சின்ன சின்ன சந்தோசங்கள்

சின்ன சின்ன சந்தோசங்கள்

நம் வாழ்க்கையை சுவாரசியமாக கொண்டு செல்வது எது என்று கேட்டால் இந்த சின்ன சின்ன சந்தோசங்கள் மட்டும் தான். “நம்பிக்கைதான்” வாழ்க்கை என்று சொல்கிறோம், ஆனால் அவநம்பிக்கையும் சில நேரங்களில் தேவைப்படுகிறது, இது வாழ்க்கையை சரியாக கொண்டு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருக்க முடியும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்கும். நாம் அவற்றை எங்ஙனம் சந்தித்து கொண்டிருக்கிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.
இப்படி காலம் என்னும் “வெளி” (கடவுள் என்றும் வைத்து கொள்ளலாம்) நம் வாழ்க்கையை கொண்டு போய்க்கொண்டிருக்க, அந்த வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் இருக்கிறதே, அதுதான் வாழ்க்கையை அதாவது நம் மனதை சம நிலைப்படுத்துகிறது.
இதற்கு பெரிய பெரிய எதிர்பார்ப்புக்கள் தேவையில்லை. ஒரு குழந்தையிடம் ஒரு பொம்மை கிடைத்தாலும் போதும், அப்பொழுது அதன் முகத்தை பாருங்கள் ஏதோ பெரிய பொருள் தன் கையில் கிடைத்து விட்டது போல..!
எப்பேர்ப்பட்ட மனிதனும் மிக சாதாரண மன நிலையில் இருப்பவன் தான், அவனுக்கு தேவை என்பது தற்சமயத்தை சார்ந்தது. வரிசையில் நின்று “டிக்கட்” வாங்கி விட்டானென்றால் கூட சந்தோசப்பட்டுக்கொள்வான். அந்த “டிக்கட்” என்பது வெறும் அன்றைய பிரயாணம், அல்லது திரைப்படம், எதுவாகவும் இருக்கலாம், அது முடிந்தால் தூக்கி போட்டு விட வேண்டியதுதான் என்பது அறிந்திருந்தாலும் கிடைத்தது சந்தோசம் தானே.
இப்படித்தான் ரேசனில் பொருட்கள் கிடைத்து விட்டாலும், வரிசையில் நிறு கரண்ட் பில் கட்டுவதாகட்டும், அப்பொழுது ஏற்படுகிற சந்தோசம் இருக்கிறதே.
பள்ளி பருவத்து மாணவர்களுக்கு “கடு கடு வாத்தியார்” அன்று வகுப்புக்கு வரமாட்டார் என்று தெரிந்தால் வரும் சந்தோசம் இருக்கிறதே, நாங்கள் சிறு வயதாய் இருந்த காலத்தில் “பிரேயருக்கு” நிற்கும் போது ஆசிரியர்களின் வரிசையைத்தான் பார்ப்போம், “அடி பின்னி” விடும் வாத்தியார் வந்திருக்கிறார? என்று, (அப்பொழுதெல்லாம் அடிக்காத வாத்தியார்கள் குறைவு) (காரணம் வீட்டு பாடம் எழுதி வந்திருக்க மாட்டோம், அல்லது புத்தகத்தை மறந்து வந்திருப்போம்) இப்படி ஏதாவது ஒரு துன்பம் (அது எங்களுக்கு பெரும் துன்பம் அன்றைய காலத்தில்) ஆசிரியர் அந்த வரிசையில் இல்லை என்றதும் வருகிற சந்தோசம் இருக்கிறதே.
இது போலத்தான் நாம் வளர வளர நம்முடைய சின்ன சின்ன சந்தோசங்கள் தேவைக்கு ஏற்ப மாறிக்கொண்டிருந்தாலும் அதனுடைய உணர்வுகள் நம் வாழ்க்கையை சுவாரசியமாக கொண்டு செல்லுகின்றன. தேர்வில் வெற்றி பெறுவது, மதிப்பெண்கள் எடுப்பது, எப்பொழுதும் குறைவாக மதிப்பெண் எடுப்பவன் அன்றைய தேர்வில் அதிக மதிப்பெண் பெறும்போது அவனுக்கு ஏற்படும் சந்தோசம், அதை விட அவனது பெற்றோர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி..!
வேலை கிடைத்த சந்தோசம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கு வரன் கிடைத்த சந்தோசம், அந்த நேரத்தில் மனம் முழுக்க நிறைந்திருக்கும் அந்த உணர்வு, அதை வார்த்தையில் வர்ணிப்பது சிரமம்.
