மலர்தழுவி முத்தமிட்டாய் நாணத்தில் ரோஜாப்பூ
![](https://eluthu.com/images/loading.gif)
மலர்ரோஜா பூத்து மலர்ந்ததுதோட் டத்தில்
நிலவுகுளிர் நல்லொளி நல்க -- மலரில்
அழகுமலர் ராணியும் ஆட மகிழ்வில்
தழுவிமுத்தம் தந்திடவந் தாய்
---இருவிகற்ப நேரிசை வெண்பா
பொழிப்பு மோனைத்தொடை அழகு
மலர்ரோஜா பூத்து மலர்ந்ததுதோட் டத்தில்
நிலவு பொழிந்தது நல்லமுதை அன்பில்
நிலவுபார்த்து ரோஜா மகிழ்ந்தா டியது
மலர்தழுவி முத்தமிட்டாய் நீ
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
மலர்ரோஜா பூத்துமெல்ல மலர்ந்ததுதோட் டத்தில்
நிலவுவந்து பொழிந்ததுவே நல்லமுதை அன்பில்
நிலவுபார்த்து ரோஜாப்பூ மனம்மகிழ்ந்தா டியது
மலர்தழுவி முத்தமிட்டாய் நாணத்தில் ரோஜா
-----காய் காய் காய் மா கலிவிருத்தம் மோனை அழகுடன்
மாச் சீரை மாற்றி கலித்தளை மிகுந்து வர மாற்றினால்
தரவு கொச்சகக் கலிப்பா கிடைக்கும்
முயல்வோம்
மலர்ரோஜா பூத்துமெல்ல மலர்ந்ததுதோட் டத்தினிலே
நிலவுவந்து பொழிந்ததுவே நல்லமுதை அன்பினினால்
நிலவுபார்த்து ரோஜாப்பூ மனம்மகிழ்ந்தா டியதுகாற்றில்
மலர்தழுவி முத்தமிட்டாய் நாணத்தில் ரோஜாப்பூ
----ஈற்றுச் சீர்களை மாவிலிருந்து காய் க்கு மாற்றியதில்
முதல் சீர்களில் ஏற்கனவே உள்ள நிரை அசையால்
காய் முன் நிரை வந்து கலித்தளை மிகுந்து பெற்று
தரவு கொச்சகக் கலிப்பா ஆனது
யாப்பார்வலர் பயில்வோர் கவனிக்கவும்
(மாச் சீர் விளங்கனிச் சீர் நீக்கி கலித்தளை மிகுத்து
அமைவது தரவு கொச்சகக் கலிப்பா என்பர் )