உடல்நல கேள்வி பதில் நேரம்

கேள்வி கேட்பவர்: 'உங்கள் உடல்நலம்" டிவி நிலையத்தின் சார்பாக திரு. ‘ஏழறிவு ஏகாம்பரம்’ (ஏ ஏ)
பதில்தருபவர்: மறதிநல மருத்துவர் திரு. மப்பு மணவாளன் (மம)

ஏஏ: உடம்பு நல்ல இருக்கணும்னா என்ன பண்ணனும்?
மம: உடம்ப நல்லா வச்சுக்கணும்.
***
ஏஏ: நூறு வயசு வாழணும்னா என்ன பண்ணனும்?
மம: நூறாவது பிறந்தநாளை கொண்டாடவேண்டும்
***
ஏஏ: சிலர் முப்பத்துல போய்டுறாங்க, சிலர் நாப்பத்துல அபேஸ் ஆயிடறாங்க, வேறு சிலர் அம்பதுல அம்போன்னு புட்டுக்குறாங்க, கொஞ்சம் கேஸுங்கதான் அறுவதை தாண்டி வாழுதுங்க, அது ஏனுங்க?
மம: ஏன், இருபத்தி அஞ்சிலே சிலர் உயிரை விடுறாங்க, முப்பத்தஞ்சு வயசுல சிலருங்க செத்து போறாங்க, நாப்பத்தஞ்சுல இறக்கிறாங்க, அம்பத்தி அஞ்சுல சிலர் பரலோகம் போய்டுறாங்க. அதுபோலத்தான் நீங்க சொன்ன பேரெல்லாம் மண்டைய போடுறாங்க.
***
ஏஏ: எப்படிப்பட்ட உணவை சாப்பிட்டா அதிக நாட்கள் நல்ல உடல் நலத்துடன் அதிக நாள் வாழலாம்?
மம: சமைக்காத காய்கறிகள், ரசாயனம் போடாத பழங்கள், உப்பு இல்லாத சாதம், காரம் இல்லாத ஊறுகாய், இனிப்பு இல்லாத கேசரி, புளிப்பு இல்லாத தக்காளி, துவர்ப்பு இல்லாத நெல்லிக்காய், பால் இல்லாத காபி, நெய் இல்லாத மைசூர்பாகு, கோதுமை கலக்காத ரொட்டி, மைதா இல்லாத பிஸ்கேட் இதையெல்லாம் சாப்பிட்டா எப்படியும் எழுவது வயசை கிராஸ் பண்ணலாம். அதுகுப்பதிலாக, வேகவச்ச சாதம், நல்ல உப்பு காரம் மசாலா போட்டு குழம்பு, ரசம், பொரியல், அப்பளாம், துவையல், புளிக்காத கெட்டி தயிர், தூக்கலாக நேயைவிட்டு கேசரி, மைசூர்பாகு, பால்ல போட்ட பில்டர் காபி, வறுத்த சிப்ஸ், மசாலா தோசை, பூரி மசாலா இதை சாப்பிட்டுவிட்டு அறுபத்திஅஞ்சு வயசுல டிக்கெட் வாங்கிக்கினு போய்விடுவது ரொம்ப நல்லது.
***
ஏஏ: ஆயுர்வேத சூரணத்தில் தேன் கலந்து சாப்பிடுவது குறித்து தங்கள் கருத்து என்ன?
மம: அதெல்லாம் வேலைக்கு ஆகாது. கொட்டையில்லாத இருபது பலா சுளைகள், ஒரு டஜன் மலை வாழைப்பழம் (தோல் இல்லாமல்) இதை கால் லிட்டர் மலைத்தேனுடன் கலந்து சாப்பிட்டால், ஆஹா, எவ்வளவு ஜோராக இருக்கும்.
***
ஏஏ: காலைல எழுந்து நடப்பது நல்லதா அல்லது ஜாகிங் செய்வது நல்லதா?
மம: இரண்டுமே தேவை இல்லாதது. காலை எழுந்தவுடன் முடிந்தால் பல் விளக்கணும். அதுக்குப்பிறகு சூடான பில்டர் காபி அருந்தனும். பிறகு நடக்கலாமா அல்லது ஓடலாமா என்று ஆலோசனை செய்து, இரண்டுமே முடியாத காரியம் என்ற ஒரு நல்ல முடிவை எடுத்து, ஒரே இடத்தில இருந்து மூச்சை கவனிக்கலாம்.
ஏஏ: யார் மூச்சை?
மம: யார் பக்கத்துல இருக்காங்களோ அவங்க மூச்சை கவனிங்க, அதனுடன் அவங்க பேச்சையும் கவனியுங்க. அப்படி செய்யும்போது அவர் உங்க மூச்சை கவனிப்பார், கூடவே உங்க பேச்சையும் கேப்பார்.
ஏஏ: இப்படி செய்வதனால் இருவருக்கும் ஒரு லாபமும் இல்லையே?
மம: வாழ்க்கை என்பது ஒரு பிசினஸ் இல்லை. அப்புறம் எதுக்கு லாபம் நஷ்டம் இதை பத்தி பேசுறீங்க?
***
ஏஏ: வாரத்தில் ஒருநாள் பட்டினி இருப்பதால் விளையும் நன்மைகள் யாவை?
மம: செலவு கம்மியாகும். வீட்டில் உள்ளவங்களுக்கு சமைக்கிற வேலை இருக்காது. காபிக்கும் தேநீருக்கும் அதிகம் செலவு ஆகும். பட்டினி இருக்கிற நாளில் பதினெட்டு மணிநேரம் டிவி அலறிக்கொண்டிருக்கும். பக்கத்துக்கு வீட்டுல பொழுது போகாமல் யாரவது இருந்தால் அவங்களுக்கு நல்லா பொழுது போகும்.
***
ஏஏ: உங்கள் வெளிநாட்டு பயணங்கள் குறித்து?
மம: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆஸ்திரேலியாவில் ஆஸ்த்மா வந்து அவதி பட்டேன். பல்கெரியாவில் பல் இரண்டை பிடுங்கிக்கொண்டேன். உகாண்டாவில் உணவின்றி அவதி பட்டேன். எத்தியோப்பியாவில் எத்தையோ பார்த்து ஏமாந்தேன்.
தாய்லாந்தில் தாய்நாட்டு ஞாபகம் வந்து கவலை அடைந்தேன். ஜப்பானில் ஜபம் செய்தேன். மெக்சிகோவில் மிக்ஸியை ரிப்பேர் செய்துகொண்டேன். மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி எப்போதும்போல குழப்பத்துடன் இருக்கிறேன்.

ஏழறிவு ஏகாம்பரம்: தங்களின் பொன்னான நேரத்தை அளித்து பல அரிய ஆக்கபூர்வமான தகவல்களை தந்த சித்தசுவாதீன மருத்துவரான உங்களுக்கு, 'உங்கள் உடல் நலம்" டிவி நிலையத்தின் சார்பாக நன்றி.
மப்பு மணவாளன்: நான் உங்களுக்கு தந்தது பொன்னான நேரம் அல்ல, என் பொல்லாத நேரம். சூடு கொஞ்சம் கம்மியா இருந்தாலும், சர்க்கரையை சரியான அளவில் போட்டு காபி கொடுத்ததற்கு நன்றி.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Mar-24, 10:56 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 41

சிறந்த நகைச்சுவைகள்

மேலே