குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம் - பாடல் 47
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-
தலைவன் பாங்கனைச் சார்தல்.
பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்
தலைவ னுற்ற துரைத்தல்.
கற்றறி பாங்கன் கழறல்.
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
பாங்கன் கிழவோற் பழித்தல்.
(இ-ள்) அங்ஙனங்கூறிய தலைவனைப் பாங்கன் நிந்தித்துக் கூறுதல்.
கட்டளைக் கலித்துறை
மாநாக நாணிற் குழைந்துள்ள மேரு வரைதிரும்பப்
பூநாக நாணிற் குழைந்ததன் றோபொரும் பேய்க்கு(த்)தெவ்வ
ரூனாக நல்குங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
கானாகத் தாழ்குழ லாட்கைய நீமனங் கட்டு(ண்)டதே! 47