மண்ணும் மரமும் காட்டும் பண்பு
மண்ணும் மரமும் காட்டும் பண்பு
“மண்ணும் மரமும் காட்டும் பண்பு” கொஞ்சம் வித்தியாசமான தலைப்பு, காரணம் மனிதர்களுக்கு மட்டுமே இருப்பது போன்ற தோற்றம் அளிப்பது பண்பு என்னும் பழக்கம். ஆனால் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்த மனிதர்களுக்கு இயற்கை அளித்த இந்த வரப்பிரசாதம் மனிதர்கள் சரியாக கடைபிடிக்கிறார்களோ இல்லையோ மண்ணும், மரமும் கடைபிடித்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த கட்டுரை காட்டுகிறது.
எந்த வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் ஒரு மரம் கிளை நிறைய இலை,பூக்களுடனோ, அல்லது பழங்களுடனோ இருந்தாலும் இறுமாப்பு கொள்ளாமல் நின்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அந்த மரம் மற்றொரு கால கட்டத்தில் தனது இலைகளை எல்லாம் உதிர்த்து விட்டு வெற்று கிளைகளாய், மொட்டை மரமாய் நின்று கொண்டிருந்தாலும் அப்படியேதான் நிற்கிறது. (இதற்கு எதிர் கேள்வி வரலாம் அதற்கு வாய் இருந்தால் புலம்பி இருக்கும்)
இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் வரிசையான கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டே இருக்க வேண்டும், அது நடந்திருந்தால்…? பேசியிருந்தால்… ? ஆகவே அதனை விட்டு விட்டு தாண்டி செல்லலாம்.
இயல்பிலேயே கூர்மையான அறிவு படைத்தது மரம். யோசித்து பார்த்தால் வெறும் நீரை மட்டும் வேரின் மூலம் பெற்று தனது பருத்த உடலை இவ்வளவு உயரமாகவும் தடித்தும் வளர்த்திருக்க முடியாது. அதே போல் இதனுடைய சத்துக்களுக்கு அடிப்படை காரணமாக மண் மட்டுமே இருந்திருக்க முடியும். அது தன்னிடமிருந்து நீரை மட்டுமில்லாமல் தான் சேர்த்து வைத்திருந்த சத்துக்கள் அனைத்தையும் மரங்களுக்கு தண்ணீரோடு சேர்த்து ஊட்டி வளர்த்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட “சத்துக்கள்” என்னெவென்று மனிதன் கண்டு பிடித்து மண்ணிலிருந்து அதனை பிரித்தெடுத்து, “உரங்களாக” சேமித்து வைத்துக்கொண்டு அதனை மற்ற பயன்பாட்டுக்களுக்கு உபயோகப்படுத்த தொடங்கி விட்டான். இதனால் பல இடங்களில் மண் வளத்தினுடைய சத்துக்கள் குறைந்து போய் அந்த மண்ணில் வளரும் எல்லா வித தாவரங்களும் “சத்தின்றி” அல்லது ஊட்டமின்றி இருக்கின்றன. அந்த நேரத்தில் அந்த மண்ணுக்கு தான் சேமித்து வைத்த மண்ணின் சத்துக்களை (உரங்களை) அந்த மண்ணுக்கு அளித்து அதன் மூலம் அங்குள்ள தாவரங்களுக்கு “ஊட்ட சத்து” கிடைக்க ஏற்பாடு செய்து கொள்கிறான். இது நல்ல விசயம் பாராட்டப்பட வேண்டிய விசயம்தான், ஆனால் இந்த செயல்களை விலையாக்கி அல்லது பணமாக்கி மிகப்பெரிய வணிகமாக்கி விடுகிறானே, இதில் மனிதன். எவ்வளவு திறமையை காட்டுகிறான் பாருங்கள். மண்ணின் வளத்தை சுரண்டி அதையே மற்றொரு இடத்தின் மண்ணின் வளத்துக்கு விலைக்கு விற்பது.
மனிதன் இத்தகைய செயல்கள் செய்தாலும் மண் காட்டும் பண்பு தன்னுடைய அனைத்து சத்துக்களையும் எல்லா உயிர்க்கும் பங்கிட்டு அளிப்பதில் பாகுபாடு காட்டுவதில்லை. உதாரணமாக பார்ப்போமென்றால் ஒவ்வொரு இடத்து மண்ணும் அதற்கு அல்லது அங்குள்ள வளத்துக்கு தகுந்தவாறே பயிரினங்கள் முதல் விலங்குகளையும் மனிதர்களையும் உருவாக்குகிறது. அரபு நாட்டு கால சூழ்நிலை அதீத வெப்பம், மணல் இவைகளுக்கு தகுந்தவாறு தாக்கு பிடிக்க கூடிய மனிதர்கள், விலங்குகள், தாவரங்களை, உருவாக்குகிறது. அதே போலத்தான் அந்தந்த தட்பவெப்பநிலையுடன் மண்ணின் பண்புதான் அங்குள்ள உயிரினங்களின் குண நலன்களை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மரங்களுக்கு வருவோம், ஒரு மரம் வளர்கிறது என்றால் அதனை நம்பி பல்வேறு உயிரினங்களும் அதனை நம்பி வாழ்கின்றன என்பது இயற்கையின் ஏற்பாடு. மண் எப்படி தன்னுள் வாழும் அனைத்தையும் காக்கும் பொறுப்பில் இருக்கிறதோ அது போல அந்த மண் தன்னையும் தாண்டி வளரும் அல்லது வசிக்கும் உயிர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க இது போன்ற மரங்களை உருவாக்குகிறது எனலாம்.
இப்படி வைத்து பார்க்கலாம் பத்து சென்ட் இடத்தில் ஒருவர் அல்லது இருவர் மூவர் குடியிருக்க முடியும், அதே “பிளாட்டுக்களாக கட்டி ஐம்பது நூறு குடும்பங்களை அங்கு குடி வைக்க முடியும். ஆனால் மனிதன் இதற்கு ஒரு விலை வைத்து வியாபாரமாக செய்கிறான், அதை விட கொடுமை என்னவெனில் அந்த மண் தாங்கும் எடையை விட கூடுதல் எடையை அதன் மீது வைத்து அக்குடிமைகளை ஏற்படுத்துகிறான்.
மண் அப்படி அல்ல குறிப்பிட்ட சுற்றளவுக்கு இத்தனை தாவரங்கள், நன்கு வளர முடியும் என்னும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் அப்படி குறிப்பிட்ட மண்ணில் வளரும் தாவரங்களுக்கு நல்ல ஊட்ட சத்தை கொடுக்க முடியும் என்னும் செயல்பாட்டுக்கு ஒத்து வரும் என்பதால் தான், மற்ற தாவரங்களை அவை ஒதுக்குவதில்லை. ஆனால் அதையும் மீறி நெருக்கமாய் வளரும் தாவரங்களுக்கு மண்ணால் போதிய அளவு உயிர் சத்தை வழங்க முடிவதில்லை.
ஒவ்வொரு செடி கொடி, மரம் இவைகள் எல்லாமே பல்வேறு உயிரினங்கள் வாழும் குடியிருப்புக்கள். அப்படி உருவாகும் ஒரு மரத்தில் பறவைகள் மட்டுமில்லை, பல உயிர் வாழினங்கள் மரங்களின் பொந்துகளிலும், கிடைக்கும் கிளைகளிலும் தங்களுடைய குடியிருப்பை ஏற்படுத்தி கொள்கின்றன. குரங்குகளுக்கும் கூட அது ஒரு வாழ்விடம் தான். இவைகளை அந்த மரங்கள் எந்த விதமான எதிர்பார்ப்பில்லாமல்தான் செய்கின்றன.
மரங்கள் மண்ணிலிருந்தாலும் வானில் மிதந்து செல்லும் மேக கூட்டங்களை கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்டவைகளாக இருக்கின்றன. அப்படி மேக கூட்டங்களை இழுத்து பெற்று தரும் மழை நீர் எல்லா உயிர்களுக்கும் வாழ்வதற்கு வழி செய்கின்றன.
இப்படி யோசித்து பார்த்தால் மனிதனுக்கு மட்டும் மேக கூட்டங்களை கவர்ந்திழுத்து மழையை பொழிய வைக்கும் வசதி இருந்தால் இந்நேரம் அதையும் “காண்ட்ராக்ட்” ஒப்பந்தம் போட்டு விலை பேசி மழையை பெய்ய வைத்திருப்பான்.
மண், அது வளர்க்கும் மரம் இரண்டுமே தங்களுக்கு என்று எதுவும் பெறுவதில்லை. அதற்கு கிடைக்கும் எல்லா வளங்களும் மற்ற உயிரினங்களுக்காவே எனும் போது நாம் அதை காட்டும் பண்பு என்று சொல்வதில் தவறேது?
