கருவறை தொலைந்தது
சுமந்த கருவறை
கனன்றது நெருப்பில்
காக்கவியலாது கனன்று
நின்றேன் நிற்கதியாக.....
நிலவைக் காட்டிப்பசி
யாற்றிய தில்லையவள்,
காத்திருந்த தில்லை
நானும் அதுவரை.....
பசித்துப் புசித்த
தில்லை நானிதுவரை,
பசியறியாது பார்த்துக்
கொண்டாள் என்தாய்.....
தந்தையின் முகமது
நினைவில் இல்லை,
நினைவுற அவளெனை
விட்டதும் இல்லை.....
படிக்காத மேதையவள்
எங்களை படிக்க
வைத்த மேதையும்
அதே தெய்வம்தான் ......
தூணாக துணைநின்று
காத்த தெய்வமவள்
தெரியாமல் இழைத்தாலும்
தவறு தவறுதானெனும்
நீதி தேவதையவள்......
தனக்காக அவள்வாழ
பார்த்ததில்லை நான்,
நாங்கள் வாழ்ந்திட
தன்னையே இழந்த
மெழுகுவர்த்தி அவள்....
அவளின்றி நாங்கள்
இல்லை, ஆயினும்
அவள் இன்றியும்
இழைகிறதே! என்னுள்
மூச்சு....
ஓஓஓஓ...
தாயும் சேயும்
ஆனாலும்
வாயும் வயிறும்
வேறுதானே.....
சகாப்தம் ஒன்று
முடிந்தது, கூடிநின்ற
போதே காலன்
கடத்தி விட்டான்,
கள்வன் அவன்....
களவாடி விட்டான்
கருவறை யையென்,
ஜென்ம ஜென்மத்திலும்
காணவியலாது காந்துமே
மனம்.....
துடிப்பு அடங்க
மறுக்கிறது என்னுள்,
சாய்ந்தது "எங்கள்தூண்"
இடியாது காத்துவிடு
மண்டபத்தை மட்டும்....
சுமந்த கருவறை
கனன்றது நெருப்பில்
காக்கவியலாது கனன்று
நின்றேன் நிற்கதியாக.....
தொலைந்த தினம்:
26/02/2024
கவிபாரதீ ✍️