இந்த சந்தோசங்களை அனுபவிப்பது என்பது இன்னார்தான் என்று ஒதுக்கி விட முடியாது. பொதுவாகவே எல்லா மனிதர்களுக்கு தேவைப்படுவது இத்தகைய உணர்வுகள்தான். பெரும் பணக்காரனிடம் எல்லா வசதிகள் இருந்தாலும், அந்த பணத்தில் அவனுடைய தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டாலும், அவனுக்கும் இத்தகைய உணர்வுகள் கிடைத்து அவனது வாழ்க்கையையும் சுவாரசியமாக கொண்டு செல்லத்தான் செய்கிறது. பேரன் பேத்தி வருதல், மகன் மகள் திருமணம், அவர்களின் மகிழ்ச்சி குதுகலத்தை கண்களால் கண்டு மகிழ்வதே சந்தோசம்தாம் அவர்களுக்கு.
பணம் மட்டுமே மனித வாழ்க்கையை சந்தோசப்படுத்துவதில்லை என்பது இந்த உணர்வுகள் மூலம்தான் மனிதன் உணர்ந்து கொள்கிறான். உதாரணமாக நமக்காக நண்பர்கள் சாப்பிடாமல் காத்திருந்து, நாம் வந்த பின் “நான்” நீ சாப்பாடு கொண்டு வந்திருக்கியோ இல்லையோன்னு சாப்பிடாம காத்திருக்கிறேன் என்று சொல்லுவான், அல்லது சொல்லுவாள் பாருங்கள், அப்பொழுது நம் மனதுக்குள் வரும் சந்தோசம்.(இதற்கு பணம்தான் காரணம்) என்று எப்படி சொல்ல முடியும்?
இப்படி சந்தோசங்கள் எப்படி வரும் என்று நம்மால் பட்டியல் போட முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. நாளைக்கு “அசைவ உணவு” என்னும் அறிவிப்பு சிலரின் மனதை மகிழும் நேரத்தை போலவே “நாளை கண்டிப்பாய் சைவ உணவு” மட்டும் என்னும் அறிவிப்பும் சிலருக்கு சந்தோசத்தை கொடுக்கும்தானே.
அதனால் இப்படித்தான் சந்தோசம் கிடைக்கும் என்று சொல்ல முடியாத வாழ்க்கையில் “திடீர் திடீரென” நம்மை திக்கு முக்காட வைத்து நகர்த்தி கொண்டே செல்கிறது இந்த உணர்வுகள்.
நம் உடம்பில் இருக்கும் நோய் தீர்ந்து போய் நலமாய் வீட்டுக்கு வருவோமே, அப்பொழுது ஏற்படுவதும் சந்தோசம் தான். அப்பாடி உயிருக்கு ஆபத்தில்லாமல் வந்து விட்டோமென்று.
இந்த சந்தோசங்களை எப்படி பட்டியலிட முடியாதோ, அதே போல் நேர்மறையாகவும் இதை பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். ஒருவரை ஏமாற்றி விடுபவனுக்கு கிடைக்கும் சந்தோசம் மற்றவனை பெரும் துன்பத்தில் ஆட்படுத்தி விடுகிறது. இது போலவே தான் நமக்கு கிடைக்கும் வெற்றி மற்றவருக்கு தோல்வியாக முடிவதில் அவர்களுக்கு வருத்தம் தான் மிஞ்சுகிறது.
ஏன் திருடர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைத்ததில் வரும் சந்தோசம் இழப்பவர்களுக்கு துக்கம்தானே..!
அடுத்தது “மீன் பிடிக்க தூண்டில் போட்டிருப்பது” இதை உதாரணமாக வைத்து கொண்டு அரசியல்வாதிகளை உங்கள் கண் முன் கொண்டு வாருங்கள், அவர்கள் உங்களுக்கு அப்போதைக்கு தரும் சில இலவசங்கள், பணம், பொருள் எல்லாமே நமக்கு அப்பொழுது கிடைக்கும் சந்தோசங்கள்தான், ஆனால் பலன் நம்மிடம் அவர்கள் பெருவது அங்கீகாரம் எனும் அதிகாரம். (இதில் கூட வெற்றி பெற்றவன் சந்தோசமும், தோல்வி அடைந்தவன் துன்பமும்) அடையத்தான் செய்கிறான்.
வாழ்நாளை போதையிலேயே இருப்பவனுக்கு சாராயக்கடை ஒரு மணி நேரம் முன்னதாக திறந்து விடுவார்கள் என்னும் செய்தியே சந்தோசம்தானே.
சின்ன சின்ன சந்தோசங்கள் மனிதர்களின் வாழ்க்கையை உற்சாகப்படுத்தியபடியே நகர்ந்து கொண்டிருந்தாலும் ஒரு சில நேரங்களில் இன்னொரு பக்கம் வருத்தத்தையும் தந்து விடுகிறது என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும்.
எப்படி சொன்னாலும் இன்றைக்கு யாராவது ஒருவர் ஒரு “டீ” இலவசமாக வாங்கி கொடுத்தாலும் சந்தோசப்பட்டு கொள்ளும் நம்மை போன்றவர்களுக்கு, இத்தகைய உணர்வுகள் வராமல் இருந்தால் வாழ்க்கையை எப்படித்தான் ஓட்ட முடியும்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-23, 11:33 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 98

சிறந்த கட்டுரைகள்

மேலே