அந்திப் பந்தல் 4
அந்திப் பந்தல்-4
.......................
பழைய புத்தக அடுக்குகளை ஆராய்வதில் நாட்டமுடையவள் அவள். அன்றும் அப்படித்தான்.
பரண் மேலிருந்த பெட்டியொன்றை யாரோ வேறேதோ எடுக்க வந்து கீழிறக்கி, மீண்டும் மேலேற்ற மறந்து விட்டுப் போயிருந்தனர். அதன் கனமும் அதில் எழுதியிருந்த அடையாளமும் அது புத்தகப்பெட்டி தான் என சிறு உற்சாகத்தைத் தர அதைத் திறந்து பார்க்க ஆர்வம் மேலிட்டது.
அதன் தடித்த காகித அட்டையாலான மேற்பாகத்தை மெதுவாகப் பிரித்தாள். அட்டை உளுத்துப் போயிருந்தது திறக்கவும் சரசரவென மாபோல உதிர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது.
சின்ன சிலந்தி ஒன்று விருட்டென வெளிவந்து ஓடி மறைந்தது. சற்றுப் பயமாகவே இருந்தது அவளுக்கு. ஆனாலும் உள்ளே இருக்கும் புத்தகங்களைக் காணத் துடித்தது மனது.
ஒருவாறு மேற் பாகத்தைத் திறந்தாகிற்று. உள்ளே நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் கண்டதும் அவள் மனது துள்ளிக் குதித்தது. பயம் பறந்தோடிற்று, ஒவ்வொரு புத்தகமாகவெளியே எடுத்து அட்டைப்படம் பார்த்து அது தனக்குத் தோதாக இருக்குமா என்று ஆய்விலீடுபட்டாள். அவற்றில் அநேகமானவை அவள் சித்திமாருடையது. கணித சம்பந்தமானவை. சிலது கோயில் சம்பந்தப்பட்ட குறிப்பேடுகள். அப்படியே அவற்றை அருகில் அடுக்கி வைத்துவிட்டு மேலும் என்ன கிடைக்குமென பார்த்தவளுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அது கிடைத்தது!
பழுப்பு நிற அட்டையில் பச்சைவண்ணக் கிறுக்கலாலான ஓவியமுள்ள ஒரு புத்தகம். ஒரு மீனவன் இடையில் செருகிய வலையுடன் சிறு படகை கடுங் காற்றை எதிர்த்துச் செலுத்தியபடி கடலில் ( கடுங்காற்று அவன் முகம் சொன்ன குறிப்பிலிருந்து…)
அருகேயிருந்த கரையில் கவலையே உருவாக இடுப்பில் குழந்தையுடன் ஒரு பெண் அவனையே பார்த்த படி, அவளருகே ஒரு சிறுவன் அவள் சேலைத் தலைப்பைப் பிடித்த படி, அவள் பின்புலத்தில் ஒரு வீடு, வீடு எனக் குறிப்பிட முடியாது ஓலையால் வேயப்பட்ட ஒரு குடில். இது தான் அவள் பார்த்த அட்டைப்படம். அதைப் பார்ததுமே நிச்சயமாக இது கதைப் புத்தகம் தான் என்று உறுதிப்படுத்திக் கையிலெடுத்துக் கொண்டு வழமையாக தான் வாசிக்கத் தேரும் இடமான மல்லிகைப் பந்தலுக்கு நேரெதிரேயான யன்னலுக்குப் பக்கத்திலுள்ள மர இருக்கையில் அமர்ந்து, கால்களை இருக்கைக்குச் சமநிலையில் இருந்த யன்னல் கட்டில் (நிலையில்) நீட்டிக் கொண்டாள்.
கதையில் மூழ்கத் தொடங்கினாள். கதையின் நாயகன் காத்தமுத்து அன்றாட வாழ்வை அவலத்தின் மத்தியில் நடத்திக் கொண்டிருக்கும் ஒர் ஏழை மீனவன். கடலே அவன் வாழ்வின் ஆதாரம்.
தன் குடும்பத்தின் பசியாற்றும் சாமியாக அவன். சாமிகள் தம் கவலையை யாரிடம் சொல்லும்!
வரம் தருபவராக தன்னை நம்பும் சுற்றத்தாரிடம் சொல்லமுடியுமா...? அதுவே காத்தமுத்துவின் நிலையும்.
தொடர் காலநிலைச் சீற்றத்தினால் கடலேகவில்லை அவன். குடும்பத்தார் பசி தீர்க்கப் போராடிய அவன் உடலும் மனதும் தன் பசி மறந்து போயின. உதவுவார் யாருமில்லையென உணர்ந்த அவன் மனது, அன்று ‘
எதுவரினும் எதிர்கொள்வேன் யானொன’ களமிறங்கி விட்டது.
கடுங் காற்றை எதிர்கொண்டு தன் சிறு படகோடு கடலில் அவன் பயணிக்க கவலையோடு அதை தடுக்கவும் திரணியற்று தன்னிரு குழந்தைகளோடு அவள் நின்ற காட்சி அட்டைப் படம் போலவே எழுத்திலும்
இழுத்துச் சென்று நகர்த்தியது அவளை. தொடர்ந்து வாசிப்பில் முன்னேறிக் கொண்டிருந்தாள்.
கடலேகிய கணவனுக்காய் கணந்தோறும் காத்திருந்தாள் அவன் மனைவி. மின்னல் வெட்டினாலும் இடிமுழங்கினாலும் தேம்பியபடி கரையோரம் ஓடிவந்து கடலை வெறித்து் நின்றவளின் ஆழ்மன உணர்வுகள் அச்சிறுவயதிலே இவள் மனதை மிகப் பிசைந்து உருக வைத்தது.
நாட்கள் நகர்ந்து மூன்றாயின ஆனாலும் அவன் படகு வந்த பாடில்லை. எதிர்பார்த்துப் பார்த்து பசியால் வாடிய தன் குழந்தைகளையும் அணைத்தபடி காத்திருப்பில் கண்கள் பூத்து நின்றாளவள்.
வாசித்து வந்த இவள் திடுக்குற்று நின்றாள்! அதன் பின்னரான கதையின் பாகம் ஏதுமின்றி இருந்தது அப்புத்தகம்.
கடவுளே!
காத்தமுத்து மீண்டு வந்தானோ இல்லையோ பசியாலும் பிரிவாலும் வாடிய அவன் குடும்பம் என்னானதோ எனும் கேள்வி அவளைத் துளைத் தெடுக்கத் தொடங்கியது. தொலைந்து போன பக்கங்களை எங்கு தேடிப் பிடிப்பதென்று தெரியாமல் புத்தகப் பொட்டியின் அடிவரை இருந்த அனைத்துப் புத்தகத்தையும் வெளியே எடுத்து தூர்வாரியாகிவிட்டது. தொலைந்த பக்கங்கள் கிடைக்கவேயில்லை.
நாட்கள் கடந்தும் கடவாமல் கதை அவளுள் நங்கூரமிட்டு நின்று கொண்டது.
‘காத்தமுத்துவின் வரவுக்காக அவன் குடும்பத்தினருடன்
இவளும் காத்திருந்தாள்.
தாத்தன் தொழுவத்தில் மாட்டை கட்டிவிட்டு வந்த சுவடு தெரியாமல் வந்து நின்றபோது அவள் அன்றும் காத்தமுத்து கதையின் நினைவில் உறைந்து தான் நின்றாள்.
நர்த்தனி
பின் வரும்....