மரங்கள் உருவானதின் நோக்கமே இயற்கை அதற்கென சில விசேச குணங்களை அளித்து அதன் மூலம் பல உயிரினங்களுக்கு வாழ்வதற்கும், மழையை பொழிய வைத்து நீர் வசதியை ஏற்படுத்தி தரவும் தான் உருவாக்கி இருக்கிறது.
மரங்களில் காய்க்கும் கனிகள், காய்கள், அனைத்தும் பல உயிர்களுக்கு உணவாக கிடைக்க இயற்கை செய்திருக்கும் ஏற்பாடு, இதில் மனித உயிரினம் மேம்பட்டு அதை பயிரிடுதல் மூலம் ஏகபோக உரிமை ஆக்கி கொள்கிறது. இதையும் மீறி யானைகள், காட்டு பன்னிகள், மற்றும் தாவர உண்ணிகள் காட்டில் இருந்தோ அல்லது அக்கம் பக்கம் இருக்கும் பசு, எருது போன்றவைகள் அதனை அனுபவிக்க வருகின்றன. இதனால் மனித விலங்கு மோதல் உருவாகிறது.
மரங்கள் வெட்டப்படுவது மனித வசதி ஏற்பாடுதானே தவிர எந்த விலங்கும் மரங்களை வெட்டி போட முயற்சிப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு மரமும் இதே போல பல மரங்களை வளர்க்க முயற்சித்து கொண்டே இருக்கிறது. அப்படி வளரும் மரங்கள் அனைத்தும் பிற உயிர்களின் வசதிக்காகத்தான் தன்னை வளர்த்து கொள்கின்றன. வசதியை பெறுவதில் முதன்மையான உயிரினமாய் இருப்பது நம் மனித இனம்தான். நம்மால் விலங்குகள் இருக்கும் காட்டு பகுதிக்கு சென்று அதை அனுபவிக்க முடியாததால் நம் இடங்களில் உள்ள விலை நிலங்களில் விளைவித்து அனுபவித்து கொள்கிறோம்.
வேடிக்கை என்னெவென்றால் இரண்டு இடங்களிலும் தாய்மையாய் இருப்பது மண் மட்டும்தான். அவைகள் இரண்டு இடங்களிலும் துரோகம் செய்வதில்லை, ஆனாலும் காட்டு பகுதியில் அதன் வளம் இன்னும் கூடுதலாய் இருப்பதால் வளரும் தாவரங்கள் நல்ல ஊட்ட சத்துக்களாய் இருக்கும். காரணம் அங்கு மண் வளம் மனிதர்களால் சுரண்டப்படுவது குறைவு.
விளைநிலங்களில் வளர்ப்பவன் மேற்சொன்ன முறைப்படி விலைக்கு வாங்கிய உரங்களை இட்டு மண்ணை சமாதானப்படுத்தி கொள்கிறான்.
மண் எப்பொழுதும் பண்புகளுடன் இருப்பது எப்படி உண்மையோ அது போல எல்லா வித உயிரினங்களுக்கும் இருக்கிறது. ‘மரங்கள்’ என கட்டுரை தனியாக குறிப்பிடுவதன் காரணம் நீங்கள் எங்காவது மரங்கள் அருகில் நின்று சற்று நேரம் கூர்ந்து கவனியுங்கள். எத்தனை வகையான உயிரினங்கள் அங்கு வாழ்ந்து கொண்டு ஒரு பரபரப்பாய் இருப்பது போல பறவைகள் வருவதும் போவதுமாய், வகை வகையான எறும்பு முதல் கரையான் வரை, அது போக அணில், பாம்புகள், மற்றும் குரங்குகள்.உங்களுக்குள் ஒரு பெரிய “பிளாட் குடியிருப்பு” எந்த வகையில் சுறு சுறுப்பாய் காட்சி தருமோ (காலை மாலை) அப்படித்தான் ஒவ்வொரு மரமும் காட்சி அளிக்கும். அவைகள் எல்லாமே கட்டணமில்லா குடியிருப்புக்களை மற்ற உயிரினங்களுக்கு அளித்து பாதுகாத்து வருவது புரியும். இதை விட பண்புக்கு உதாரணமாக எதை காட்ட முடியும்?