காத்திருப்பு

உற்றமும் சுற்றமும்
காத்திருக்கு வழியனுப்ப,
காலன் வந்தழைக்காம
பயணம் போவதெப்படி??

அறியாத பாதையில
அழைக்காம போவது
ஆதிகாலம் தொட்டு
பண்பாடு இல்லையே....

நித்தம் நித்தம்
கண் விழித்தால்
காத்திருக்கும் கூட்டம்
கிசு கிசுங்கும்....

தெளிவாத்தான் இருக்கா
இன்னும் எத்தனை
நாள்? காத்திருக்கு
காடுகரை எல்லாம்....

பயணப் பட்டுநாங்
காத்திரு ந்தாலும்
எருமை மீதேறி
காலன் வராமல்.....

கடைசி மூச்சை
நிறுத்துவ தெப்படி?
ஊர்வாய் பேசும்
ஓர்ஓரமா நின்று,

பேத்தியவிட்டு பால்
ஊத்திச் சொல்லு
ஆன்மா அடங்கிடும்
ஆசையை விட்டு....

தலைச்சன் புள்ளை
இன்னும் வந்துசேரல
அதான்தாய் உசுரு
காத்துக் கெடக்கு....

கங்கை தண்ணிய
காத்திருக்கும் ஆத்தாவுக்கு
அள்ளி ஊத்தச்சொல்லு
அசுங்காம போவும்.....

மவராசி பெற்றெடுத்த
அத்தனையும் சுத்திநின்னு
பார்க்கையில் இன்னும்
என்ன வேனுமாம்?

மனசாட்சியை வி(ற்று)ட்டு
வந்தக்கூட்டம் ஓயாமல்
பேசிப்பேசி சிரிக்கும்,
நாளை நமக்கு...???

பாரமா யாருக்கும்
இருக்காம, பாராமுகம்
காட்டும் முன்னே
போகத்தான் ஆசை.....

காலன் வந்தழைக்காம
காலமெல்லாம் பட்ட
கடனத் தீர்க்காம
பாதகத்தி போவதெப்படி???

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (19-Mar-24, 7:57 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kaathiruppu
பார்வை : 43

சிறந்த கவிதைகள்

மேலே