ஆத்தாள் அபிராமி
 
 
            	    
                ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிய (அ)டங்கக்
காத்தாளை அங்குச பாசம் குசுமம் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில் லையே.
உரை
எங்கள் தாயை, அபிராமவல்லியை, அகிலாண்டங்களையும்
ஈன்றருளியவளை, மாதுளம் பூவைப் போன்ற செங்நிறம் பொருந்தியவளை, புவிமுழுவதும் பாதுகாத்தவளை, அங்குசமும் பாசமும் மலர்ப்பாணமும் கரும்பு வில்லும் தன் நான்கு அழகிய திருக்கைகளிலே வைத்தவளை, மூன்று கண்களை உடையவளை வணங்கும் அடியவர்களுக்கு வருவது ஒரு துன்பமும் இல்லை.
....
 
                     
	    
                
