அந்தி மொழி 3

அந்தி மொழி-3
....................

பாட்டன் மடியிருந்து பல கதை அவள் பேசினாள்.
அவள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் கதைகளாக பாட்டன் மொழிதல் வழி மனதை நிறைத்தன.

“அம்மப்பா....! இந்த நாரையெல்லாம் எங்க போகும்...?”

“அதிட வீடு எங்க இருக்கு...?”

இப்படிப் பல கேள்விகள் பல பறவைக் கதைகளாயிற்று.

வரிசை வரிசையாகவும், கூட்டம் கூட்டமாகவும் நெடுவானில் அணி வகுக்கும் பறவைகள் அவளுக்கு விந்தையானது.

விந்தை உலகில் சிறகடித்துப் பறக்கும் வண்ணப் பறவைகள் இவ்வாறே அவளுக்கு மிகப் பிடித்தமானதாகிற்று.

பசு மாடொன்று கழுத்து மணி ஆட்டியபடி மேச்சலுக்குச் சென்று வாயிலில் வந்து நின்றது.

பாட்டனார் அவளை மடியிலிருந்து இறக்கி மாட்டின் கயிறு பற்றி தொழுவத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமானார்.

“இரு...! கண்ணம்மாவை கட்டி விட்டு வாறான்...”
என்றபடி உள்ளே சென்றார்.

பாட்டன் சொன்ன பறவைக் கதைகளில் உலவிக் கொண்டு அம்மண் பாதையில் உலா வந்தாள் அவள்.

எழுத்துக் கூட்டி வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே புத்தகங்கள் அவளுக்கு சினேகமாயின. வார்த்தைகளுக்குள் வலம் வரத்தொடங்கினாள். மனக்கண்ணை நிறைக்கும் உலகத்தை விந்தையாக காணப் பழகிக் கொண்டாள். தன்பாடப் புத்தகமன்றி எது தன் கண்ணிற் பட்டாலும் வாசிக்கும் முனைப்புடையவள்.

தன் சிறிய தாயின் வாசகசாலைப் புத்தகங்களையும் விட்டு வைப்பதில்லை. அவற்றைப் பார்த்து அவளுக்கு பெரு வியப்பு.
“இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி வாசிக்கிறாங்களோ...!”

தானும் வாசிக்க வேணும் அப் பெரிய புத்தகத்தை என்று ஆவலுடன் சிறுகச் சிறுக வாசிப்பாள். அவை பெரிய சமுக நாவல்கள். அவற்றில் அரிதாக இருக்கும் சில படங்களைப் பார்த்து கதையின் காட்சிகளை உள் வாங்கியபடி அவற்றை வாசிக்கத் தொடங்குவாள். அது மட்டுமல்ல, அவை வாசகசாலைப் புத்தகங்கள் அவற்றில் இருந்நு மேலெழும் வாசனையும் மிருதும் அவற்றை முகரவும் பரிவாய்த் தொடவும் எப்பொழுதும் தூண்டுபவையாக இருந்தது. அத்தோடு வாசிப்பவர்் பெயர் அடையாளமிட அதன் முன் அல்லது கடை அட்டையில் சிறு பை இருக்கும். தடித்த தாளினால் ஆன அச்சிறு பை அவளுக்கு மிகப் பிடித்தமானது. அது அவளுக்கு புது அனுபவமாக இருந்தது. அவற்றை அவள் தன் புத்தகங்களில் கண்டவளில்லை அதிலுள்ள பெயர்களைப் படிப்பதும் அவள் சுவாரஸ்யங்களில் ஒன்றானது. புரிந்தது்ம் புரியாததுமாய் வாசித்து முடித்தால் அவள் களிப்பிற்கு எல்லையில்லை. பெருஞ்சாதனை படைத்த திருப்தி படித்து முடிக்கும் நாளொன்றில் அவளுக்கு கிடைக்கும்.

படித்து முடித்த புத்தகத்தை பயபக்தியோடு எடுத்த இடத்தில், எடுத்த சுவடில்லாது வைத்து விடுவாள்.
ஒரு நாளும் அவள் சித்தி அனுமதி பெற்று அப்புத்தகங்களை எடுத்ததில்லை. அனுமதி மறுத்தால் தன்னால் வாசிக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமில்லை அதற்கு.

வாயிற் கதவு் ‘கிறீச்’சிட எண்ணங்களிலிருந்து மீண்டவளாய்த் திரும்ப..

பாட்டனார் முறுவலுடன் அவளருகில் வந்தார்.

நர்த்தனி

(மீதி வரும்... )

எழுதியவர் : நர்த்தனி (13-Mar-24, 1:52 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 25

மேலே