அஃதன்றோ கல்லொடு கைஎறியும் ஆறு - பழமொழி நானூறு 382

இன்னிசை வெண்பா

அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவ ரேனும்,
நிகர்ஒன்றின் மேல்விடுதல் ஏதம்; - நிகரின்றி
வில்லொடுநேர் ஒத்த புருவத்தாய்! அஃதன்றோ,
கல்லொடு கைஎறியும் ஆறு. 382

- பழமொழி நானூறு

பொருளுரை:

வில்லினொடு நேராக ஒத்த புருவங்களை யுடையாய்!, போர் நடவாநின்ற போது ஒப்புமை யின்றிப் போராற்ற வல்லரேனும் ஒப்புமை கருதலின்றி (வலியார்) மேற்படை விடுதல் துன்பந் தருவதாம்; கல்லொடு மாறுகொண்டு கையால் எதிர்த்துத் தாக்குதலை அஃது ஒக்குமன்றோ?

கருத்து:

வீரர்கள் தம்மின் வலியார்மேற் சேறல் துன்பம் பயப்ப தொன்றாம்.

விளக்கம்:

போராற்ற வல்லரேனும், பகைவருடைய நிலைமை அறியாது, வலியார்மேற் படை தொடுத்தல், கல்லொடு மாறு கொண்டெறிந்த கையை யொப்பத் துன்பம் பயப்பதாம்.

'கல்லொடு கையெறியு மாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-23, 11:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே