பேர்த்துநாய் கவ்வினார் இல் - பழமொழி நானூறு 375

இன்னிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

நீர்த்தக வில்லார் நிரம்பாமைத் தந்நலியின்
கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் சான்றவர்க்குப்
பார்த்தோடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின்
பேர்த்துநாய் கவ்வினார் இல். 375

- பழமொழி நானூறு

பொருளுரை:

நாய் சினந்து கவ்விய இடத்து ஆராய்ந்து ஓடிப் பின்சென்று மீண்டும் நாயினைக் கவ்வித் துன்புறுத்தினவர்கள் ஒருவரும் இலர்; நல்ல நேர்மையான குணங்கள் இல்லாதவர்கள் அறிவு நிரம்பாமையால் தம்மைத் துன்புறுத்துவராயின், மன ஊக்கங் கொண்டு அவர்களைத் தாம் துன்புறுத்துதல் அறிவு சான்றவர்க்குக் கொள்கையன்று.

கருத்து:

அறிவிலார் தீங்கு செய்தாராயின் அதைப் பொருட்படுத்திப் பெரியோர் தீங்கு செய்யமாட்டார்கள்.

விளக்கம்:

சான்றவர் கோளாவது தமக்கு இன்னா செய்தார்க்கும் அவர் நாண இனிமைதரும் செயலைச் செய்தலேயாகும்.

'இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு' 987 சான்றாண்மை - என்பது திருக்குறள்.

அறியாமையால் தீங்கு செய்தலின் அறிவுடையார் பொருட்படுத்த வேண்டுவதில்லை!

'நாய் கவ்வின் பேர்த்தும் நாய்கவ்வினார் இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-23, 7:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே