முன் அந்தி

முன் அந்தி-1
.................

வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் தென்றல் மெல்லியதாய் உடல் தழுவ, வீட்டின் முன்புற செடிகள் ‘சில்’லென்ற காற்றில் வண்ண மலர் காட்டி அசைந்து மெல்ல இசைபாடி புன்னகைத்த மகிழ்வில் அவற்றை வருடிய படியே முன் வாயிலை வந்தடைந்தாள் அவள். வெண்ணிறத்தில் பலவண்ண மலர் சொரிந்த கரை வேலைப்பாட்டுடனான ஓரு கையில்லாத சட்டை முழங்கால் வரை. அடர்ந்து நெளிந்த கேசம் தோள் புரள சிறு வண்டு வளைவுடனான சிகை கவ்வி(hair clip) அணிந்திருந்தாள் வலது புறம். புறச் சூழலை வியந்தபடி கனவை ஏந்தியிருந்தன அவள் கண்கள்.

அந்தி அவள் விரும்பும் அத்தனையையும் வாரி வழங்கும் கொடை வள்ளலாய் அவளுக்காகவே பல புதுமையின் பரிமாணங்களைக் காட்டி நிற்கும் எப்போதுமே! அன்றும் அப்படித் தான்...!

மூன்றே அடிகள் தட்டையான மரப்பலகைக் கோர்வையால் ஆன வாயில் திறந்தே கிடந்தது அவள் உலகை மேலும் விசாலப்படுத்த...

வந்தவள் எப்போதுமே செய்யும் ஒன்றை அன்றும் செய்தாள். வாயிலின் நிலையில் தலை சாய்த்து அதன் முன் நீண்ட மண் சாலையைக் கடந்து ‘சலசல’த்தோடும் ஆற்று நீரின் சங்கீதத்தில் சற்று நேரம் சிலையாகிப் பார்த்துக் கொண்டு நின்றாள். அந்நீரின் ஒட்டத்தின் சீரான அமைதியில் வாய்க்காலின் தெளிந்த வெண்மணல் பளிங்காய்க் கிடக்க இடையிடையே சிறு புற்கள் தலை காட்டின. அவற்றை தம் வாயினால் பற்றியபடி இசையின் லயத்துக்கேற்ப தம் சிறுவால்களசைத்து நடமிட்ட சிறு மீன் கூட்டம் கவனத்தை ஈர்த்தன. அவற்றை அள்ளிக் கொள்ளும் ஆவல் பிறந்தது அவளுக்கு. சுற்று முற்றும் பார்த்தாள். ஒரு தென்னஞ் சிரட்டை கண்ணில் பட்டது அதை எடுத்துக் கொண்டு வாய்க்காலின் அருகேயிருந்த கரை மேட்டுக்கு வந்தாள். சிரட்டையை அருகே வைத்து விட்டு அருகே ஒரு சிறுமண் குவியலை கைகளினால் குவித்து அச்சிரட்டையை அதன் மேல் வைத்து மெதுவாக அழுத்தினாள். சிரட்டை ‘சிக்’கெனப் பொருந்திக் கொண்டது மண்ணுடன்.

மெதுவாக வாய்க்காலினுள் இறங்கி சிறிது நேரம் அப்படியே நின்றாள். குளிர் நீர் அவள் மனந் தழுவியது! எங்கும் குளிர்ச்சி. வாய்க்காலை அண்டிய வயலின் பசும் நெல் நாற்றுகள் அவளைப் பார்த்து இனிதே தலையசைத்தன.

இதற்குள் மென் புல் உண்ணும் சிறு மீன்கள் சற்றுக் கலவரம் ஆகின “எது இது...!” இரு தூண்கள் தம் நீரின் தெளிவைக் கலக்குகின்றன என அவள் கால்கள் கண்டு.

அவற்றின் கலவரம் கண்டு அவள் சற்று பரிதாபம் கொண்டாள். அமைதியாக சிறிது நேரம் நின்று அவற்றைத் தேற்ற. மீன்கள் மீளவும் தன்னிலைக்குத் திரும்பின. அவள் குனிந்து அம் மீன்களைப் பார்த்தாள் அவற்றின் உள் வடம் வெள்ளிக் கோடாய் மின்ன பளிங்கு சிற்பங்கள் அசைவது போல் மின்னின. ஆசை மேலிட மேலும் குனிந்து இருகை ஒருசேர குவித்து ஓரு சிறு தோணி கையிலமைத்தாள். மெதுவாக தோணியை நீரில் அமிழ்த்தினாள். தோணி மீன்களை நோக்கி நகர்ந்தது. அவற்றுக்கு அருகே சென்றதும் அசையாது நின்றது. அவற்றின் அமைதி கெடுவதை அவள் விரும்பவில்லை. பின் சற்று முன்னேறி தன் தோணியை மெது மெதுவாக நீரின் மேல் நோக்கி நகர்த்திக் கொண்டே வந்தாள் . சரியாக அது மீன்களின் அடிப்பாகம் வந்தடைத்தும் மெதுவாக தோணியை நீரின் மேற் கொணர்ந்தாள் என்ன வியப்பு...!
அவள் கையெனும் தோணியுள் மூன்று சிறு மீன்கள் நீரோடு வாலசைத்து தம் புது உலகை வியந்து மென் வாய் திறந்து மூடின...!

நர்த்தனி

(தொடரும்)

எழுதியவர் : நர்த்தனி (11-Mar-24, 5:02 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : mun andhi
பார்வை : 47

மேலே