ஒத்த வயது நண்பனின் மறைவு, அறிந்தபோது கண்களில் கசிவு
ஒத்த வயது நண்பனின் மறைவு,
அறிந்தபோது கண்களில் கசிவு.
நெஞ்சில் அழுத்தும் இறுக்கம்,
மனதும் உறங்க மறுக்கும்.
மறைந்து போகும் உறவுகள்,
மறந்து போன நினைவுகள்,
தேவையற்ற கோபங்கள்,
தொலைத்துவிட்ட நட்புகள்.
வாழ்க்கை என்றும் நிலைப்பதில்லை.
அது வாழும் போது தெரிவதில்லை,
பலரும் சொன்ன தத்துவம்,
அறிந்தும் மனது மறந்திடும்.
கடந்து வந்த பாதையில்,
விரைந்து போன காட்சிகள்,
நினைவில் தங்க மறுத்திடும்
கனவில் தோன்றிக் கரைந்திடும்.
மகிழ்ந்த நாட்கள் யாவையும்,
மீண்டும் வருதல் விரும்பியே,
பாழும் மனமும் தவித்திடும்,
காலம் திரும்ப மறுத்திடும்.
என்ன பேசி என்ன செய்ய?
நோயை நொந்து பயன்தான் என்ன ?
அவரவர் துன்பம் அதுவும் தனிதான்
வருந்தும் வழிகள் அவையும் தனிதான்.
நினைந்து பேசி நாளெலாம்,
பலருடன் கூடி வருந்தலாம்,
துன்பம் கடந்து போகலாம்,
மீண்டும் வாழ்வு தொடரலாம்.
மறைந்தவர் வாழ்வில் நாமும் கலந்து,
மகிழ்ந்த நாட்களை மனதில் நினைந்து,
இருப்பவர் வாழ்வில் மகிழ்வைத் தந்து,
தொடரும் வாழ்வே சிறந்த மருந்து.