குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.
அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;
அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு:
இரந்துபின் னிற்றல்.
(இ-ள்.) அங்ஙனமெண்ணிய தலைவன் தலைவிக்கு இதஞ்சொல்லிப் பின்னே நிற்றல்.
கட்டளைக் கலித்துறை
உள்ளக் கமலத்தி னுள்ளூ றியவென் னுவகையென்னும்
வெள்ளத் தடத்தை விடாவன்ன மேவியன் பாவனைத்துந்
தெள்ளத் தெளிந்த குலோத்துங்கன் கோழிச் சிலம்பின்மதன்
கள்ளச் சலத்தையென் பாலினு நீக்கக் கருதுமின்றே! 6

