அந்திப் பந்தல் 2

அந்திப் பந்தல்-2
......................

சிறு மீன்கள் சிறுவால்களசைத்து புது உலகெனும் அவள் கையை வலம் வர அதன் கர்த்தாவாகிய மகிழ்வில் திளைத்து நின்றாள் அவள்.

மேலும் அவற்றின் உலகை வளப்படுத்த எண்ணி தன் சிறு தோணியெனும் உள்ளங்கை, சிறு விரிசல் கூடக் காணாதவாறு சிரத்தையோடு மெல்ல வாய்க்காலின் கரைக்கேறி தன் மணற் குவியலின் மேல் காத்திருந்த சிரட்டையின் எதிர்பார்ப்பை நிறைக்க அவற்றைப் பதமாய்க் கையிரண்டையும் சிறிது குவித்து சிறு நீரோடையென அம்மீன்களை சிரட்டையுள் நிலை மாறச் செய்தாள். வியப்பின் உச்சத்தில் வளைய வந்தன அவை...

பின் மீண்டும் வாய்க்காலினுள் இறங்கி சிறு புற்கள் சிலவற்றையும் மென்பாசி போலிருந்த இளம் பச்சை படரியையும் சிறிதாக கிள்ளி கரைக்கேறி அச்சிரட்டையில் மிதப்பிட்டாள், மீன்கள் தம் உலகின் புது வரவு கண்டு சற்று அச்சத்துடன் பின் நகர்ந்து ஒடுங்கிக் கொள்ள, செய்வதறியாமலே தன் விரல்களால் நீரினுள் ஒரு நீர்க் கோலமிட்டாள்.
கோலத்தின் வட்ட வளையங்கள் சிற்றலையெனத் தளும்ப...

மீன்கள் மிதக்கும் படரிகளில் மோதி இதங் கண்டு அவற்றுடன் ஒன்றின. அகம் மிக மகிழ்ந்து மென் சிரிப்பொன்றை அவளிதழ்கள் சொந்தமாக்கிக் கொண்டன.

சிறு மீன்களின் புது உலகை நிறைத்த பெருமிதம் அவள் முகத்தின் ஒளியைக் கூட்டிது. சிறிது நேரம் அவற்றின் களிப்பைப் கண்டு கண்ணிமைக்க மறந்து நின்றாள்.

எங்கிருந்தோ வந்த நாரை ஒன்றின் ஒலி அவள் கவனத்தை ஈர்க்க தலையைச் சற்று நிமிர்த்தினாள். அவளது அடர் சிகை சற்று பின் நகர...விண்ணோக்கிப் பார்வை நிலைத்தது. நாரைக் கூட்டமொன்று ஒலியெழுப்பிய தாயின் பின் அணியென மிதந்து கொண்டிருந்தன.

சடுதியாக...நுழைவாயிலின் மரக்கதவுச் ஒலி கேட்க பின் நோக்கி அவள் பார்வை விரைந்தது. அங்கு மாறப் புன்னகையுடன் அவள் பாட்டன் நின்று கொண்டிருந்தார்.

“அம்...ம்ப் ப்பா...!”

எனக் கூவியபடி தன் மகிழ்வில் பாகனாக்க அவரருகே தாவி ஓடினாள். அம் மீன்களும் பறவைகளும் அவள் குரல் கேட்டு தம் இலக்கை மறந்து உறைந்தன அக்’கீச்’ஒலியில்...

ஒரே எட்டில் அவரை நெருங்கித் தாவி அணைத்துக் கொண்டாள். வாரிக் கொண்டார் அவளை அவர்.

“உன்னக் காணாம தேடி வந்தன்...

என்ன செய்றாய் இங்க...”

என்ற படி அவள் கன்னம் வருடி தலை கோதி அவ் வாயிலின் நிலைப்படியில் அமர்ந்து கொண்டார்.

அவர் மடியெனும் சுவர்க்கத்தை அவள் தனதாக்கிக்
கொண்டாள்.

மேற்கு வானம் மென்மஞ்சள் நிறம் கவ்வத் தயாராகிக் கொண்டிருந்தது....!

நர்த்தனி

(மீதி வரும்...)

எழுதியவர் : நர்த்தனி (12-Mar-24, 9:18 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 39

மேலே