திருவிழா

திருவிழா

தேர்தல் வந்துவிட்டது
இனியெங்களுக்கு
ஆறுதல் சொல்லவும்
ஆட்கள் வந்துவிடுவார்கள்

வாருங்கள் அரசியல்வாதிகளே!
வாருங்கள்!
புழுக்கத்திலிருக்கும்
pகருப்புப் பணத்தை
புழக்கத்திற்கு கொண்டுவாருங்கள்

கங்கை-காவிரி
இணைப்புத்திட்டந்தானே தோல்வி
கவலையைவிடுங்கள்!
கட்சிகளின் கூட்டணி முயற்சித்தான்
வெற்றி பெற்றுவிட்டதே!

அரசியல்வாதிகளே!
வாக்குறுதிகளை
வாரிக்கொட்டுங்கள்
காதுகளின் சவ்வுகள்
கிழியும்வரைக் கேட்டுக்கொண்டேயிருக்கின்றோம்
இதுதான் எங்களுக்குக்கிடைத்த
இனிய சுதந்திரம்!

அரியாசனம் ஏறியதும்
நீங்கள் செய்யும்
அடாவடித்தனங்களைப்பார்க்கும்போது
ஒவ்வோர் சமயங்களில்
நாங்கள்
வெறிகொண்டு எழுந்தாலும்
எங்கள்
விரல் நகங்களைத்தானே கடிக்கமுடிகிறது!

ஒருவர் மீதொருவர்
ஊழல் சேற்றை
வாரி வீசிக்கொள்ளுங்கள்
இதையெல்லாம்
பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே
எங்களுக்கு கொடுக்கப்பட்ட
சனநாயக உரிமை

என்னதான் இருந்தாலும்
எங்கள் ஓட்டு
உங்களுக்கே
காரணம்
நாமெல்லாம் இந்தியரென்ற
`ஒருமை பாட்டுணர்வுதான்` என்று
கூறிக்கொண்டாலும்
வேறுவழியில்லையென்பதுதான்
சத்தியமான உண்மை

ஆயிரம் கட்சிக்கொடிகள்
கம்பத்தின் உச்சியில் பறந்தாலும்
அன்னக்கொடி மட்டுந்தான்
எப்போதும்
அரைக்கம்பத்திலேயே பறந்துகொண்டிருக்கிறது

சுவிஸ் வங்கியில்
கணக்கிலடங்கா பணம் கிடக்கும்
சுதந்திர பூமியில்
பட்டினிச் சாவுகள் தினம் நடக்கும்

அட்சயப்பாத்திரத்தை அடகுவைத்துவிட்டு
பிச்சையெடுப்பதிலேயே
பெருமிதம் கொள்பவர் நாங்கள்
அதனால்தான்
அந்நியர் தொழிலுக்கு
ஆதரவு அளிப்போம்-பின்னர்
அவரிடமே கையேந்தி நிற்போம்

வறுமை வெள்ளம்
கரைபுரண்டு ஓடுவதாலேயே
எங்கள் வாழ்க்கை
வறண்ட பாலையாகிவிட்டது

தேர்தல் வந்துவிட்டது
இனியெங்களுக்கு
ஆறுதல் சொல்லவும்
ஆட்கள் வந்துவிடுவார்கள்

அரசியல்வாதிகளே!
நீங்கள் எத்தனைப்பேர்
தேர்தலில் நின்றாலும்
அரசியல்வாதியாய்
அனைவருமே வென்றுவிடுகிறீர்

தொடர்ந்து
தோற்றுக்கொண்டேயிருப்பது மட்டும்
வாக்களித்த நாங்கள்தாம்!
-வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (9-Apr-24, 8:04 pm)
சேர்த்தது : vpasupathi rengan
Tanglish : thiruvizaa
பார்வை : 55

மேலே