கருக்கினால் கூறைகொள் வார் - பழமொழி நானூறு 378
இன்னிசை வெண்பா
உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம்மிறைவன் கூழுண் பவரே
கருக்கினால் கூறைகொள் வார். 378
- பழமொழி நானூறு
பொருளுரை:
சினந்து எழுந்த போரிடத்து பகைவர் அழியுமாறு வீரத்தாற் போர் செய்ய ஆற்றாராகி செய்யும் ஆற்றலுடையாரைப் போல, தருக்கித் தம்மை மிகுத்துக் கூறுதலினால் தம் அரசனிடத்து உணவுபெற்று வாழ்கின்றவர்கள் மேனியழகால் ஆடையைப் பெறுகின்ற (ஆடல் வன்மை பெறாத) நாடகக் கணிகையரை ஒப்பர்.
கருத்து:
ஆற்றலொரு சிறிதுமின்றி மிகுத்துக் கூறுதலானே உணவு பெறும் வீரர்கள், மேனியழகால் ஆடையைப் பெறும் கணிகையரை ஒப்பர்.
விளக்கம்:
கருக்கு என்பது நிறைவு; 'உணவு கருக்காயிருக்கின்றது' என்பது உலக வழக்கு.அஃது ஈண்டு மேனி நிறைவாகி அழகுக்கு ஆயிற்று.
'கருக்கினால் கூறைகொள் வார்' என்பது பழமொழி.