தீபாவளி ஜிகர்தண்டா 1

ஒரு அபார்ட்மெண்டில் அறிவிப்பு பலகையில்:
5. 30 AM டு 6 AM கம்பிமத்தாப்பு, புஷ்வாணம்
6 30 AM டு 7 AM எலக்ட்ரிக் சரம், குருவி வெடி
8 AM டு 9 AM லட்சுமி வெடி, விஷ்ணுவெடி,
9 AM டு 10 AM சிவன் வெடி, காளி வெடி
10 AM டு 11 AM ஆட்டம்பாம்
11 AM டு 4 PM சைலென்ஸ் வெடி
(யாராவது இந்த நேரத்தில் அபார்ட்மெண்ட் வளாகத்தில் வெடி விட்டால், அவர்களை வெடி வைத்து தூக்கிவிடுவோம்)

4 PM டு 5 PM ஆட்டம்பாம் தவிர இதர வெடிகள்
5 PM டு 9 PM வெடியில்லாத பட்டாசுக்கள், புஷ்வணம், சங்கு சக்கரம், கம்பிமத்தாப்பு, ராக்கெட், போன்றவை. ராக்கெட் மேலே சென்று வெடித்தால் நோ ப்ரோப்ளேம். ஒரு வேளை கீழேயே ராக்கெட் சீறிச்சென்று வெடித்தால், அப்படி வெடிக்கும் ஒவ்வொரு வெடிக்கும் வெடிப்பாளர் 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.

மு. கு (முன் குறிப்பு)
இரவு ஒன்பது மணிக்குமேல் பத்து மணிக்குள், எந்த ஒரு பட்டாசும் வெடிக்கக்கூடாது, கொளுத்தவும் கூடாது. பத்து வயதுவரை உள்ள சிறுவர்கள் மட்டும் கம்பிமத்தாப்பும் கலர் மச்சேசும் கொளுத்தலாம். இதை மீறும் சிறுவர்களுக்கு ரோந்தில் இருக்கும் வாட்ச்மேன் அவர் வைத்திருக்கும் தடியால் நாலு அடி கொடுப்பார். அதன் பிறகு அப்படி அடிக்கப்பட்ட சிறுவர்களின் அம்மாவோ அப்பாவோ எங்ககிட்ட வந்து ' இது என்ன அநியாயம், நைட் வாட்ச்மேனை விட்டு என் புள்ளயோட உடம்பை புளந்துட்டீங்களே ' என்று அலறுவதில் உபயோகம் இல்லை.

பி கு (பின் குறிப்பு): ஒரு வேளை அலறிதான் தீருவேன் என்பவர்கள் தீபாவளிக்கு அடுத்த நாள் வளாகத்தின் தியான மண்டபத்திற்கு வந்து, காலை பத்து மணிமுதல் பதினோரு மணிவரை அலறலாம். அலறும்போது தாகம் எடுத்தால் மண்டபத்தில் உள்ள மினரல் வாட்டர் இரண்டு கிளாஸ் வரை பருகலாம். ஒரு வேளை மூன்று அல்லது நான்கு கிளாஸ் ஒருவர் குடித்துவிட்டால், அவருக்கு மாலை 4 மணிமுதல் 4 30 வரை நீச்சல் குளத்தருகே கிளாஸ் (பாடம்) எடுக்கப்படும்.
“தீபாவளியில் திண்டாடி, சாரி, கொண்டாடி மகிழுங்கள்”
இப்படிக்கு
நிர்வாகம்
வலம்புரி அபார்ட்மெண்ட்ஸ் நலன்புரி சங்கம்
லேட் பி. கு: பட்டாசுக்கு தம்பிடி பைசாகூட செலவு செய்யாமல் ஐந்தாவது மாடியின் மேல் உள்ள மொட்டை மாடியில் நின்றுகொண்டு அல்லது உட்கார்ந்துகொண்டு அல்லது படுத்துக்கொண்டு, அரைமணிக்குமேலாக ஓசியில் பிறர் பட்டாசு விடுவதை பார்ப்பவர், நூறு ரூபாய் பணத்தை அல்லது அதற்கு சமமான இனிப்புகளை நலன்புரி சங்கத்திற்கு தரவேண்டும். ஒருவேளை அப்படி ஓசியில் அரைமணிக்குமேலாக பார்த்துவிட்டு ஒன்றும் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் நபர் இல்லத்தில் ஏஸீ அகற்றப்படும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Mar-24, 4:25 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 54

மேலே