சீர்த்த கிளையின்றிப் போஓய்த் தனித்தாயக் கண்ணும் - பழமொழி நானூறு 383
நேரிசை வெண்பா
சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்துங் கெட்டாலும்
நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஓய்த் தனித்தாயக் கண்ணும்
இளைதென்று பாம்பிகழ்வார் இல். 383
- பழமொழி நானூறு
பொருளுரை:
பாம்பானது மிக்க சுற்றத்தினின்றும் நீங்கிப் போய்த் தனிப்பட்ட இடத்தும் இளையது என்று கருதிச் சோம்பியிருப்பார் இலர்; அதுபோல, சீர்மை தக்க அரசர்களுடைய சிறப்பெல்லாம் கெட்டவிடத்தும், அவர் நிலைமையை நோக்கி மாறுபட்டுக் கூறி இகழாராகுக.
கருத்து:
அரசன் சீர்கெட்ட விடத்தும் அவனை இகழ்வார் தீமையையே அடைவர்.
விளக்கம்:
பாம்பு இளைதென்று இகழ்வார் இறுதி எய்தல்போல,நிலைமை நோக்கி, இகழ்வாரும் இறுதி யெய்துவர்.
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்' என்பது பழமொழி.