ஆரோ சொல்லி கொடுத்திருக்கினம்.
ஐந்தாறு இராணூவ வீரர்கள் வேகமாக கதவை திறந்து கொண்டு முற்றத்தில் பிரவேசித்தனர்.
அப்பா உண்மைய சொல்லிடுங்கோ
பயப்பாடாதை தம்பி என்றார் இராசரெத்தினம் நடுக்கத்துடன்
இவர்களை துப்பாக்கி முனையில் ஓரமாய் நிறுத்தி விட்டு ஒவ்வொரு அறையாய் தேடினர்.
எங்க உங்க மக சுகந்தி? எதிரில் நின்றிருந்தன் இராணூவ அதிகாரி தெளிவான தமிழில் கேட்டான்.
இங்க இல்ல சார் அவ வன்னியில..
பொய் சொல்ல வேணாம் ஓங்கி அறைந்தான்
அப்பாவை அடிக்காதீங்கோ சேர், வசந்தன் முன் வந்தான், துப்பாக்கி பிடியால் இராணுவ வீரன் ஒருவன் அவன் வயிற்றில் குத்தினான். அப்படியே நிலத்தில் சரிந்து விழுந்தான்.
ஐயோ அவங்களை ஒண்ணும் செய்யாதீங்கோ சரஸ்வதி கத்தியபடி இரு கரங்களையும் கூப்பினாள்.
அப்ப உண்மிய சொல்லூறது..எங்க சுகந்தி?
அவ இங்க இல்லிய சேர்
வன்னியில
மீண்டும் பொய் சொல்ல வேணாம் அம்மா , அவ இங்க் வந்து பத்து பனிரெண்டு நாளாகுது, இங்கதான் இருந்தவ, எங்களுக்கு தெரியும், இராத்திரி இங்க இருந்தவ, இப்ப காணலை.
அவ கொட்டியா தானே?
“ஓம் சேர்” அவ எப்பவோ இயக்கத்துல சேர்ந்துட்டா
இப்ப ஏன் இங்க வந்தது?
எனக்கு தெரியாது சேர்
நீங்க ஏன் இங்க அவளை சேர்த்தது?
அவ என் மக சேர்.
வசந்தன் இராசரெத்தினத்தினத்தை பார்த்தன, இவங்களின் கையால் அவமாக சாவதிலும் பார்க்க நானும் போயிருக்கலாம் அவன் விழிகள் சொல்லின.
வீட்டிற்குள் குடைந்து கொண்டிருந்த இரணூவ வீரன் ஆல்பம் ஒன்றை எடுத்து வந்தான். அதனை விரித்து ஒரு படத்தை இராணூவ அதிகாரியிட்ம காட்டினான், இராணுவ அதிகாரி அந்த படத்தை வாங்கி சர்ஸ்வதியிடம் காட்டி இதில் யார் உங்கள் மகள் சுகந்தி?
அந்த படத்தில் சுகந்தியும் மாலதியும் நின்று கொண்டிருந்தனர்.
சரஸ்வதி ஒரு கனம் தயங்கினாள், இவ..சுகந்தியை காட்டினாள். மற்றது யாரு? அவ சிநேகிதி மாலதி
அவவும் கொட்டியாவா?
தெரியாது சேர், பொய் அவங்க வீடு எங்க இருக்குது தெரியுமா? தலையாளியில சேர்.
அனைத்து இரணுவ வீர்ர்களும் ஒரே நேரத்தில் துப்பக்கியை உயர்த்தி பிடித்து மேல் நோக்கி சுட்டனர், மேல் ஓடுகள் சிதறி விழுந்தன. அவர் கட்டிய வீடு கண் முன்னால் சீரழிகிறது.
ஒரு இராணுவ வீரன் மேலேறினான். அவன் கொடுத்த சத்தம் மேலிருந்து கீழிறங்கி வந்து இராணுவ அதிகாரியின் கையில் கொடுத்த பொருளை பார்த்ததும் சரஸ்வதி “சுகந்தி என்ன காரியம் செய்தாய்”
வாங்கி பார்த்த துப்பாக்கியை இரண்டு மூன்று முறை திருப்பி பார்த்து அப்படியே வசந்தனை நோக்கி சன்னம் புறப்பட்டது.
வசந்தன் குரல் அடங்கியது. அவன் கண்கள் பயத்தில் வெறிச்சிட்டவாறு கிடந்தது. சரஸ்வதி கதறியவாறு ஓடி வந்தாள் இராசரெத்தினம் மகன் மேல் மயங்கி சரிந்தார்.
எல்லாம் ஓய்ந்து போன பின்னால் அந்த இருளில் சுகந்தி அழுது கொண்டு உட்கார்ந்திருந்தாள். அந்த குடும்பம் அவளால் சீரழிந்து விட்டதா? அவளுக்கு அழுகை வந்தது.

சுகந்தி வழி காட்ட நாலைந்து போராளிகள் நந்தாவில் குளக்கரையோரமாக தலையாளியை நோக்கி அவதானமாக நகர்வது மங்கிய நிலவொளியில் தெரிந்தது
மாணிக்கத்தாரின் வீட்டில்
அவர்கள் மெதுவாக வீட்டின் பின் பக்கம் நோக்கி நகர்ந்தார்கள் அவர்களின் கரங்களில் துப்பாக்கிகள் ஏந்தியிருப்பது தெரிகின்றது
முன்னால் மெதுவாக நகர்ந்த உருவத்தின் நடை அவருக்கு பரிச்சயமானதாக தெரிந்தது சந்தேகமில்லை அது சுகந்திதான். அவர் அப்படியே தூணோடு சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டார். இப்பொழுது நாய்களின் குரைப்பொலி அருகில் கேட்டது.
மாலதி…மாலதி.. வெளியன்னலை தட்டினார்கள்
யார் அது?
நான் சுகந்தி
யன்னலை அரவமின்றி திறந்தாள்
என்ன சுகந்தி இந்த நேரத்தில்
தயங்கினாள்.. நான் இனி உன்னை சந்திப்பேனா தெரியாது, உன் அண்ணனிடம் எனக்காக என் மரணத்தின் பின்னர் இதை சொல் சுகந்தி தன் மார்பில் சன்னங்களை ஏந்தி சரியும் போது அவர் நினைவையும் தாங்கி கொண்டு செத்தாள் என்று, சுகந்தி விம்மி விம்மி அழுதாள்.
மானிக்கத்தாருக்கு புரிந்தது, சொல்லிவிட்டு போகத்தான் சுகந்தி வந்திருக்கிறாள், வானத்தை பார்த்தார், சின்ன வெளிச்சம் தெரிந்தது, மெல்ல எழுந்து நடந்தார். திடீரென அவர் வாய் இறுகப்பற்றி புதரினுள் இழுத்து சென்றது.
அவரை பற்றி இழுத்து சென்ற உருவம் “சத்தம் போட வேண்டாம், சுட்டு போடுது” அவர் காதருகில் மெல்ல முணு முணுத்தது கடவுளே “அம்மாளாச்சி” அவர் குப்புற கிடந்தபடி வேண்டி கொண்டார். இன்னமும் சற்று நேரத்தில் இந்த இடம் யுத்தகளமாக போகிறது. பெண்ணே ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தாய்
?
சுகந்தி தன் துப்பாக்கியை உயர்த்தினாள்.
நாலா பக்கங்களிலுமிருந்து சன்னங்கள் அவர் வீட்டை நோக்கி சல்லடையாக்கின.
அவர் வீடு கற்குவியலாக்கப்பட்டு வரிசையாக பிரேதங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
எனர பிள்ளைகள், சிவசாமி, மகளே சரோசா, நகுலா, மாலதி சுகிர்தா,… என்ர பிள்லையள், பேர பிள்ளியள். மற்றொரு பக்கம் இராணுவத்தினரின் சடலங்கள், போராளிகளின் சடலங்கள், சுகந்தி வானத்தை பார்த்தவாறு மார்பில் சன்னங்களை வாங்கி செத்து கிடந்தாள்
ஏன்..ஏன் இப்படி..? தம்பி மாரே புத்தமாரே, பட்ட துயரம் போதும், உங்கட துப்பாக்கிகளை இனியாவது கீழை போடுங்கோ
இரண்டு கரங்களையும் வானத்தை நோக்கி கூப்பியவாறு “தம்பிமாரே புத்தமாரே துப்பாக்கிகளை கீழை போடுங்கோ’ கூக்குரலிட்டார். அப்பிரதேசத்தின் மயான அமைதியை கீறிக்கொண்டு அவர் குரல் ஒலித்து கொண்டிருந்தது.

முடிவுரை:
வாசித்து முடித்தபின் நினைவு தானாக “காசா” மக்களை பற்றித்தான் நினைத்தது.
அன்பை பற்றி வளரும் உலகம் என்றுமே வராதா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Oct-23, 10:06 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 57

மேலே